மன்னாரிலும் இழுத்து மூடப்பட்ட இலங்கை வங்கி கிளை!

breaking
சுமார் 80 வருட கால வரலாற்றைக் கொண்ட இலங்கை வங்கியின் தற்போதைய பொது முகாமையாளரை அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியமையைக் கண்டித்தும், முறையற்ற வகையில் பொது முகாமையாளர் ஒருவரை நியமித்தமைக்கு எதிராகவும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (6) இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்து தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதற்கமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கியின் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டு கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் இலங்கை வங்கியின் மன்னார் கிளைக்குச் சென்ற வாடிக்கையாளர்கள் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.மேலும் தன்னியக்க இயந்திரம் மூலம் பணத்தை அனுப்ப மற்றும், பணத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் திடீர் என ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால் பாவனையாளர்கள் பல்வேறு சௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு, தமது வங்கி கணக்குகளை இடை நிறுத்தி வேறு ஒரு வங்கியில் கணக்கை ஆரம்பிக்கும் சூழ்நிலை ஏற்படும் என விசனம் தெரிவித்துள்ளனர். நேற்றையை தினம் வெள்ளிக்கிழமை நாட்டிலுள்ள 637 கிளைகளைச் சேர்ந்த 10,000 த்திற்கும் அதிகமான ஊழியர்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.