சென்னை வண்ணாரப்பேட்டையில் 6-வது நாளாக நீடிக்கும் முஸ்லிம்கள் போராட்டம்

breaking
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகில் கடந்த 14-ந்தேதி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் ஒருகட்டத்தில் சாலைமறியலாக மாறியதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர்.
இதையடுத்து போலீசாரின் தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற வலியுறுத்தியும் வண்ணாரப்பேட்டை பகுதி முஸ்லிம்கள் 14-ந்தேதி இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
6-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களுக்கு அவ்வப்போது உணவு, குடிநீர், சர்பத், பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை போராட்டக்குழுவினர் வழங்கி வருகின்றனர். இதுதவிர நிதி திரட்டியும் தங்களது தேவைகளை சமாளிக்கிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் விதமாக போலீசார் சார்பில் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் போராட்டக்காரர்களை போலீசார் கண்காணிக்க இருக்கிறார்கள். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் போராட்டக்குழுவினர் பார்த்துக்கொள்கிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையநல்லூரில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவிலும்  ஏராளமான இஸ்லாமிய மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் இரண்டாவது நாளாக  இரவிலும்  இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பெரியகுளத்தில் உள்ள  பள்ளி வாசல்  முன்பாக இஸ்லாமிய மக்கள் ஏழாவது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.