சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்களிற்கு எவ்வாறு மரண சான்றிதழ் வழங்க முடியும்: எதிர்ப்பு போராட்டம்

breaking
  சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்களுக்கு எவ்வாறு அரசாங்கம் மரண சான்றிதழ்களை வழங்க முடியும் என கேள்வியெழுப்பி சமவுரிமை இயக்கம் எதிர்ப்பு ஆர்பாட்டத்தை இன்று சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடத்தியது. இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் 50 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதுடன், சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் எனின் கொன்றவர்கள் யார்? மரண சான்றிதழ்களை கொடுத்து சகல காணாமலாக்கப்பட்டவர்களையும் மறைக்கும் அரசாங்க திட்டத்தை எதிர்க்கின்றோம் என்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கானதேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வணபிதா சக்திவேல் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி கோதாபயராஜபக்ஷ் பதவியேற்பின் போது தனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் தானே ஜனாதிபதி எனவும் , வடக்கிற்கும் தெற்கிற்கும் தானே ஜனாதிபதி என்றும் தெரிவித்திருந்தார். முழு நாட்டு மக்களுக்கும் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுடைய ஒருவர் இவ்வாறான கருத்தை ஒருபோதும் கூறமாட்டார். ஆயினும்,ஜனாதிபதி அவ்வாறான கருத்தினை தெரிவித்திருந்தார். அத்துடன்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழை வழங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அவ்வாறாயின் சிலர் இராணுவத்தினரிடத்தில் சரணடைந்தனர் , சிலர் கைது செய்யப்பட்டனர் இவ்வாறாக இருக்கும் போது அவர்களுக்கும் மரண சான்றிதழ் வழங்குது எந்த அளவிற்கு சாத்தியமாகும். முறையான விசாரணைகளின்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன்,சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இது தொடர்பான விசாரணைகள் நடத்த வேண்டியது அவசியமானதாகும் என அவர் தெரிவித்தார்.