பெண்தலமைத்துவ குடும்பங்களுக்கு டென்மார்க் தமிழ் மக்கள் உதவி

breaking

கொரோனா வைரசால் இன்று உலகமே மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில் தாயகத்திலும் அதனுடைய வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாத நிலையில் நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வேளையில் அன்றாடம் உழைத்து வருமானம் ஈட்டுவோரும், அரவணைப்பின்றி தனிமையில் வாழும் வயோதிபர்களும், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களில் உள்ள சிறு குழந்தைகளுக்கு பால்மா வாங்குவதற்கு கூட வசதி இல்லாதவர்களும், மற்றும் நோய்வாய்ப்பட்டு உள்ளவர்களும் என பலரும் இன்று ஒழுங்காக சாப்பிட வில்லை என்பதே நிதர்சனமான கசப்பான உண்மையாகும். இந்நிலையானது மேலும் மோசமாக கூடிய துயரமான நிலையே தற்போதும் காணப்பட்டு கொண்டிருக்கின்றது.

இத்தருணத்தில் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள வறுமைக்கு உட்பட்ட பிரதேசங்களை இனங்கண்டு அங்குள்ள மக்களின் பட்டினியை தவிப்பதற்காக டென்மார்க் தமிழ் மக்கள் அனுசரணையில் அரிசி, உருளைக்கிழங்கு, பால்மா, பருப்பு, தேயிலை, சீனி, சோயா மீட், பிஸ்கட் … போன்ற பல அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இவ் இக்கட்டான நிலையில் இச் சேவையை வழங்கிய டென்மார்க் வாழ் தமிழ் உறவுகளுக்கு தாயக மக்களின் சார்பாக தங்களின் கைகளை இறுகப் பற்றி நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் மேலும் உணவு, பால்மா தேவைப்பாடுள்ள மக்கள் வாழுகின்ற பல கிராமங்கள் காணப்படுகின்றது. எனவே அங்குள்ளவர்களினதும் உணவுத் தேவையை கருதிக்கொண்டு “சிறு துளி பெரு வெள்ளம்” எனும் அடிப்படையில் தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முன்வருமாறு அன்புள்ளம் கொண்ட உறவுகள் அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். மேலும் இவ் உலர் உணவுப் பொருட்கள் யாவும் பெண்தலமைத்துவ சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கும், பராமரிப்பின்றி இருக்கும் முதியவர்களுக்கும், அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தும் குடும்பங்களுக்கும், மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடும்பங்களுக்கும் என அவர்களின் உண்மைத்தன்மை அறிந்து வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழங்கும் அவசர உணவு பொதிகள் ஒரு குடும்பத்துக்கு 3000 ரூபா பெறுமதியானது.

விபரம் வருமாறு

01.முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சுமார் 25 குடும்பங்களுக்கு 65000 பெறுமதியிலும்

02. முல்லைத்தீவு விசுவமடு றெட்பானா 3 கிராம சேவையாளர் பிரிவில் 15 குடும்பங்களுக்கு சுமார் 40000 பெறுமதியான பொருட்களும்

03.அம்பாறை காஞ்சுரங்குடா கிராமத்தில் 40 குடும்பங்களுக்கு 100000-/ பெறுமதியான பொருட்களும்

04. கிளிநொச்சி தர்மபுரம் உசிலம்பட்டி கிராம குடும்பங்களுக்கு பால்மா மற்றும் சிறுஉதவிகளுக்காக 30000 வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமாக வழங்கிய பெறுமதி – 235000/=