இவ்வாண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 238 துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன – சஜித்.!

breaking
2020ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும், 238 துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்தோடு, இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த 7 ஆம் திகதி அரசாங்கத்தால் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு இணங்க, 2020ஆம் ஆண்டு ஆரம்பித்து முதல் 15 நாட்களில் மட்டும், 142 பெண் துஸ்பிரயோகங்கள், 42 பாலியல் குற்றச் சாட்டுக்கள், 54 சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக இலங்கை பொலிஸுக்கு முறைப்பாடுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெண்களை துஸ்பிரயோகம் செய்த 78 முறைப்பாடுகள், பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான 34 முறைப்பாடுகள் மட்டுமே இதுவரை விசாரணை செய்யப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டைப் பார்க்கும்போது, 2019ஆம் ஆண்டில் துஸ்பிரயோக சம்பவங்கள் 10 வீதத்திற்கும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் 27.6 வீதத்திற்கும் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், தற்போது 2020இல் விசாரணை நிறைவு செய்யப்பட்ட சம்பவங்களைப் பார்க்கும்போது அது அதிகரித்த நிலைமையே காணப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான விடயமாகும். நாடாளுமன்றுக்கு வழங்கப்பட்ட அறிக்கைக்கு இணங்கவே நான் இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளேன். அத்தோடு, 2020-02.07ஆம் திகதியில் மட்டும் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் 6 பதிவாகியுள்ளன. ஊடகங்களும் இதனை வெளிப்படுத்தியுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், இவ்வாறான சம்பவங்கள் 7 பதிவாகியுள்ளன. இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும் என நாம் இவ்வேளையில் வலியுறுத்த விரும்புகிறோம். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்துக்கொண்டிருந்தால், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் மீதான மக்களின் நம்பிக்கையும் முற்றாக இல்லாது போய்விடும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தேசிய வேலைத்திட்டமொன்றின் ஊடாக, இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த சம்பவங்கள் தற்போது அதிகரித்துக்கொண்டு வருவது அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடாகவே நாம் காண்கிறோம். ஏன், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன- இதனை கட்டுப்படுத்த எவ்வாறான செய்றபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கம் நாடாளுமன்றுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.