மாங்குள மனித எச்சங்கள்: முன்னெடுக்கப்படும் அகழ்வுப்பணிகள்

breaking
  முல்லைத்தீவு, மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் நிபுணர் மற்றும் பொலிஸார் முன்னிலையில் மிதிவெடி அகற்றும் பிரிவினரின் பங்களிப்புடன் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, மனித உடலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மாத்திரம் அகழ்வினை முன்னெடுக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் குறித்த நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக புனர்வாழ்வு வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலைக் கட்டடங்களை அமைப்பதற்காக காணியில் துப்பரவுப் பணிகள் இடம்பெற்று வந்தன. இதனிடையே, அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணியில் மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களினால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டதை அவதானித்த பணியாளர்கள் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, மாங்குளம் பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமாரின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில் அவரின் உத்தரவின் அடிப்படையில் அகழ்வுப்பணிகள் இடம்பெறுகின்றன.