மனிதப் பேரவலத்தில் இருந்து மக்களை காக்க முன்வாருங்கள் -பரிபாலன சபைகளுக்கு வேண்டுகோள்-

breaking

Yகொரோனா வைரஸ் காரணமாக வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இலட்சக்கணக்கான குடும்பங்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியிருக்கின்றன.

இந்த நோயில் இருந்து மக்களை காப்பதற்கு மருத்துவ உலகம் பெரும் சவாலை எதிர்நோக்கியிருக்கின்றது. நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அடுத்துவரும் நாள்கள் பெரும் ஆபத்தானவையாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ள மக்கள் அடுத்த கணம் எப்படி நகரும் என தவித்துக்கொண்டிருக்கின்றனர். இதேவேளை, தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் மக்களால் ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகள், காணிக்கைகள், உண்டியல் பணம் என கோடிக்கணக்கான ரூபாய் பல வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளன.

இந்த பணத்தை எடுத்து மக்களுக்கு உணவளிக்கும் பணிகளில் ஆலயங்கள் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியவது காலத்தின் தேவை.

கடந்த முப்பது வருட காலத்தில் தமிழினம் யுத்தத்திற்கு பெரும் விலை கொடுத்திருந்த போதிலும் இதுபோன்ற ஒரு நிலையை எதிர்நோக்கியதில்லை. காரணம், தாயக மக்களுக்கு புலம்பெயர் தேசத்து உறவுகள் உதவிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று அவர்களே இந்த நோயால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

ஆகவே, பணம் படைத்தவர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபைகள், தர்மகத்தாக்கள் தமது ஆலயங்களில் பெயரால் சேமிப்பில் இருக்கும் பணத்தை பாதிக்கப்பட்டவர்களின் பசியாற்ற பயன்படுத்த வேண்டும்.

ஆலயங்கள் சமூக அறநெறி மையங்கள் என்ற அடிப்படையில் ஆலயங்களில் உரிய சுகாதார விதிகளுக்கு உட்பட்டு உணவை சமைத்து பொதி செய்து பட்டினியால் வாடும் மக்களுக்கு கொண்டுசென்று வழங்க முடியும். இல்லையேல், அத்தியாவசிய உலருணவுப் பொருட்களை பெற்று வழங்க முடியும்.

இது வரலாற்றுக்கடமை. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். இந்த கொள்ளை நோயால் எமது மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்குவார்களாயின் ஆலயங்கள் எதற்கு?

ஆலயங்களின் கோபுர கலசத்திற்குள் நெல்மணிகளை போட்டு பாதுகாப்பாக வைப்பதற்கான நடைமுறையை எமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர்.

பேரழிவு ஏற்பட்டு நிலத்தில் உள்ள அனைத்து உணவு உற்பத்திகளும் அழிந்துபோனால், கோபுர கலசத்தில் இருக்கும்; நெல்மணிகளை விதைத்து அடுத்த சந்ததியை காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இது செய்யப்பட்டு, இன்றுவரை வழக்காறாக பின்பற்றப்பட்டு வருகின்றது என நூல்கள் எடுத்தியம்புகின்றன.

கோயில்கள் மக்களைப் பாதுகாக்கும் என்ற அடிப்படையிலேயே கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என ஒளவைப்பாட்டி அருள்வாக்கு மொழிந்தார்.

எனவே, மனித குலம் பல நூற்றாண்டு காலத்தில் கண்டிருக்காத கொள்ளை நோய் ஒன்றில் எமது மக்கள் சிக்கித்தவிக்கின்றனர். பல கிராமங்களில் மக்கள் ஒருநேர உணவுக்கே வழியற்று தவிக்கின்றனர். தினக்கூலிக்கு செல்பவர்களின் வீடுகளில் குழந்தைகளின் அழுகை ஒலியே கேட்கின்றது.

இந்த நேரத்தில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயமும் மற்றும் சில ஆலயங்களும் மக்கள் உயிர்காக்கும் உன்னத பணியை ஆரம்பித்திருக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. இதனை ஏனைய வசதிபடைத்த ஆலயங்களும் கிராமங்களில் இருக்கும் ஆலயங்களும் பின்பற்ற வேண்டும்.

மனிதர்களுக்கு உதவிசெய்வதற்கு இதைவிட பேரவலம் எப்போதும் வரப்போவதில்லை. இது இறைவனின் சோதனை. இதில் சித்தியடையுங்கள். உடனடியாக நிர்வாக சபைகளைக்கூட்டி முடிவெடுத்து செயற்படுத்துங்கள்.

-ந.பொன்ராசா சமூக செயற்பாட்டாளர்.