வங்காலைப் படுகொலை 17.02.1991

breaking
  வங்காலைப் படுகொலை – 17.02.1991 வங்காலைக் கிராமமானது, மன்னார் மாவட்டத்தின் நானட்டான் பிரதேசசெயலர் பிரிவில் வடக்குத் திசையாக கடற் கரையோரத்தில் அமைந்துள்ளது. 1990ம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார்த்தீவின் நுழைவாயிலிலுள்ள பாரிய சங்கிலிப் பாலமும் தொடருந்துப் பாலமும் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டுப் போக்குவரத்துச் செய்யமுடியாத நிலை உண்டாகியதன் காரணமாக தாழ்வுப்பாட்டுக் கடற்கரையிலிருந்து கடல் வழியாக கற்பிட்டியூடாகக் கொழும்புக்கு மக்கள் பிரயாணம் செய்தனர். இந்நிலையில் வங்காலையைச் சேர்ந்த மக்கள் இராணுவத்தின் கெடுபிடிகளினால் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். வீடுகளிலிருந்து வெளியேறாதவர்களை இராணுவத்தினர் பலவந்தமாக வெளியேற்றிவிட்டு வீடுகளிலுள்ள பெறுமதி வாய்ந்த பொருட்கள் அனைத்தையும் சூறையாடினார்கள். இந்த நிலமையில் வங்காலை மகாவித்தியாலய அதிபராகக் கடமையாற்றிய திரு.செபமாலை அவர்களும் ஜஸ்டின் லம்பேட் என்ற வங்காலையைச் சேர்ந்த ஆசிரியரும் இன்னும் சிலரும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காகக் கற்பிட்டி வழியாக கொழும்பு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு 16.02.1991 இல் படகில் தாழ்வுப்பாட்டுக்கு வந்து அன்றிரவு அங்கு தங்கியிருந்து மறுநாள் 17.02.1991 அன்று காலை பத்து மணிக்கு துவிச்சக்கர வண்டியில் வங்காலை வழியாக காத்தான்குளம் சென்றார்கள். இவர்கள் வங்காலைப் பாடசாலைச் சந்திக்கு வரும்போது இராணுவத்தினர் திரு.செபமாலை (அதிபர்), திரு.ஜஸ்டின் லம்பேட் (ஆசிரியர்), சூசையப்பு (ஆசிரியர்), நவரட்ணம் குருவிக்கந்தையா ஆகியோருடன் ஒரு சிறுவனையும் தடுத்து நிறுத்தி கயிற்றினால் கைகளையும் துணியினால் கண்களையும் கட்டிவிட்டு சூசையப்பு ஆசிரியரைக் கத்தியால் குத்தினார்கள். பின்னால் வந்தவர்கள் இந்த நிகழ்ச்சியை நேரிற் பார்த்துக்கொண்டு சென்று முருங்கன் பங்குத்தந்தையிடம் முறையிட்டனர். மறுநாளாகியும் கைது செய்யப்பட்டவர்கள் வீடு திரும்பாததினால் உறவினர்களும் பங்குத்தந்தையும் தள்ளாடி இராணுவமுகாமிற்குச் சென்று உத்தரவுபெற்று அவர்களைத் தேடுவதற்கு வங்களைக்கு வந்தபோது வங்காளை சந்தியிலிருந்து உள்ளே செல்லவிடாது இராணுவத்தினர் தடுத்தனர். அப்படியிருந்தும் உறவினர்களில் இருவர் மட்டும் சென்று, சந்திக்கு அருகிலிருந்த திரு. பூர்சியல் பீரிஸ் ஆசிரியரின் பூட்டியிருந்த வீடு திறந்திருந்ததைக் கண்டு அதனுள் சென்றபொழுது அந்த வீட்டு அறைகளெல்லாம் இரத்த வெள்ளமாகக் காணப்பட்டது. இரத்தத் தடயங்களின் வழியே சென்று பார்த்தபொழுது வீட்டின் பின்னாலிருந்த கிணற்றுக்குள் ஐந்து சடலங்களும் துண்டங்களாக்கப்பட்டுப் போடப்பட்டிருந்தது. எனினும் அப்போதைய சூழ்நிலையில் உடனடியாக சடலங்களை மீட்க முடியாதிருந்தது. 1993ம் ஆண்டு மக்கள் மீளக்குடியமர்ந்த போது பூர்சியன் ஆசிரியரின் வீட்டிற்குச் சென்று பார்த்த பொழுது கிணறு மட்டமாக்கப்பட்டிருந்தது. பூர்சியன் ஆசிரியரின் வீட்டுக் கிணற்றில் முன்னர் ஐந்து சடலங்கள் போடப்பட்டிருந்தன என்பதைக் காவற்றுறையினருக்குத் தெரியப்படுத்தி, அவர்களின் உதவியுடன் உயிரிழந்த ஐவரினதும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் ஐவரின் எலும்புக்கூடுகளும் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டன. இன்றுவரை இவை தொடர்பாக எந்த மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 17.02.1991 அன்று வங்காலைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்: 01. அந்தோனி கொபின்லெம்பேட் (வயது 36 – ஆசிரியர்) 02. அந்தோனிப்பிள்ளை செபமாலை (வயது 49 – பாடசாலை அதிபர்) 03. அப்புக்குட்டி கந்தையா (வயது 51 – கமம்) 04. செபமாலை அந்தோனி (வயது 30 – விவசாயம்) 05. சீமான் தற்குரூஸ் சூசையப்பு (வயது 43 – பாடசாலை உப அதிபர்) -தமிழினப் படுகொலைகள்  நூல்