இனப்படுகொலையாளியை ஒப்படைக்கும் சூடான் !

breaking
இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள சூடானின் முன்னாள் அதிபர் ஒமர் அல் பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி) ஒப்படைக்க சூடானின் ஆட்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். சூடானில் 2003 ஆம் ஆண்டு டார்பூரில் 300,000 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் ஒமர் அல் பஷீர் மீது இனப்டுகொலை மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட சூடானி முன்னாள் அதிபர் ஒமர் அல்பஷீர் உட்பட ஏனையவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள நெதர்லாந்து ஹெக்கில் முன்னிலையாக வேண்டும் கேட்கப்பட்டுள்ளது. சூடானின் அரசாங்கத்திற்கும் டார்பூர் பிராந்தியத்தைச் சேர்ந்த போராளிகள் குழுக்களுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தையில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னாள் அதிபர் பஷீர் மற்றும் ஏனைய மூன்று பேரையும் ஒப்படைப்போம் என சூடானின் அரசாங்கத்தின் பேச்சாளர் முகமது ஹசன் அல்-டேஷ் ஆபிரிக்காவில் இயங்கும் பிபிசி செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார். ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் பஷீர்   ஆதரவாளர்கள் இந்த முடிவை ஏற்றுக்கொள்வார்களா? என்று கேட்டதற்கு யாரும் நீதிக்கு மேல் இல்லை என்று தைஷி  பதிலளித்தார். சூடான் மக்கள் எங்களிடம் செய்யச் சொன்னதை நாங்கள் செய்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.