Take a fresh look at your lifestyle.

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டு அம்மான் கூறுகையில் ….

 

லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அம்மான் தெரிவித்துள்ளார்.

லெப். கேணல் பொற்கோ அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவில் கருத்து பகிர்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

“போராட்டத்தில் இணைவதற்கு முன்னர் கிறிஸ்தவ பாதிரியாருக்கான கற்கை நெறியில் பொற்கோ இணைந்திருந்தார். அநேகமாக அக்கற்கை நெறியின் நடுப்பகுதியை கடந்த நிலையில் சிங்கள அரசின் இனவெறி தாக்குதலும், 1983 ஆம் ஆண்டின் கொடூரமான இனக்கலவரமும் சேர்ந்து அவரை ஒரு தேசியப் போராளியாக மாற்றியிருந்தது.

இன்னும் சொல்வதானால் மக்கள் மீதான ஒரு அன்பு உணர்வினால் அவர் ஆன்மீகப் பணியில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். அந்தப்பயணத்தை விட, அதன் மூலமாக மக்களிற்கு செய்யும் சேவையை விட, தேசிய விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போர் மேலானது என்பதற்காக அவர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்திருந்தார்.

உண்மையிலேயே குருத்துவ நிலையிலிருந்து போராளியாக பயணமானது அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் சங்கடமான ஒன்றாகவே இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன். பின்னர் தன்னுடைய கடந்த காலங்கள் பற்றிய மனந்திறந்த உரையாடல்களின் போது இது பற்றி அவர் நிறையக் கூறியிருக்கிறார்.

பொற்கோ, சில நண்பர்களுடன் படகேறி இராமேஸ்வரம் பகுதியில் வந்திறங்கி இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்துக் கொண்டார். இந்திய இராணுவத்தின் நெருக்கடி காலத்தில் பொற்கோ, தமிழீழத்தில் தனது கடமையைச் செய்யத் தொடங்கினார். இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அவர் புலனாய்வுத்துறையில் தனது பணியை செய்தார்.

மக்களை நேசிக்கின்ற, மக்களுடன் பழகுகின்ற, மக்களை விரும்புகின்ற ஒருவராக அவர் புலனாய்வுப் பணியை செய்ததை இன்றும் என்னால் மறக்க முடியாது. மக்களிற்கு கஸ்டம் வரும்போது அவர்களுடன் இணைந்து நிற்கின்ற பண்பும், கடமை என்று வருகின்ற போது இறுக்கமாக நிற்கின்றதுமான பல்வேறு கலவையான சம்பவங்கள் இன்று அவரை பற்றி நினைக்கும் வேளையில் என்னுடைய மனதில் மேல் எழுகின்றது.

அவர் என்னை அந்த கிராமத்திற்கு அடிக்கடி கூட்டிச் செல்வார். அவருடைய சொந்த இடம் போல் சிறு பகுதிகளையும் நினைவில் வைத்திருந்து அவர் எனக்கு விளங்கப்படுத்தினார். அவர் சொன்னார் ‘இந்த கிராமம் பின்தங்கிய கிராமமாக உள்ளது. கல்வியிலும் சுகாதாரத்திலும் பின் தங்கிய கிராமமாக உள்ளது. குறிப்பாக அந்த கிராமத்தில் தொழுநோய் தொற்றியிருப்பது பற்றி மிகவும் கவலையாக’ அவர் என்னுடன் கதைத்திருக்கிறார்.

அந்த மக்களை அந்த நோயிலிருந்து விடுவிப்பதற்காக நீண்ட கால வேலைத்திட்டத்தை செய்ய வேண்டும் என என்னுடன் நீண்டநேரம் உரையாடினார். உண்மையில் அவர் சார்ந்த புலனாய்வுப் பணியுடன் சார்ந்ததாக இப்பணி இல்லாத போதும் மக்களின் மீதான நெருக்கம் அந்த மக்களின் விடுதலைக்கான தெரிவு என்பவை கொண்ட தன்னை உருவகித்து உணர்ந்து செயற்பட்டார்.

அதேபோல் ஒரு விடயத்தை நான் இங்கு கூறலாம். ஓரிடத்தில் ஒரு எதிரியுடன் தொடர்புடைய ஒரு மட்டத்தினரிடம் விளக்கம் கேட்க வேண்டியிருந்தது. அதற்காக பொற்கோ தன்கூட இருந்த போராளி ஒருவரை அனுப்பியிருந்தான். தவிர்க்க முடியாமல் விளக்கம் கோர வேண்டிய நிலையில் அந்த சம்பவம் அமைந்திருந்தது. அதனை தெளிவுபடுத்தியிருக்க வேண்டிய அந்தப்பிரமுகர் பெரிதுபடுத்தி அதனை மேல்மட்டங்களிற்கு எடுத்து சென்று தன்னை விளக்கம் கேட்டது தவறு தன்மீதான அவமானம் என்ற வகையில் அதனை ஒரு தோற்றம் மாற்றி அவர் ஒரு குழப்பத்தை விளைவித்திருந்தார்.

அந்த வேளையில், பொற்கோவிற்கு மேலாளராயிருந்த பொறுப்பாளர் குறித்த போராளியை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்குமாறு பணித்திருந்தார். உண்மையில் பொற்கோ, அந்த விடயத்தில் பொறுக்க முடியாதவராக இருந்தார். அவர் சமாளித்து செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால் தனக்கு மேற்பட்ட பொறுப்பாளர் இதனை செய்கிறாரே என்று இதனை போகட்டும் என்று பேசாமல் விட்டிருக்கலாம். அவர் அதனைச் செய்யவில்லை உடனடியாக அவர் அதனை ஒரு பெரிய பிரச்சனையாக ஆக்கினார். இது கடைசி வரைக்கும் செய்ய முடியாத ஒன்று. அந்த இளநிலை போராளி தன்னுடைய கடமையை செய்திருக்கிறான்.

நானே அந்த கடமைக்கு அவருக்கு அனுமதி வழங்கியிருந்தேன். ஆகையினால் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த மன்னிப்பு கேட்க முடியாது. அப்படியானால் கடமையை செய்வதற்காக எவருமே முன்வர மாட்டார்கள். நானும் கூட முன்வர மாட்டேன். இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று அவர் கூறுகிறார். உடனடியாக பிரச்சினையை என்னிடம் கூறினார். நான் விடயத்தை பரிசீலித்து உரிய பிரமுகருக்கு தெரிவித்து நீங்கள் பொறுப்பாளர்கள் போய் இது எங்கள் கடமை என விளக்கத்தை வழங்குங்கள். ஆனால் பொற்கோவின் பணிப்பின் பேரில் செயற்பட்ட இளநிலை போராளியோ பொற்கோவோ தவறேதும் இழைக்கவில்லை என்ற வகையில் கருத்து கூறியிருக்கிறேன். என்னை மிகவும் கவர்ந்தது அவருடைய மனதுக்குள்ளிருந்த உண்மை மீதான ஆக்குரோசம்” எனப் புகழ்ந்துரைத்தார் பொட்டம்மான்.

ச.பொட்டு அம்மான்

புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள் 

%d bloggers like this: