குப்பை மேடு மக்களை குடியேற்றினார்கள்: குற்றம் சாட்டும் தவிசாளர்

breaking
பல வருடங்களிற்கு முன்னரே இருந்த குப்பை கிடங்கிற்கு அருகில் வந்து வீட்டை கட்டுவது என்பது சரியான விடயம் இல்லை என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம் தெரிவித்தார். பம்பை மடு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு சாளம்பைகுளம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றமை தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், குறித்த விடயம் பல்வேறு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டங்களிலும் பேசப்பட்டது. குறித்த குப்பை கிடங்கு அங்கு இருக்கும் போதே குறித்த மக்கள் குடியேற்றம் மேற்கொள்ளபட்டது. அது ஒரு தவறான விடயம். அத்துடன் பிரதேச சபையினுடைய கட்டட அனுமதி இதுவரை பெறப்படவில்லை. பல வருடங்களிற்கு முன்னரே இருந்த குப்பை கிடங்கிற்கு அருகில் வந்து வீட்டை கட்டுவது என்பது சரியான விடயம் இல்லை. அரசியல் பலமோ அல்லது அதிகார பலத்தை வைத்தே இங்கு குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். வவுனியாவில் சில பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல வருடங்கள் கழித்தும் காணி உறுதிகள் வழங்கப்படவில்லை. ஆனால் குறுகிய காலத்திற்குள் குடியேற்றப்பட்ட சாளம்பைகுளம் மக்களிற்கு காணி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குப்பை மேடு தொடர்பாக யாழ் பல்கலைகழகம் மற்றும் வவுனியா வளாகத்தின் சூழலியயாளர்கள், மாவட்ட செயலாளர் என பல மட்டங்களில் கலந்துரையாடி திட்டம் ஒன்றை தாயரிக்க வேண்டும் என பல தடவைகள் பேசப்பட்டது. இதற்கு 200 மில்லியன் ரூபாய் பணத்தை ஒதுக்கி தருவதாக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தெரிவித்திருக்கிறார். எனினும் இதுவரை காலமும் அவ்வாறான ஒரு நிதி வழங்கப்படவில்லை. குப்பை கொட்டும் இடத்தை மறிப்பது ஏற்றுகொள்ள முடியாத விடயம். ஏன் எனின் வவுனியாவை பொறுத்த வரை பொலிஸ் திணைக்களம், சிறைச்சாலை, வைத்தியசாலை, நகரம் உட்பட பல திணைக்களங்களின் கழிவுகள் அங்கு கொட்டப்படுகின்றது. இங்கு இருக்கும் 200 குடும்பங்கள் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்காது விடின் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மற்றும் திணைக்களங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் சட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். அனைவரும் கலந்துரையாடியே இதற்கான தீர்வினை பெறமுடியுமே தவிர போராட்டம் மூலம் அல்ல என்றார்.