கடற்கரும்புலி கப்டன் வனிதா.!

breaking
அன்பு…. கரும்புலிகள் உறுதிக் குத்தான் இரும்பை ஒத்தவர்கள். ஆனால், அவர்களின் மனங்களோ மிக மிக மென்மையான உணர்வுகளால் சேர்ந்து உருவாக்கிய அன்புக்கூடு அவர்களுக்கும் காதல் இருந்தது. இந்தத் தேசத்தின் மீதும், தலைவன் மீதும், மக்கள் மீதும், ஏன் இவை எல்லாவற்றோடும் கூடவே அம்மா அப்பா உடன்பிறப்புக்கள் என்ற சுற்றத்தின் மீதும் தான். அம்மா என்றால் அவளுக்கு உயிர். சிறு அகவை தொட்டே அம்மா எங்கு போனாலும் அம்மாவுக்குப் பின்னாலே ஒரு வாலாக அவள்… இரவில் படுப்பது என்றால் ஏன் வெளியில் செல்வது என்றால் எல்லாவற்றிற்கும் அவளுக்கு அம்மா வேண்டும் அம்மாவைப் பிரிந்து அவள் இருந்ததே இல்லை. ஆனால், காலத்தின் தேவையுணர்ந்து அம்மா மீது அன்பு கொண்ட அவள் போராடப் புறப்பட்ட போது அந்த ஊரே முதலில் நம்பவில்லைத்தானே. அவளா….?, எப்படி…? அம்மாவை விட்டுவிட்டு…? எல்லோரது கேள்விகளுக்கும் மாறாகவே அவளது விளக்கம் இருந்தது. தாயை நேசிப்பவனால்தான் தாய் நாட்டுக்காகப் போராட முடியும் நான் அம்மாவை நேசிப்பது உண்மையாக இருந்தால், இந்தத் தேசத்தையும் என்னால் நேசிக்க முடியும் என்று பெரும் தத்துவஞானி போல் கருத்துச் சொல்லுவாள். பயிற்சிகளில், சண்டைக் களங்களில் எல்லாவற்றிலுமே அவள் பெரும்புலி ஆனாலும் அம்மா என்ற சொல்லை உச்சரிக்காமல் அவள் படுக்கைக்குப் போனதே இல்லை. ஒரு முறை அவள் விடுமுறையில் போனபோது அம்மா அதிகம் பாவிக்கும் புடைவை ஒன்றை எடுத்து வந்து விட்டாள். அன்றிலிருந்து அவள் படுக்கையின் தலையணை அது தான். அதில் படுக்கும் போது அம்மாவோடு இருப்பது போன்ற சுகம் அவளுக்கு அவள் எங்கு போனாலும் அதை மட்டும் அவள் மறந்தும் விட்டு விடமாட்டாள். விடுதலையின் தேவைக்காக அவள் நகர்ந்த பயணங்கள் எல்லாவற்றிலும், கூடவே அவளுடன் அந்தப் புடைவையும் நகரும். அந்தப் பூ மனசுக்குள் இப்போது மக்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற துடிப்புத் துளிர்விட்டது. மக்களுக்காகத் தன்னைத் துறப்பது என்ற முடிவை அவள் எடுத்து விட்டாள்.ஆனால், தன் ஆசை அம்மா எப்போதும் தன் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காய் தனக்கு விருப்பமான அம்மாப் பாடல்களையெல்லாம் தனது குரலிலே பாடி ஒலிப்பதிவு செய்த ஒரு ஒலி நாடாவை அவள் அம்மாவுக்காக கொடுத்திருந்தாள். இப்படி அம்மா மீது அன்பு கொண்ட அவளால் எப்படிப்பகை அழித்து புதிய வரலாற்றைப் படைக்க முடிந்தது. அது தான் வள்ளுவர் சொன்ன “அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற குறட்பா கடற் கரும்புலி கப்டன் வனிதாவிற்குச் சாலப் பொருத்தமல்லவா? நினைவுப்பகிர்வு:- பிரமிளா. நீலக்கடலின் நெருப்புக்குழந்தைகளிலிருந்து………….!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”