வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புதுவை இரத்தினதுரை ஐயாவின் கவித்துளிகள்.!

breaking
முத்துக்குமரா! முகம் தெரியாப்போதினிலும் செத்துக்கிடக்கின்றாய் எமக்காக எனவறிந்து தேகம் பதறுகிறதே திருமகனே! உந்தனது ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில் அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள். உன் மேனியில் மூண்ட நெருப்பு உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார் நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன். சின்ன அக்கினிக்குஞ்சே! உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய் அந்தச்சோதிப்பெருவெளிச்சம் எமக்குச்சக்தி தரும் வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும். உன் இறுதி மூச்சு புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும். எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது. தம்பி! வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன். நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல எமக்குப்பலம் நல்கும் சக்திக்குமார் இங்கிருந்து உன் முகத்தைக்காண்கிறேன். உன் குரலைக் கேட்கிறேன். உன் மூச்சை உள் வாங்குகிறேன். இடையில் கடல்கடந்தும் வருகின்றது உன் சிரிப்பின் ஓசை. எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்? கடலிலே அனுப்பி வையுங்கள் அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ, ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க, கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச. மகனே! நெருப்பெரியும் தேசத்தை எண்ணி நெருப்பில் எரிந்தவனே ! உன்நெஞ்சின் உணர்வுகளை வாங்கி இங்கே உயிர்கள் பிறக்கும் உன் இறுதி மூச்சை உள்வாங்கி உயிர்கள் சுவாசிக்கும் நாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர் உயிர் அரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது ஆயினும் பகைக்கு பணிவிடை செய்யோம் என்றபடி நிமிர்ந்துள்ளோம் நாங்கள். முத்துக்குமார், நீ செத்துக்கிடக்கின்றாயாமே எமக்காக யாராவது அவனின் புனித உடலை எமக்கு பொதிசெய்து அனுப்பமாட்டீர்களா? இந்த வீரமண்ணில் விதைப்பதற்காக அந்த வித்துடல் வேர் பிடித்து புதிய தலைமுறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக. தம்பி! வார்த்தை ஏதும் வரவில்லையே உன்னை வனப்புச்செய்து வாசலில் வைப்பதற்காக தமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகிறது உன் கடைசிக்கடிதத்தின் பொருள் உணர்ந்து நெஞ்சுருகி உன்னைப்பாடுகின்றது தமிழீழத்தமிழ். நண்பனே! முகம் தெரியாத எம்முத்துக்குமார் உன்னை நெஞ்சில் வைத்து சத்தியம் செய்கின்றோம். நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது விண் தொட எழும் – அந்த வெளிச்சத்தில் நாங்கள் ஒளி பெறுவோம். என் பிரிய உறவே! சென்று வருக திரும்பி வராவிட்டாலும் நன்றியென்ற ஓருணர்வை நாம் சுமந்து நிற்கின்றோம். பிரிய தோழனே உனக்கு தமிழீழத்தின் வீரவணக்கம் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா