மாவோயிஸ்டுகளை கல்லால் அடித்துத் தாக்கிய மக்கள்?

breaking
ஒடிசாவில் உள்ள கிராமத்தில் குடியரசு தின விழாவை கருப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு வற்புறுத்திய மாவோயிஸ்டுகளை கிராம மக்கள் கல்லால் அடித்துத் தாக்கியுள்ளனர். கிராம மக்களின் தாக்குதலில் ஒரு மாவோயிஸ்ட் உறுப்பினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த மாவோயிஸ்ட்டின் உடலைக் கைப்பற்றியதோடு, படுகாயமடைந்தவரை கைதுசெய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள ஜந்துராய் என்ற மலை கிராமத்திற்குள் நேற்று நள்ளிரவு இரண்டு மாவோயிஸ்டுகள் நுழைந்தனர். அங்கு வசித்து வந்த கிராம மக்களிடம் நீங்கள் குடியரசு தின விழாவைக் கொண்டாட வேண்டாம் எனவும் அதை கருப்பு நாளாக அனுஷ்டிக்குமாறும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால், மாவோயிஸ்டுகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கிராம மக்களை மிரட்டும் நோக்கில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் ஆத்திரடமைந்த கிராம மக்கள் தங்கள் உயிரை தற்காத்துக்கொள்ள கற்களை வீசியும், வில் அம்புகளை எய்தும் மாவோயிஸ்டுகள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு மாவோயிஸ்டுகள் பழிவாங்கலாம் என அஞ்சப்படுவதால் குறித்த கிராமம் முழுவதும் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.