“காவல்துறையாவதே - சுவிஸ் தரைப்படையில் பயிற்சி பெறும் எனது கனவு!” - மனுசா

breaking

13.01.2020 சுவிற்சர்லாந்தின் தரைப்படையில் பயிற்சி பெறத்தொடங்கிய மனுசா மக்களன்பன் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை இப்பயிற்சியைத் தொடர இருக்கின்றார். இவர் ஏற்கெனவே சுவிற்சர்லாந்தின் காவல்துறையில் எழுதுவினைஞராக மூன்றாண்டுகள் தொழிற்கல்வியை நிறைவு செய்தவர் ஆவார். அத்தொழிற்கல்வியை மேற்கொள்கின்ற போது, காவல்துறையின் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இவரும் பங்குபற்றியிருந்தார். “அந்த வேளையில் தான் காவல்துறையாக வர வேண்டும்” என விரும்பினார் மனுசா. தற்போது இவர் செய்து வரும் இந்த சுவிற்சர்லாந்தின் தரைப்படைப்பயிற்சி எதிர்காலத்தில் இவருடைய கனவை நிறைவேற்றுவதற்கான முதற்படியாகும்.

மனுசாவிடம் தரைப்படைப்பயிற்சி பற்றி கேட்டேன். “இப்பயிற்சியைப்பெறுவது வாழ்க்கைக்கான ஒரு கல்வியாகும். இரண்டு கிழமைகள் தரைப்படைப்பயிற்சியிலேயே ஒழுக்கம், விடாமல் போராடுதல் போன்று பலவற்றை நான் கற்றுள்ளேன். பெண்ணான எனக்கு இது ஓர் சவால் எனவே எண்ணுகின்றேன். ஒரு இலக்கை அடைவதற்கு- அதற்காகப் போராட வேண்டும்- என்று என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்வேன்.”

இதே நேரத்தில் சுவிற்சர்லாந்தில் பல ஈழத்தமிழர்கள் தரைப்படையில் இருக்கிறார்கள். குறிப்பிட்டுச்சொல்வதாக இருந்தால் சுவிற்சர்லாந்தின் தரைப்படையில் உயர்ந்த பதவியில் இருக்கும் துருபன் துச்சாதனன் சூரிச் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானமும் கற்று வருகின்றார். இவர் தான் தரைப்படையில் இருப்பது பற்றி ஊடகங்களுக்கு கருத்துக்கூறுகையில் “பன்முகப்பண்பாடுகளை அறியும் வேளையில் சுவிற்சர்லாந்தின் தரைப்படைச்சீருடையில் இருப்பதை விரும்புகின்றேன்!” - எனத் தெரிவித்துள்ளார்.

இதே வேளை மனுசா மக்களன்பன் காவல்துறையாக வர விரும்பி, தரைப்படையைப்பயிற்சியைப் பெற்று வருகின்றவர் - தமிழுலகில் தாய்மொழியையும், கலைத்துறையில் பரதநாட்டியத்திலும் ஈடுபட்டு வருபவர்- மிக மனவலிமையுடன் தரைப்படைப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார் எனது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி: நிதுர்ஷனா ரவீந்திரன்