தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்!

breaking
வடக்கு மற்றும் மேல் மாகாணம் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் தற்போது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இன்று மதியம் 12 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும். இதேவேளை வடக்கு மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் எந்த மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்களுக்கும் சிறு தேயிலை தோட்டம் மற்றும் ஏற்றுமதி பயிர் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவர்களது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊடக சேவைக்காகவும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. விமானப் பயணிகளுக்காக விமான நிலையங்களுக்கும் துறைமுக சேவைகளையும் பேணுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற காலப்பகுதியில் சுகாதாரத்துறையினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக மக்களும், விற்பனை நிலையங்களும் கடைபிடிக்க வேண்டும் என்று காவற்துறை பிரதி மா அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார். விசேட உத்தரவுகளுக்கு அமைய, நாடு முழுவதும் 600 வரையான வீதித்தடைகளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்தை தடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அபாயகர பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளிலும் அத்தியாவசிய மற்றும் அனுமதிக்கப்பட்ட சேவைகளுக்காக மாத்திரமே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர அனுமதிக்கப்படும். அதன்போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியை பொதுமக்கள் சந்தைக்கு அல்லது அங்காடிகளுக்கு சென்று திரும்ப மாத்திரமே பயன்படுத்த வேண்டும் எனவும், காவற்துறை பிரதி மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.இதேவேளை சில சந்தர்ப்பங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படக்கூடும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்களின் பாதுகாப்பின் பொருட்டே மேற்கொள்ளப்படுகிறது என்பதை மக்கள் புரிந்து, அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி நடந்துக் கொள்ள வேண்டும் எனவும் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டார். அதேவேளை, ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் கூட, இந்த நோய் அறிகுறிகள் உள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் செல்ல முடியாது.இதற்கிடையில், ஊரடங்கு சட்டம் கடந்தமுறை தளர்த்தப்பட்ட போது, அங்காடிகளுக்கு வெளியில் ஒழுக்கமாக சிலர் நடந்துக் கொண்டாலும், அங்காடிகளுக்குள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நடந்துக் கொள்ளாத நிலைமை அவதானிக்கப்பட்டது.எனவே மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை சரியாக பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.