உளப்பலத்தால் உழைத்தவன் கரும்புலி மேஜர் குமுதன்.

breaking
அந்த நிகழ்வுகளில் இருந்து குமுதனின் நினைவுகளை பிரிக்க முடியாததாய் இருந்தது. இப்போதெல்லாம் அவனது சுவாசம் அந்த நினைவுகளைத் தழுவியதாகவே வந்து போனது. அதே நினைவுகள் தான் குமுதனின் கண்களையும் நெஞ்சையும் நினைத்துக் கொண்டிருந்தன. வெட்டையும் திட்டுத்திட்டாக வளர்ந்திருக்கும் சிறு பற்றைகளும் நிறைந்து பரந்து விரிந்த அந்தப் பிரதேசத்தின் நெஞ்சைக் கிழிப்பதைப்போல் கிளிநொச்சி நகரினை நோக்கி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது. பெரிய இராணுவ நகர்வை எதிர்த்து நேருக்குநேர் சமரிட்டுக் கொண்டிருந்த எமது தாக்குதல் அணியின் ஒரு பிளட்டூன் அணித்தலைவனாக குமுதனும் நின்று சமதிட்டுக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அங்குல நிலத்தையும் இராணுவ பாதங்கள் மிதிக்கின்றபோதும் அவனிற்குள்ளேயே எரிந்த ஆவேச நெருப்பால் கண்ணிலும் குரலிலும் இடையிடையே பொறி பறந்தது. இதே தாக்குதல் அணியுடன் சற்று நாட்களுக்கு முன் அலம்பில் பகுதியில் தரையிறங்கிய சிறப்புப்படையினரை எதிர்த்துச் சண்டையிட்டு இராணுவம் நினைத்து வந்த இலக்கை எட்டவிடாது தடுத்ததில் பங்கெடுத்தவன் குமுதன். தாக்குதல் அணியின் பிளட்டூன் உதவி அணித்தலைவராக நின்றாலும் சண்டை உக்கிரம் அடைந்து சென்றபோது ஒரு பகுதி முழுவதற்குமான கட்டளைகளை அவனே வழங்க வேண்டியிருந்தது. அதிகப்பேர் விழுப்புண்பட்டு வீரச்சாவடைந்து போனமையாலும் அணியின் ஆட்தொகையில் பெரும் சரிவு ஏற்பட்டிருந்தது. இந்த இறுக்கம் நிறைந்த சூழலிலும் இருக்கும் உறுப்பினர்களை ஒழுங்குபடுத்தி எதிரி முன்னேறாதவாறு மறிப்புப் போட்டு விட்டு காயக்காரரையும் வீரந்நாவடைந்தோரையும் பின்னுக்கு அனுப்பினான். இதுவரைக்கும் தன் தோள்பட்டையில் பாய்ந்திருக்கும் குண்டைப் பற்றியோ அல்லது அவனின் மேல்சட்டையையும் மீறிப் பாய்கின்ற குருதியைப் பற்றியோ கவனிக்கவில்லை. அவனது சிந்தனையும் செயல்களும் இராணுவத்தின் நோக்கத்தை எப்படியும் முறியடித்துவிட வேண்டுமே என்று துடித்துக்கொண்டிருந்தன. அதுபோன்றதொரு துடிப்பு நெஞ்சில் கனன்று கொண்டிருக்கவே சத்ஜய எதிர்ச்சமர்க்களத்திலும் அவன் சுழன்று கொண்டிருந்தான். “அண்ணை எங்களிற்குக் கிட்டவா டாங்கி வந்திட்டுது” குமுதனுக்குப் பக்கவாட்டாக இருந்த காவலரணில் இருந்தவன் நிலமையை குமுதனிற்குத் தெரியப்படுத்தினான். மரஞ்செடிகளைப் போல உருமாற்றம் செய்து நகர்ந்துகொண்டிருந்த கவசவாகனங்கள் சிறுபற்றைகளை நெரித்து பெரிய புகைமண்டலங்களை உருவாக்கியபடி காவலரணிற்கு மிக அண்மையாக வந்து நின்றது. “அங்காலப் பக்கத்தால் டாங்கிகள் வந்து முட்டிட்டானாம். நீங்கள் அங்க போய் அதை மறியுங்கோ கவனம் மறைப்பெடுத்துப்போங்கோ.” குமுதன் சொல்லி முடிக்கின்ற போது அவனது கட்டளைக்காகவே காத்திருந்த இரண்டு டாங்கி எதிர்ப்பு வீரர்களின் கண்களிலும் வேகம் பிறப்பெடுத்தது. சண்டை எல்லா இடங்களிலும் பெரும் முழக்கமிட்டு தொடர்ந்து கொண்டிருந்தது. இரண்டு கவச எதிர்ப்புப் போராளிகளும் அந்த டாங்கிகளை தடுத்து நிறுத்துவதற்காக போராடிக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் எதிரியின் சூட்டுவலுவினால் அந்தப் பிரதேசம் முழுவதும் வலைகளாக ரவைகள் பொழியப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வலைப்பின்னலிற்குள்ளேயே இரண்டு கவச எதிர்ப்புப் போராளிகளும் சிக்கிக்கொண்டனர். குமுதன் இறுதியாகப் பார்த்து விடைகொடுத்தனுப்பிய இரண்டு இளைய வீரர்களுமே வித்துடல்களைக்கூட பார்க்கமுடியாதளவு உடல் சிதைந்துபோய் இருந்தார்கள். அந்த நிகழ்வைக் கண்ட பின்னர் குமுதனது கண்கள் அதையே சொந்தமாகக் கொண்டன. கண்களால் கண்டு பதிந்து கொண்ட அந்த நிகழ்வுகளை எண்ணுகின்ற போதெல்லாம் நெஞ்சு பெரிதாக வலிக்கிறது. மற்றவனின் துன்பத்தைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாத அவனிற்கு அவனது நெஞ்சில் ஆழமாகப் பதிந்த நிகழ்வுகள் ஆறாத தழும்புகளாய் இருந்தன. அந்தப் பெருஞ்சமர் ஓய்ந்த போதும் குமுதனின் மனம் ஓயவில்லை. தனியொரு நெஞ்சிற்குள் மட்டும் எத்தனையோ சமர் அரங்குகள் திறக்கப்பட்டன. முடிவிலாது குமுறிக்கொண்டிருந்த குமுதனின் கண்களில் புதியதான வடிவம் ஒன்றின் வாசல் முளைவிட்டது. குமுதன் தனக்குள்ளேயே எரிந்துகொண்டிருக்கும் பெரிய இலட்சிய நெருப்போடுதான் “கரும்புலிகள்” அணியிற்குள் தன்னை இணைத்துக் கொண்டான். அங்கு அவனை எதிர்கொள்ளவிருந்த சவால்களோ ஏராளம். “இனியென்னன்று குமுதன் அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கப்போகிறான். சாதாரண மனித வலுவுடையவர்களே செய்ய சிரமப்படும் அந்தக் கரும்புலிகள் அணிப்பயிற்சியை குமுதன் செய்து முடிப்பானா?” ஆச்சரியத்தால் உயர்ந்த புருவங்களை உயர வைத்தபடியே அதிசயிக்க வைத்தான். ஒரு போராளி தன்னைக் கரும்புலி அணியில் சேர்த்துக் கொள்ளப்போகிறான் என்றால் அவனைப் பற்றிய அடிப்படையான சில தகுதிகளைப் பரிசோதிப்பதுண்டு. அதுபோலவே குமுதனும் தன்னைக் கரும்புலிகள் அணியில் சேர்த்துக்கொண்டபோது அவனைப்பற்றிய தகுதிகளும் பார்க்கப்பட்டது. ஒரு போராளி கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டுமாயின் அவர் இரண்டு வருடங்கள் இயக்கம் வழங்கிய பணிகளைச் சரிவரச் செய்து முடித்திருக்க வேண்டும். குமுதனைப் பொறுத்தவரை ஐந்து வருடங்களுக்கு மேலாக இயக்கம் வழங்கிய கடமைகளை இயக்கம் எதிர்பார்த்தது போல செய்து முடித்தவன். எனவே அதில் அவனிற்குத் தடையிருக்கவில்லை. குறிக்கப்பட்ட நேரத்திற்குள் குறித்த வில பயிற்சிகளை செய்துமுடிக்கும் உடற்தகுதி பெற்றவரா என்ற கேள்விக்கும் அவன் இதுவரை பெற்ற பயிற்சிகள் விடைபகர்ந்தன. குமுதன் இயக்கத்திற்கு வந்ததிலிருந்து எந்தப்பயிற்சியிலும் விட்டுக் கொடுத்ததில்லை. எப்படியான பயிற்சி என்றாலும் செய்து முடிக்கக்கூடியவன். இதுவரை 50 கலிபர் பயிற்சி, சிறப்பு அதிரடிப் படைப் பயிற்சி போன்றன பெற்றிருக்கிறான். எனவே அதிலும் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் அடுத்து வந்த மருத்துவ பரிசோதனைதான் நிறையப்போரிற்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. இதுவரையும் தனக்குள்ளேயே மறைத்து வைத்திருந்த நோய் அப்போதுதான் வெளித்தெரிய வந்தது. ஆனால் இதுவரை எந்த சந்தர்ப்பத்திலும் அவன் தன் நோயினை வெளிக்காட்டியதே இல்லை. குமுதனிற்குள் இருக்கும் இதய நோயையும் தொய்வு நோயையும் மருத்துவ பரிசோதனை மூலம் அறிந்துகொண்ட போது, அவனைக் கரும்புலிகள் அணியில் சேர்த்துக்கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.   குமுதனோ விடுகிறபாடில்லை. ஒரேபிடியாகத் தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டினான். “அண்ணை தேர்வுப் பயிற்சி வரைக்கும் எண்டாலும் விடுங்கோ, நான் அதில என்னால முடியுமென்று நிரூபிச்சுக் காட்டுறன்” என்று கெஞ்சலான குரலில் உறுதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் அவனது இலட்சிய தாகம் முழுவதையும் தனது குரலிலே பரவவிட்டான். அவனின் உறுதி குலையாத தன்மை வீணாகவில்லை. தேர்வுப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதில் குமுதனும் ஒருவனாக இருந்தான். தேர்வுப் பயிற்சி நிறைவுறும் போது அனைத்துப் பயிற்சிகளிலும் சித்தி பெற்று தனது இலட்சியத்திற்கு நோய் இடையூறு இல்லை என நிரூபித்தான். இப்படித் தேசத்திற்காக தான் வரித்துக் கொண்ட கொள்கையில் உறுதியான குமுதன் தான் இப்போ ஆனையிறவுப் பெருந்தளத்தினுள் நுழைந்த கரும்புலிகள் அணியிற்கு தலைமைதாங்கி இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தான். இன்னும் சில விநாடிகளைக் காலம் வேகமாக விழுங்கிக்கொள்ளுமாயின் அங்கே இருளாய், அமைதியாய் நிலைத்திருக்கும் சூழ்நிலை மாறி புதிய சமர்க்களம் உருவாகும். அந்த ஓரிரு கண நேரத்திற்காகவே காலமும், கரும்புலியணி வீரர்களின் கால்களும் முன்னோக்கி வேகமாக நிதானமுடன் நகர்ந்து கொண்டிருந்தன. நினைவுகள் மட்டும் பின்னோக்கி விரையத் தொடங்கின. கரும்புலிகள் பயிற்சி முடிய தாண்டிக்குளம் சண்டைக்குச் சென்று, அங்கு விழுப்புண் பட்டமையால் தாக்குதலில் பங்குபெறாது பின்னிற்கு வந்ததும் பின் விழுப்புண் குணமடைய மணவாளன்பட்டமுறிப்புச் சண்டையிற்குச் சென்றது என்று எல்லா நிகழ்விலும் நினைவுகள் தடம் பதிக்கத் தொடங்கியது. அதிலும் மணவாளன்பட்டமுறிப்புத் தாக்குதல் வந்ததும் நினைவுகள் அதைவிட்டு நகரவேயில்லை. எதிரி கைப்பற்றி வைத்திருக்கும் இராணுவ பிரதேசத்துக்குள் தான் அவர்களிற்கான இலக்கு. அதுவும் அதியுயர் பாதுகாப்பு வலயம் எனக் கருதி அங்கேயே அந்த உலங்கு வானூர்தி தரையிறங்கி ஏறியது. அந்த உலங்குவானூர்தியைத் தாக்கி அழிப்பதே தாக்குதல் அணியின் நோக்கமாகவிருந்தது. கொமாண்டோப் பாணியில் சென்று இலக்கைத் தாக்குவது – அது சாத்தியப்படாவிட்டால் கரும்புலித்தாக்குதல் மூலமாவது அந்த இலக்கை அழித்து விட வேண்டும் என்பதற்காகவே கரும்புலிவீரர்கள் அந்தத் தாக்குதலுக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள். அதுவோ மிகவும் வித்தியாசமான இலக்கு. முன்திட்டமிடலோ மாதிரிப் பயிற்சியோ இல்லாது இலக்கைச் சென்றடைந்து அதைப்பார்த்து அங்கு நிலவும் களச்சூழலுக்கேற்ப அணித்தலைவரே முடிவெடுத்துச் செயற்பட வேண்டும். அதனால் அந்தக் கரும்புலிகள் அணியிற்கு குமுதனே தலைமை தாங்கிச் சென்றிருந்தான். தலைவரிற்கு குமுதனின் வழிநடத்தலில் அதிக நம்பிக்கையிருந்தது. ஏனென்றால் குமுதன் மெய்ப்பாதுகாப்புப் பணியேற்று தலைவருடன் நெருங்கி நின்ற நாட்களில் எல்லாம் அவனது ஒவ்வொரு அசைவையும் தலைவர் நேரே கவனித்தார். அப்போது அவனிற்குள் இருக்கும் வழி நடத்தும் ஆற்றலை தலைவர் நன்கு அறிந்திருந்தார். எனவேதான் இத்தாக்குதல் அணியை அவன் தலைமையிலேயே அனுப்பிவைத்தார். இலக்கினை நோக்கி கரும்புலிகள் அணி நகர ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்குள் எல்லாம் வானம் பிரிந்து விட்டதைப்போல் மழை வாரிப் பொழிந்து கொண்டிருந்தது. உடையோடு சேர்ந்து நனைந்து போயிருக்கும் உடலுக்குள்ளால் ஊசிபோல உள்நுழையும் குளிர் உடலின் ஒவ்வொரு கலத்தையும் நடுங்க வைத்தது. தரையில் சாய்ந்து கொள்ளவோ, இருக்கவோ முடியாது. ஒரே சேறும் தண்ணீரும் நிறைந்திருந்தன. பேணிகளிலும் பைகளிலும் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர வேறொரு சூடான உணவுவகைகளும் இல்லை. இவ்வாறு சிக்கல் நிறைந்த சூழலில்தான் குமுதனிற்குள் மறைந்திருந்த அந்த நோய் வெளியே வரத் தொடங்கியது. குமுதனால் ஒரு மூச்சைக்கூட சிரமம் இன்றி விடமுடியவில்லை. ஒவ்வொரு மூச்சையும் உள் இழுத்து வெளிவிடுவதற்கு ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. குந்தியிருந்தான். குனிந்து நின்றான். கைகளை தலைக்கு மேல் உயர்த்தினான். இப்படி ஒவ்வொரு மூச்சுக்கும் சிரமப்பட்டாலும் தனக்கு இந்த நேரம் வந்த நோய் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று பெரும் சிரமத்தின் மத்தியிலும் அதைத் தனக்குள்ளேயே மறைக்க முயன்றான். இந்த நேரத்தில் தன்னைப் பற்றியோ தனது வருத்தத்தைப் பற்றியோ சிந்திப்பவனாக இல்லை. அவனது நெஞ்சிற்குள் கதைத்ததெல்லாம் அந்த இலக்கை எப்படியும் அழித்துவிட வேண்டும் என்பதே. இத்தனை சிரமங்களையும் பொருட்படுத்தாது இலக்கை அழித்துவிட வேண்டும் என்பதை மட்டுமே சுமந்து அந்த இலக்கை அழித்துவிட்டு வரும்வரையும் தனது நோயினைப்பற்றி யாருடனும் கதைக்கவேயில்லை. பின் மெல்ல மெல்ல கதை தெரியவந்தபோது அவனது உறுதியும் தாயகப்பற்றும் பளிச்சென்று வெளித்தெரிந்தது. ஆனையிறவு தளத்திற்குள் தாக்குதல் ஆரம்பிக்கும் நேரம்வரை காத்திருந்த கரும்புலிகளை அதற்கான நேரம் அண்மிக்கக் குமுதனின் கட்டளையோடு தாக்குதல் ஆரம்பமானது. இடியும் மின்னலும் தரையில் இருந்து பிறப்பெடுப்பதைப்போல சத்தமும் தீச்சுவாலைகளும் மண்ணில் எல்லா முனைகளிலும் இருந்தும் எழுந்தது. அமைதியும் இருளும் கருக்கலைய ஆனையிறவுப் படைத்தளத்தின் மையத்தளம் புதிய சமரரங்கமாய் கருவுற்றிருந்தது. கண்ணிற்குத் தெரியும் கறுப்பு உருவங்கள் எல்லாம் தங்கள் எதிரிகள் என்று இருட்டில் எல்லா இடங்களிலும் இராணுவம் சுட்டுக்கொண்டிருந்தது. தாக்குதல் ஆரம்பித்த சில கணங்களுக்குள் கரும்புலிகள் அணி அவர்களிற்கு வழங்கப்பட்ட இலக்குகளை அழித்துவிட்டு திட்டத்தின்படி பின்வாங்கிக்கொண்டிருந்தார்கள். இந்த வேளையில்தான் குமுதன் விழுப்புண் அடைகிறான். அவன் விழுப்புண் அடைந்தாலும் நிதானத்தை இன்னும் இழந்துவிடவில்லை. களநிலைமைகளுக்கு ஏற்றதுபோல் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான். இப்போதெல்லாம் குமுதன் இன்னும் ஒரு தோழனின் கைத்தாங்கலிலேயே பின்னிற்கு நகர்ந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குமுதனைக் கைத்தாங்கலாகத் தூக்கி வந்த தோழனும் விழுப்புண் அடைந்துவிடுகிறான்.   குமுதனிற்கு தெரியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நினைவிழந்து விடப்போகிறேன் என்று. இறுதியாக் கழிகின்ற ஒவ்வொரு கணத்திலும் தனது சிறு அசைவைக்கூட தேசத்திற்கு பயனுள்ளதாகச் செய்துவிட வேண்டுமெனத் துடித்துக் கொண்டிருந்தான். இறுதியாக அவனை பிரிந்துவிடத்துடிக்கும் மூச்சுக்காற்றையும் நினைவுகளையும் தக்கவைத்தபடி அவனிற்கான ஒவ்வொரு பணியையும் செய்து முடித்தான். அணிகள் அனைத்தையும் பின்வாங்குவதற்கேற்ற ஒழுங்குகளைச் செய்துவிட்டு விழுப்புண் பட்டாலும் பின்னிற்கு குமுதனையும் தூக்கிச் செல்வதற்காக நின்ற தோழனைப்பார்த்து “மச்சான் இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சாஜ்சரை இழுக்கப்போறன்இ நீ கட்டாயம் வெளியில போய் இஞ்ச நடந்ததை சொல்ல வேண்டும். எத்தின இலக்கை அழிச்சனாங்கள்இ இன்னும் எத்தின இலக்கு இருக்குதெண்டு சொல்லு. அது இன்னொரு சண்டைக்கு உதவும்.” அடுத்த சில மணித்துளிகளில் தனது சாவைத் தானே தீர்மானிக்கப்போகும் அந்த வீரன் சொல்லிய சேதி இது. எப்படி அவனால் முடிந்தது. எதிரிகளின் இடைவிடாத தாக்குதலுக்கு மத்தியிலும் தன் களமாடிய தோழர்களை இழந்துவிட்ட நிலையிலும் ஏற்கனவே பலவீனமான அவனது உடல் விழுப்புண் அடைந்து வேதனையால் சோர்ந்து விட்ட போதும் எதைப்பற்றியுமே சிந்திக்காது அந்த இறுதிக்கணத்திலும் அனது அணியைப் பற்றியும், தனக்கு வழங்கப்பட்ட கட்டளைகளைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அவன்; இதுவரை காலமும் இயக்க வாழ்வில் ஒவ்வொரு மணித்துளியையும் எவ்வளவு பயனுடையதாக செலவு செய்திருப்பான் என்பதை எடுத்துக்காட்டியது. எவ்வளவு தூரம் எமது தாயகத்தில் பற்றுவைத்து உழைத்திருப்பான். குமுதன் கூறியனுப்பிய சேதிகளைச் சொல்லி விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே முகாமைவிட்டு பல சிரமங்களையும் பொருட்படுத்தாது வெளியேறிய தோழன் குமுதன் சொல்லிவிட்ட சேதிகளைச் சொன்ன போது குமுதன் காவியமாகிவிட்டான். அவன் சொல்லிவிட்ட சேதிகளே இன்னுமொரு தாக்குதலுக்கு பக்கபலமாக அமைந்துவிட்டது என்று எண்ணுகிறபோதெல்லாம் அந்த இளைய வீரனின் முகமே கண்ணுக்குள் தெரியும். அவன் என்றென்றைக்கும் வாழுகின்ற வரலாறு. வீரப் போரிற்கு குமுதன் தோள்கொடுத்த களங்கள்: கரும்புலியாகும் முன்:
  • ஆகாய கடல்வெளிப் பெருஞ்சமர்
  • மின்னல் இராணுவ நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதல்.
  • “ஓயாத அலைகள் 01” இல் அலம்பில் பகுதியில் தரையிறங்கிய விசேட அதிரடிப் படையினர் மீதான தாக்குதல்.
  • சத்ஜய 1, சத்ஜய 2 போன்ற இராணுவ நடவடிக்கைகளிற்கு எதிர் நடவடிக்கை.
கரும்புலியாகிய பின்:
  • தாண்டிக்குளம் இராணுவத்தளம் மீதான தாக்குதல்.
  • மணவாளன்பட்ட முறிப்பில் உலங்கு வானூர்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்.
இவர்பெற்ற சிறப்புப் பயிற்சிகள்:
  • 50 கலிபர் கனரக ஆயுதப் பயிற்சி
  • 203 பயிற்சி
  • மெய்ப்பாதுகாவலர் பயிற்சி
  • கரும்புலி அணிக்குரிய சிறப்புப் பயிற்சி.
- விடுதலைப்புலிகள் இதழ்