தமிழீழ எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தன் அவர்கள் நேர்கானல் .!

breaking
ஓகஸ்டு 2001 எரிமலை இதழில் இடம்பெற்ற தமிழீழ எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களின் நேர்கானல்  அவர்களின்  மூன்றாம்  ஆண்டு நினைவு தினமான இன்று  தாரகம்  இணையத்தில் பதிவு செய்கின்றோம் .
இன்று தமிழீழத்தின் முதன்மைப் பாடகராக விளங்கும் உங்களின் இளமைக்காலம் பற்றியும் நீங்கள் இசைத்துறைக்கு வந்த உங்களது பின்னணி பற்றியும் கூறுங்கள்.
நான் என்னுடைய பன்னிரண்டு வயதில் கொழும்பிலுள்ள  யாழ்ப்பாணத்தார் கதிரேசன் கோவிலில் நினையாய்ப்  பிரகாரமான மேடையேறினேன். அங்கே தான் என்னுடைய  முதல் நிகழ்ச்சி நடந்தது. என்னுடைய இளமைக்காலம்
இசைத்துறைக்கு வருவதா அல்லது ஒரு வியாபாராத்தில்  ஈடுபடுவதா என்று பெரும் இழுபறி நிலையில் இருந்தது. பின்பு என்னை இசைத்துறையே ஈர்த்துவிட்டது.
நான் அப்பொழுதும் இப்பொழுதும் இசையையே  உயிராக நேசிக்கின்றேன்.
தொடர்ந்து பாடகனாய் வரும்வரை என்ன செய்தீர்கள்.
நான் இசையில் ஈடுபடுவதை,பாடிக்கொண்டு  திரிவதை என்னுடைய தந்தையார் விரும்பவில்லை. நிரந்தரமான ஒரு தொழிலை, வருவாயைப் பெற
வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. ஒரு நாள் கொழும்பில் ஓரிடத்தில் சிலரின் விருப்பத்திற்காகப்  பாடிக்கொண்டிருந்தேன்.இப்பொழுது எனக்கு பத்து வயது  இருக்கும்.என்னுடைய பாடலைக் கேட்டபடி அவ்விடத்திற்கு
ஒருவர் வந்தார்.பெரிய முறுக்கு மீசை,பெரிய தோற்றம் இன்னும் பாடும்படி கேட்டார்.நான் பாடினேன். அவருக்குப் பிடித்துவிட்டது. என்னுடைய விபரத்தைக்
கேட்டபின், நாளைக்கு வான் ஒன்று வரும் அதில்  ஏறி வா என்று சொல்லிவிட்டுப் போனார். அவர்தான்  இலங்கை வானொலியில் முகத்தார் என்ற பெயரில்
புகழ்பெற்ற யேசுரட்ணம். அவருடைய ஏற்பாட்டில்  சிறுவர் மலர்,வாலிபவட்டம், ஆகிய நிகழ்ச்சிகளிலெல்லாம் பங்கு பற்றினேன்.அப்போது என்னுடன் சிறிதார்
பிச்சையப்பாவும் அந்த நிகழ்ச்சிகளில் இணைந்திருக்கின்றார்.
இசைநிகழ்ச்சிகளில் மேடைப்பாடகராக  இருந்த நீங்கள் தாயக விடுதலைப் 
பாடகராக வந்த விதம் குறித்துச் சொல்லுங்கள்.
இந்திய இராணுவம் எமது மண்ணில்  இருந்த காலத்தில்  மாவீரர் நாளுக்காக கிளிநொச்சியில் பெரு கணேசன்  என்பவர் ஒரு பாடலை இயற்றியிருந்தார்.
அந்தப் பாடலை பின்பு புதுவை அண்ணா  “இந்த மண் எங்கள் சொந்த மண்”
என்ற ஒளிப்பதிவு நாடாவில் என்னைப் பாடவைத்தார். (அப்போதும் அதற்கு முன்பும் நான்   என்னுடைய பெயரில் இசைக்குழு ஒன்றை வைத்திருந்தேன்.)
தொடர்ந்து பாடிவருகின்றேன்.
ஒரு தேர்ந்த பாடகனுக்கு இசை  ஞானமும் சுருதி சுத்தமும் 
வேண்டும் என்பது மிகமுக்கியம். இந்த  இரண்டுமே தங்களிடம் இருப்பதை 
உங்களின் பாடல்களைக் கேட்கும்போது  உணர முடிகிறது. இதை எப்படி நீங்கள் 
வசப்படுத்திக் கொண்டீர்கள்..?
நான் ஒரு முருகபக்தன், எனக்கு இவைகளை  இறைவன் தந்ததாகவே நினைக்கிறேன்.
இன்று தமிழர் வாழுமிடமெல்லாம்  உங்கள் பாடல்களின் ஊடாக
அறிமுகமாகி இருக்கிறீர்கள். பல இசையமைப்பாளர்களின் இசையாள்கையில் 
பலவகையான பாடல்களையும் பாடியிருக்கிறீர்கள். இவ்வாறானபோதெல்லாம் பல அனுபவங்களும்  சுவாரசியமான சம்பவங்களும் நிகழ்ந்திருக்கும்.
அவை பற்றிக் கூறுங்கள்.
புதுவை அண்ணாவுடன் சேர்ந்து ஒளிப்பதிவு செய்வது  சுவாரசியமாய் இருக்கும்.பாடலின்போது நான் தமிழை ஒழுங்காக உச்சரிப்பதற்கே அவர்
தான் காரணம்.
தாயக எழுச்சிப் பாடல்களை  அன்று தொட்டு இன்றுவரையிலும் 
தொடர்ந்து ஒருபணியாக பாடி வருகிறீர்கள். இதைப் பாடல்கள் நேற்று இன்று என ஒரு வளர்ச்சிப்படியில் இருந்து வருகின்றன. இந்த வகையில் இனி உருவாகும் பாடல்கள்  எப்படி இருக்கவேண்டுமென விரும்புகிறீர்கள்.
தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்கவேண்டும். எங்களின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஆவணம். எனவே இசையும் சம்பவங்களை உணர்த்துவதாக இருக்கவேண்டும்.
உங்களுடன் இணைந்து பாடிய  பாடகர்களுடனான அனுபவங்களையும் 
நெகிழ்வுட்டும் நினைவுகளையும் பற்றிச் 
சொல்லுங்கள்.
போராளியாகவும் பாடகராகவும் இருந்து  மாவீரரான மேஜர் சிட்டுவை மறக்கமுடியாது. அவரை நினைக்கும் போதெல்லாம்
மனம் ஒருமுறை கனக்கும்.
நாடகத்துறையில் உங்களுக்கு  ஈடுபாடுண்டு.மக்கள் உங்கள் 
நாடகங்களும் நடிப்பும் மிகுந்த  வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
இந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்.
பாடசாலை நாட்களிலேயே நாடகங்களில்  நடித்திருக்கிறேன். சாம்ராட் அசோகன்
நாடகத்தில் கௌதம புத்தராக நடித்தேன்.பலரும்
பாராட்டிய நாடகமும் நடிப்பும் அது. அனுராதபுரம் வரையிலும் ஒரு போட்டியாக
அந்த நாடகம் சென்றது.இசைநாடகத்தில்தான் பின்னாளில் நடித்துவருகிறேன். என்னுடைய  ஆர்வத்தைப் புரிந்துகொள்ளாமல், எனது முயட்சிக்கு
ஒத்துழைக்கச் சிலர் மறுத்ததையும் இங்கே  குறிப்பிடவேண்டும் என்றாலும் பின்பு யாழ்ப்பாணத்தில்  அரியாலை நடிகமணி வைரமுத்து அவர்களுடன்
சந்திரமதியாக நடித்திருந்த செல்வராசா, அரியாலை ரத்தினம்
ஆகியோரும் என்னை இந்தத்துறையில் ஊக்கப்படுத்தி  வளர்த்தவர்கள். அவர்களுடன் ஹரிச்சந்திரா,  சத்தியவான் சாவித்திரி என்ற நாடகங்களில்
நடித்தேன்.
ஒரு விடுதலைப் பாடகன் என்ற வகையில்  மக்கள் முன்னிலையில் நீங்கள் பாடிச்செல்லும்போது  நீங்கள் பெறும் உணர்வும் அனுபவமும் எப்படியிருக்கிறது.
ஒரு முறை எங்களின் நிகழ்ச்சி தொடங்கமுன்பு  பெண்போராளி ஒருவர் உரையாற்றினார். பின்பு நாங்கள் பாடினோம். பாடும்போது நான் அழுதுவிட்டேன்.
எங்களின் மண்ணில் எத்தனையே அற்புதமான  நிகழ்வுகள் இந்தப் போராட்டத்தில் நடக்கின்றன. அதில் ஒன்றையே அந்தப் போராளி கூறியிருந்தார். அது எங்களின் உணர்ச்சியைப் பெருக்கி அழவைத்துவிட்டது. ஆனால், நிகழ்ச்சி முடிந்தபின் எம்மைத்தேடி வந்தவர்களில்  ஒருவர் நீங்கள் நல்ல பாடகர் மட்டுமல்ல நல்ல நடிகராகவும்  இருக்கிறீர்கள் என்றார் எம்மைப் புரிந்து கொள்ளாமல்.
மலர்கொண்டு வாழ்த்துவோரும் இருக்கின்றனர். கல்லால் அடிப்போரும் இருக்கின்றனர். எப்போதும்  விடுதலைப்  பாடல்களைப் பாடும்போது எம்முன் ஒரு
பெருமித உணர்வும் மகிழ்வும் தேசவிடுதலைக்கனவும்
பெருகியபடியே இருக்கும்.
பிரபல பாடகராக விளங்கும் நீங்கள்  மிக எளிமையாக போர்க்காலத்தில் 
சுமையைத் தாங்கியபடி வாழ்ந்து  வருகிறீர்கள்.
இதுபற்றிக் கூறுங்கள்.
இப்படி வாழ்வதில் நான் நிறைவடைகிறேன். இந்த மண்ணில் இந்தக் காலத்தில் வாழ்வதிலும்,  என்னாலான பணிகளை இந்தப் போராட்டத்திற்குச்
செய்வதிலும் மகிழ்வடைகிறேன்.
இதுவே போதும் எனக்கு.
நீங்கள் ஒரு மாவீரனதும் ஒரு  போராளியினதும் தந்தையாக 
இருக்கிறீர்கள். எழுச்சிப்பாடல்களைப் பாடும்போது இந்த உணர்வுகள் எப்படியெல்லாம்  பாதிக்கின்றது..? இந்தப் பாதிப்புக்கள் எப்படியெல்லாம் 
பாடல்களில் பிரதிபலிக்கின்றன…?
மாவீரர் துயிலும் இல்லத்திற்காகப்  பாடிய பாடலில் வரும் “மடியில் தவழ்ந்த
மகனே” என்ற வரியை உச்சரிக்கும்போது  நான் உண்மையிலேயே கரைந்துபோனேன்.
நீங்கள் தமிழீழ தேசியத் தலைவருடன் நேரடியாகப் பரிச்சயமுள்ளவர் என்ற ரீதியிலும் அவரிடம் பரிசுகளைப் பெற்றவர் என்ற வகையிலும் 
பல போராளிகளுடன் நெருங்கிப் பழகுபவர் என்பதாலும் இவர்களை பற்றியும்  இந்தப் போராட்டம் பற்றியும் இந்தப் போராட்டத்திற்குச் செய்யவேண்டிய பணிகள் பற்றியும் கூறுங்கள்.
தமிழினத்துக்கென்று இறைவனால் தரப்பட்ட தலைவரைப் புரிந்துகொண்டு அவருடன் இணைந்து  நாம் எல்லோருமாகப் போராடி வெற்றிபெறவேண்டும்.
தலைவரையும் போராளிகளையும் நான் கண்கண்ட  தெய்வங்களாகவே கருதுகிறேன்.
-ஓகஸ்டு 2001 எரிமலை இதழில் 
மீள் வெளியீடு வேர்கள்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"