ஏற்கெனவே அனுமதி பெற்ற ஐட்ரோகார்பன் ஆய்வுப்பணிகள் தொடருமா தமிழ்நாடு அரசு?

breaking
ஏற்கெனவே அனுமதி பெற்ற ஐட்ரோகார்பன் ஆய்வுப்பணிகள் தொடருமா? தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும் ! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரிக்கை
காவிரிப்பாசனமுள்ள தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களையும், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில ஒன்றியங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துச் சட்டமியற்றி இருப்பது வரவேற்கத்தக்க செயல்பாடு! 2017 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் புவனகிரி, சிதம்பரம் வட்டங்களையும், நாகை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களையும் இணைத்து இந்த நான்கு வட்டங்களையும் பெட்ரோலிய - கெமிக்கல் தொழிற்சாலைகள் முதலீட்டு மண்டலம் என்று தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சித் துறை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பையும் 22.02.2020 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சி துறை இரத்து செய்து அறிவித்திருப்பது பாராட்டக்கூடிய செயலாகும். அதேவேளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலச் சட்டத்தில் முதன்மை பிரிவு-4 இல் உட்பிரிவு -2 இல்(a) பிரிவில் “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர், வேளாண் சிறப்பு மண்டலத்தில் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை(இச் சட்டம்) பாதிக்காது” என்று கூறப்பட்டுள்ளது. 2018 - 2019ஆம் ஆண்டுகளில் ஆய்வுக்குழாய்கள் போட்டு ஐட்ரோகார்பன் எடுத்து சோதனைகள் செய்ய வேதாந்தா நிறுவனமும் ஓ.என்.ஜி.சி.யும் நடுவண் அரசிடம் உரிமம் பெற்றுள்ளன. இதற்காக டெல்டா மாவட்டங்கள் உட்பட்ட பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடி நிலங்கள் அடையாளமிடப்பட்டுள்ளன. 350க்கும் மேற்பட்ட ஆழ் குழாய்க் கிணறுகளுக்கான இடங்களும் குறிக்கப்பட்டுள்ளன. ஐட்ரோகார்பன் ஆய்வுக்கான வேலைகள் இனியும் தொடருமா என்ற மிகப்பெரிய வினா டெல்டா மாவட்டங்களின் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த ஐட்ரோகார்பன் ஆய்வுப்பணிகளுக்கும் தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை! இந்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டுள்ள ஐட்ரோகார்பன் ஆய்வுப்பணிகள் தொடருமா, தொடராதா என்பது பற்றித் தமிழ்நாடு அரசு விளக்க அறிக்கை வெளியிட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். -காவிரி உரிமை மீட்புக் குழு