ஊழியர் ஒருவருக்கு ஏற்பட்ட கொரோனாவால் 300 ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பியது வங்கி நிர்வாகம்

breaking
தமது வங்கியில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதால் குறிப்பிட்ட வங்கிக் கிளையில் வேலை செய்யும் 300 பேரையும் உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது வங்கி நிரவாகம். சிங்கப்பூரில் உள்ள டி.பி.எஸ். என்னும் ஒரு மிகப்பெரிய வங்கியிலேய இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூரில் ஏற்கனவே 47 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சீனா தவிர்த்து, அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. குறிப்பிட்ட டி.பி.எஸ். வங்கியின் ஊழியர் செவ்வாய்க்கிழமை பரிசோதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வேலை செய்த குறிப்பிட்ட தளத்தில் வேலை செய்யும் 300 பேரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்தே வேலை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர் என்று அந்த வங்கி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "சிக்கலான இத்தருணத்தில் குறிப்பிட்ட ஊழியருக்கும், அவரது குடும்பத்துக்கும் தேவையான எல்லா ஆதரவையும், வழிகாட்டுதலையும் வங்கி அளிக்கும்," என்றும் அந்த வங்கி தெரிவித்துள்ளது. யார் யார் அந்தக் குறிப்பிட்ட ஊழியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர் என்பது ஆராயப்படுகிறது. வீட்டுக்கு அனுப்பப்பட்ட எல்லா ஊழியர்களுக்கும், தெர்மாமீட்டர், முகக் கவசம், கிருமி நீக்கிகள் ஆகியவை உள்ளடங்கிய பராமரிப்பு உபகரணத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவ உதவிக்கான சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.