காலிழந்த 5 பிள்ளைகளின் பெண்ணின் குடிசையை பிடிங்கியெறிய காலக்கெடு விதித்த பிரதேசசபை

breaking
  கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் ஆனந்தபுரம் மேற்கு கிராமத்தில் வசிக்கும் கணவனால் கைவிடப்பட்ட யுத்தத்தில் ஒரு காலை இழந்த ஐந்து பிள்ளைகளின் தாய் தனது தற்காலிக வீட்டை பாதுகாக்குமாறு சமூகத்திடம் மன்றாட்டமாக கோரியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நான் கடந்த 1995 ஆம் ஆண்டு செல் தாக்குதலில் எனது ஒரு காலை இழந்துள்ளேன். தற்போது கணவனால் கைவிடப்பட்டு ஐந்து பிள்ளைகளுடன் வசிக்கின்றேன். எனது கடைசி மகளுக்கு 11 வயது. தற்போது கிளிநொச்சியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் எனது குடும்பத்தை எனது பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்ந்து வருகின்றேன். எனது வீடு கிளிநொச்சி மத்தியகல்லூரிக்கு முன் வீதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு அருகில் உள்ளது இங்கு கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் வசித்து வருகின்றேன். கடந்தவருடம் எனது தற்காலிக வீடு தீயினால் எரிந்து முற்றாக அழிந்தது. இதன் பின்னர் ஊரவர்களின் உதவியுடன் ஆறு தூண்கள் கொண்டு ஒரு தற்காலிக கொட்டில் ஒன்றை அமைத்து வசித்து வருகின்றேன். அதுவொரு தனியார் காணி. இந்த நிலையில் கரைச்சி பிரதேச சபை நான் இருக்கும் காணி பிரதேச சபையின் காணி என்று உண்மைக்குப்புறம்பான தகவலை குறிப்பிட்டு அந்தக் காணியில் நான் சட்டபுறம்பாக அனுமதியற்ற கட்டடத்தை அமைத்துள்ளதாகவும், அதனை 14 நாட்களுக்கு அகற்றுமாறும் தவறும் பட்சத்தில் அதனை இடித்தழிக்கப் போவதாகவும் அறிவித்தல் ஒன்றை எனது தற்காலிக வீட்டுச் சுவரில் ஒட்டியுள்ளனர். எனது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே எனது தற்காலிக வீட்டையும் எனது குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என அனைவரிடமும் மன்றாட்டடமாக கோரிகின்றேன். சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்ட மாடிகளையெல்லாம் விட்டுவிட்டு எனது தற்காலிக கொட்டில் வீட்டை இடித்தழிக்க ஏன் பிரதேச சபை இவ்வளவு அக்கறை செலுத்துகிறது எனத் தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.