2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

breaking
சிவகங்கை மாவட்டம் கொந்தகை எனும் இடத்தில் நிலத்தின் அடியில் இருந்து முதுமக்கள் தாழி மற்றும் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு நேற்று கண்டெடுக்கப்பட்டது. திருப்புவனம் அருகே கீழடியில் நீதியம்மாள் என்பவரது நிலத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதில் 2 செங்கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அருகிலேயே மண்பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொந்தகையில் பழமையான ஈமக்காட்டில் அகழாய்வுப் பணி நடைபெற்றுவரும் நிலையில், ஒரு குழியில் 2 முதுமக்கள் தாழிகள், அடுத்த குழியில் 8 முதுமக்கள்தாழிகள், மூன்றாவது குழியில் 6 முதுமக்கள்தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஏராளமான மண்பானைகள், குடுவைகள், மணிகள், முதுமக்கள் தாழி மூடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொந்தகையில் 8 முதுமக்கள் தாழி இருந்த குழியில் மனித எலும்புக்கூடு ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது. தற்போது வலது, இடது கைகளின் எலும்புகள் மட்டும் தெரிவதாகவும், அதற்கு மேற்புறம் 2 சிறிய பானைகள் உள்ளதாகவும், அதை முழுமையாக தோண்டிய பிறகுதான் இறந்தவர்களை அமர்ந்த நிலையில் புதைத்தார்களா? அல்லது படுக்கைவசமாகப் புதைத்தார்களா? என்பது தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த எலும்புக்கூடு கிடைத்த நிலையில் அப்பகுதியை தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்துள்ளனர். கீழடியில் ஏற்கெனவே நடந்த 5 கட்ட அகழாய்வுகள் மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்துள்ள நிலையில், தற்போது வரலாற்று பூர்வமான மேலும் சில தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விரைவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலம் குறித்த எலும்புக் கூடுகள் மரபணு ஆய்வு செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.