ஊடுருவல்காரர்கள் பற்றி தகவல் அளித்தால் சன்மானம்

breaking
சட்ட விரோதமாக ஊடுருவியுள்ளவர்கள் பற்றிய தகவல் அளித்தால் சன்மானம் அளிக்கப்படும் என்று நவநிர்மாண் சேனா கட்சி பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.
இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.  குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே டெல்லியில் நடந்த மோதலில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையால் டெல்லியில் 38 பேர் பலியாகியுள்ளனர்.
டெல்லியில் ஒருவித அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், மராட்டியத்தில் நவநிர்மாண் சேனா கட்சி பெயரில் ஒட்டபப்ட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது.
அவுரங்கபாத் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில்,  வங்காளதேசம், பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள ஊடுருவல்காரர்கள் பற்றி தகவல் அளித்தால் ரூ.5 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.