Take a fresh look at your lifestyle.

பா.ச.க. பாசிச எதிர்ப்பின் பாதை- பெ. மணியரசன்!

பா.ச.க. பாசிச எதிர்ப்பின் பாதை


மோகன் பகவத் – மோடி பாசிச இருள் இந்தியாவை வேகவேகமாகக் கவ்வி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் அரசியல் அமைப்பான பா.ச.க.வும் ஆட்சிக்கு வருவதற்கு முன் கோரிய ஆரியத்துவா ஆதிக்கச் சட்டங்கள் – ஆரியத்துவா செயல்பாடுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இப்போது ஆட்சியில் இருந்து கொண்டு செயல்படுத்தி வருகின்றன.

 

இந்தியாவை மாநிலங்களாகப் பிரித்திருப்பது தவறு; அவற்றை 200 “ஜன்பத்” நிர்வாக மண்டலங்களாக மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரங்கள் கூறின. அதற்கான முதல் நடவடிக்கையாக சம்மு காசுமீர் மாநிலத்தை இரண்டு ஒன்றிய மண்டலங்களாகப் பிரித்துவிட்டன.

 

பா.ச.க. பரிவாரங்கள் ஆட்சிக்கு வந்த பின், பாபர் மசூதி இருந்த இடம் அதை இடித்தவர்களுக்கே உரியது என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பும் வாங்கி விட்டார்கள்.

 

இப்போது ஆரியத்துவா அமைப்புகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப இந்திய மக்களுக்குக் குடியுரிமை வழங்கிடவும், குடியுரிமை மறுத்திடவும் அதிகாரம் பெறும் வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) இயற்றியுள்ளார்கள். அதற்கேற்ப தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) போன்றவற்றை வடிவமைத்திருக்கிறார்கள்.

 

இந்தியப் படைத்துறையினரையும் அரசியல்படுத்த ஆர்.எஸ்.எஸ். கொள்கையுடையவர்களுக்குப் பதவி உயர்வு தருகிறார்கள். படைத்துறையில் ஓய்வு பெற்றால், நடுவண் அமைச்சர் பதவி தருகிறார்கள். அப்படி அமைச்சரானவர்தான் வி.கே. சிங்!

 

உச்ச நீதிமன்றத்தையும் தனது நிர்வாகத்தின் ஒரு பகுதிபோல் மோடி அரசு மாற்றிக் கொள்கிறது. பதவி ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி இரஞ்சன் கோகோய், மாநிலங்களவை உறுப்பினராக அமர்த்தப்பட்டுள்ளார். அவர் மோடி அரசின் மீதான இரபேல் ஊழல் வழக்கு, சம்மு காசுமீர் சிதைப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு களில் பா.ச.க. ஆட்சியாளர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கினார். அதற்கான பரிசு இது!

 

குற்றச்செயல் புரிந்த பா.ச.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க நேர்மையான நீதிபதிகள் வலியுறுத்தினால், அவர்களுக்கு எதிராக இந்திய அரசு செயல்படுகிறது. தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் இரவோடு இரவாக பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையே!

 

இவ்வாறாக, இந்தியாவை ஆரியத்துவா பாசிச இருள் வேகமாகக் கவ்வி வருகிறது. இந்தப் பாசிசம், மோகன் பகவத் – மோடி வடிவில் வெளிப்படுகிறது.

 

மக்கள் எதிர்ப்பு அதிகமாகி, அடுத்த மக்களவைத் தேர்தலில் தோற்றுவிடும் நிலை பா.ச.க.வுக்குத் தென்பட்டால், தேர்தலையே நடத்தாமல், முழு சர்வாதிகாரம் செய்யும் வாய்ப்பும் உண்டு!

 

கொரோனோ நச்சுயிரிக் கொள்ளை நோய் மனிதகுல வாழ்வுக்கே பேரச்சமாய் நாடு நாடாய்ப் பரவி வருகிறது. மருத்துவத் தீர்வின்றி மனிதர்கள் மடிகிறார்கள். இத்தொற்று நோயைத் தடுப்பதற்காக – அனைத்து மக்களும் வீட்டுக் காவலலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

 

அதனால் பொருளாதாரத்திற்குப் பெருநாசம் ஏற்பட்டுள்ளது. இக்கொள்ளை நோய் தொடரும்போதும், இது ஆடி ஓய்ந்த பின்னும் உருவாகும் பொருளியல் நெருக்கடி – சனநாயக நெருக்கடியாய் மாற வாய்ப்புண்டு! பாசிசத்திற்கு இது ஒரு மது விருந்தாய் அமையும். இந் நெருக்கடியைப் பயன்படுத்தி – உரிமைப் பறிப்புகள் பாய வாய்ப்புண்டு!

 

இந்த பா.ச.க. பாசிசத்தைத் தடுப்பது அல்லது முறியடிப்பது எப்படி?

 

பாசிச இட்லர் வீழ்த்தப்பட்டார், பாசிச முசோலினி வீழ்த்தப்பட்டார் என்ற பாணியில் பேசுவது மேடை எழுச்சிக்குப் பயன்படலாம்; செர்மனியிலும் இத்தாலியிலும் பாசிசம் வெற்றிக் கொடி நாட்டியதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

 

செர்மனியில் பாசிசம் வளர்ந்தது எப்படி?

——————————————————————–

செர்மனியில் இட்லர் கட்சிக்கு முன் பெரிய கட்சியாக இருந்தது கம்யூனிஸ்ட்டுக் கட்சி! கம்யூனிஸ்ட்டுக் கட்சி கூறும் சமத்துவ நிகரமை (சோசலிச)க் கொள்கைதான் தன்னுடைய கொள்கையும் என்று கூறிக் கொண்டுதான் இட்லர் தமது ‘தேசிய சோசலிசத்  தொழிலாளர் கட்சி”யை மக்களிடம் கொண்டு சென்றார்.

 

செர்மானிய இனப்பெருமிதம், செர்மானிய மொழிப் பெருமிதம், சோசலிசம் ஆகியவற்றை இணைத்துக் கொடுத்தார் இட்லர்.

 

பல நூறு ஆண்டுகளுக்கு முன் வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறிய யூதர்கள் செர்மனியில் பெருந்தொழில் அதிபர்களாகவும், அதிகாரிகளாகவும் சமூகச் செல்வாக்கு செலுத்தும் அறிவாளிகளாகவும் சமூக ஆதிக்கம் உள்ளவர் களாகவும் விளங்கினர்.

 

ஆதிக்கம் செலுத்தும் யூதர்களை எதிர்க்கும் கொள்கையைத் தமது கட்சியின் கொள்கையாக வெளிப்படுத்தினார்.

 

இவ்வாறு இட்லர் செர்மானியத் தேசியத்தை – செர்மானிய தேசிய வெறியாக மாற்றினார். அவர் கட்சி வேகமாக வளர்ந்தது.

 

செர்மானிய கம்யூனிஸ்ட்டுக் கட்சியோ இரசியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் செர்மானியக் கிளைபோல் செயல்பட்டது. உண்மையான செர்மானிய இனப் பெருமிதங்களை மக்கள் முன் பேசாமல் – இரசியச் சாதனைகளின் பெருமைகளை முதன்மைப்படுத்தியது,

 

செர்மானியர்களின் வரலாற்றுப் பெருமிதங்களைப் பேசுவது இனவாதம்; இரசியச் சாதனைகளைப் பேசுவது பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று செர்மன் கம்யூனிஸ்ட்டுக் கட்சி கருதியது. இட்லரின் செர்மானிய இனவாதத்தை எதிர்க்கும் பெயரில் சொந்த இனமான செர்மானிய இனத்தையே கொச்சைப்படுத்தும் பேச்சாளர்களும், அந்நாட்டுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் உருவாகினர்!

 

யூத முதலாளியத்தை – யூதர்களின் மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டிய அளவுக்குக் கூட எதிர்க்காமல் யூதர்களை விமர்சனமின்றி ஆதரித்தது செர்மன் கம்யூனிஸ்ட்டுக் கட்சி.!

 

செர்மானியக் கம்யூனிஸ்ட்டுகள் பிறந்த இனத்திற்கு இரண்டகம் செய்கிறார்கள்; இரசியர்களின் முகவர்கள் என்ற பரப்புரையை முடுக்கிவிட்டது இட்லர் கட்சி!

 

இவற்றால், செர்மன் கம்யூனிஸ்ட்டுக் கட்சி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது. இட்லரின் தேசிய நிகரமை (சோசலிச)த்  தொழிலாளர் கட்சி முதல் நிலைக்கு வந்தது.

 

ஆட்சியைப் பிடித்து, பாசிசத்தை அரங்கேற்றிய இட்லருக்கு செர்மன் மக்களிடையே ஆதரவு பெருகியது.

 

பல நாடுகள் மீது படையெடுத்து – தனது பகையைப் பெருக்கிக் கொண்டார் இட்லர். இரசியப் படை, பிரித்தானியப் படை, வட அமெரிக்கப் படை உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் செர்மனி மீது போர் தொடுத்து, அந்நாட்டைக் கைப்பற்றி இட்லரை வீழ்த்தின. பகைவர்களிடம் பிடிபடாமல் தப்பிப்பதற்காகப் பதுங்கியிருந்த பாதாள அறையில் தற்கொலை செய்து கொண்டார் இட்லர்! செர்மானிய மக்கள் போராடி இட்லரை வீழ்த்தவில்லை.

 

இத்தாலியின் நிலை என்ன?

————————————————

இத்தாலியில் முசோலினியின் கட்சிப் பெயர் பாசிசக் கட்சி (Fascist Party). அவர்களால் உருவாக்கப்பட்ட சொல் அது! முசோலினி தொடக்கத்தில் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் இருந்தார். பிறகு வெளியேறினார். அவருடைய கட்சியும் நிகரமை (சோசலிச)க் கட்சி! இட்லரைப் போல் முசோலினி கம்யூனிச வெறுப்பாளர் அல்லர்.

 

இத்தாலியில் கம்யூனிஸ்ட்டுக் கட்சி பெரிய கட்சியாக வளர்ந்திருந்தது.

 

வரலாற்றில் வாழ்ந்து செழித்த கிரேக்க நாகரிகத்தின் ரோமப் பேரரசின் வாரிசுகள் அல்லவா இத்தாலிய மக்கள்! அந்தப் பெருமை எல்லாம் கம்யூனிசத்திற்கு ஆகாது! அவையெல்லாம் சுரண்டல் பெருமைகள் என்று ஒற்றை வரியில் புறக்கணித்தார்கள். கம்யூனிஸ்ட்டுகளின் இப்போக்கு வசதியாகிப் போனது முசோலினிக்கு!

 

இத்தாலிய இனப்பெருமிதங்களையும் இனத்தற்காப்பையும் கூடுதலாகப் பேசினர் முசோலினி கட்சியினர்! தான் அதிகாரத்தைப் பிடிக்க, ஏற்கெனவே வளர்ந்திருந்த கம்யூனிஸ்ட்டுக் கட்சிதான் இடையூறாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட முசோலினி, கம்யூனிஸ்ட்டுக் கட்சி வெற்றி பெற்றால் இத்தாலியை இரசியாவின் இன்னொரு மாநிலமாகச் சேர்த்து விடுவார்கள் என்று பரப்புரை செய்தார்! அப்பரப்புரை மக்களில் கணிசமானோரிடம் எடுபட்டது. ஆட்சிக்கு வந்த முசோலினி அடுத்துத் தேர்தலை நடத்தவில்லை!

 

அடுத்த நாடுகள் மீது படையெடுத்தார் முசோலினி. அடுத்த நாடுகள் இத்தாலியின் மீது எதிர்த் தாக்குதல் நடத்தின. உள்நாட்டுக் கலகம் வெடித்தது. ஒளிந்து கொள்ள ஓடினார் முசோலினி! கம்யூனிஸ்ட்டுகள் முசோலினியைப் பிடித்தனர்; சுட்டுக் கொன்று மக்கள் பார்வைக்குத் தொங்கவிட்டனர்!

 

ஸ்பெயின்

——————

இட்லர், முசோலினியின் காலத்தில் 1939-இல் ஸ்பெயின் நாட்டில் அவர்களின் கூட்டாளியாக ஆட்சியில் அமர்ந்தவர் பிரான்சிஸ்கோ ஃபிராங்கோ என்ற பாசிஸ்ட்! ஸ்பெயினிலும் வளர்ச்சியடைந்த கம்யூனிஸ்ட்டுக் கட்சி இருந்தது. அக்கட்சியைத் தடை செய்தார் பிராங்கோ! இட்லரும் முசோலினியும் வீழ்ந்த பின்னரும் 1975-இல் இறக்கும் வரை ஸ்பெயின் நாட்டின் சர்வாதிகாரியாக ஆட்சி செய்தார் ஃபிராங்கோ!

 

பாசிச எதிர்ப்பில் கம்யூனிஸ்ட்டுகளின் தோல்வி

———————————————————————————

பாசிசம் தோன்றி வளர்ந்து சர்வாதிகாரம் செய்த இத்தாலி, செர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதற்கு முன் வளர்ச்சியடைந்திருந்த கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளால் பாசிசக் கட்சிகள் தேர்தலில் வெல்வதைத் தடுக்க முடியவில்லை! இரண்டாம் உலகப் போரில் பல நாடுகளின் படைகளின் துணை யோடுதான் இட்லரையும் முசோலினியையும் வீழ்த்த முடிந்தது.

 

எனவே மோகன் பகவத் – மோடி பாசிசத்தை வீழ்த்த கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் பழைய பாணி பாசிச எதிர்ப்பு பயன்படாது.

 

இந்தியாவில் பாசிசம்

————————————

இப்போது இந்திய ஆட்சியில் உள்ள பா.ச.க. பாசிசம் – ஆர்.எஸ்.எஸ். என்ற உறுதியான – நெடுங்கால – பாசிசப் பாசறையின் மேல் நிற்கிறது. பதவி – பணம் – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப் படாத முழுநேர மற்றும் பகுதி நேரச் செயல்பாட்டாளர்களைக் கொண்டது ஆர்.எஸ்.எஸ்.

 

அரசியல் பதவி – அரசுப் பதவி ஆகியவற்றில் நாட்டமில்லாத ஆரியத்துவா களப் பணியாளர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்றவற்றிலும் இருக்கிறார்கள். இவற்றில் பிராமணரல்லாத தமிழர்களும் இருக்கிறார்கள். பிராமணிய அமைப்புகளான வி.எச்.பி., இராமகிருஷ்ண மடம், விவேகானந்தர் அமைப்புகள் எனப் பல ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்புகள் தமிழ் நாட்டில் செயல்படுகின்றன.

 

மோகன் பகவத் – மோடி அச்சின் இந்தியப் பாசிசம் ஆரிய இனவாதம் – ஆரியப் பண்பாட்டு வாதம் – ஆரிய மதவாதம்,  சமற்கிருதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதன் சாரம் வருமாறு :

 

“இந்திய மக்கள் அனைவரும் “பாரதீயர்” என்ற ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். தற்காலிகமாக அவர்களை இந்தியர்கள் என்று அழைத்துக் கொள்ளலாம். இந்தியர்களின் பொதுப் பண்பாடு இந்துத்துவா பண்பாடு! அதாவது ஆரியத்துவா பண்பாடு; இந்து என்பது மதம் மட்டுமல்ல, அதுவே இந்திய மக்களின் இனப்பெயர்; “இந்து” என்பதில் இந்திய இனமும் அடக்கம்! இவர்களின் புனித மொழி சமற்கிருதம்; பொது மொழி இந்தி! இந்த இருமொழிகளையும் இந்தியர் அனைவரும் கற்க வேண்டும்.

 

இந்தியப் பெருமிதங்கள் என்பவை வேதகால ஆரிய – பிராமணப் பெருமிதங்கள் தாம்! முசுலிம் – கிறித்தவ மதங்கள் அயல் மதங்கள்! அவை இந்துத்துவா மேலா திக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; ஆரியத்துவாவுக்கு அடங்கி வாழ வேண்டும்.

 

பழைய ஆரிய வர்ணாசிரம சமூக அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும். அதில் பழைய காலம் போல் பிராமண மேலாதிக்கம் மேலோங்க வேண்டும். அடுத்தடுத்த நிலையில், ஆரிய சத்திரிய – ஆரிய வைசிய சமூகங்களின் ஆதிக்கம் நிலவ வேண்டும். தமிழர்களைப் போன்ற இனங்கள் சூத்திர இனங்கள் – பஞ்சமர் இனங்கள்! இவை ஆரிய மேல் வர்ணங்களுக்குக் கீழ்ப் படிதல் உள்ள இனங்களாக – அடங்கி வாழ வேண்டும்! – இவையே இந்தியப் பாசிசத்தின் இலட்சியங்கள்!

 

புதிய புதிய தொழில் நுட்பங்கள் – அதற்கான நிறுவனங்கள், பன்னாட்டுப் பெருங்குழுமங்கள் (Corporates) போன்ற புதிய கால நிறுவனங்கள் ஆகிய வற்றுடன் கூட்டணி சேர்ந்து, அவற்றின் வேட்டைக்கு வாய்ப்பளித்து, அவற்றிற்கும் சேர்த்து தலைமை தாங்குகிறது ஆரியத்துவா பாசிசம்!

 

இந்தப் பன்னாட்டு வேட்டை நிறுவனங்களுக்கு அரசுப் பாதுகாப்பையும், மக்கள் ஆதரவையும் வழங்குகிறது பா.ச.க. பாசிசம்! இதற்கு மறு உதவியாக ஆரிய – பிராமண அரசியல் மேலாதிக்கத்தை – பெருங்குழும முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் ஏற்றுக் கொள்கின்றனர்.

 

வர்ண – சாதிப் பிளவுகளும் ஆதிக்கங்களும் உள்ள இந்தியச் சமூகத்தில் தமிழ்ச் சமூகத்தில், ஆரிய வர்ணாசிரம ஆதிக்கம் நிலைநாட்டப் பெற்றால் தங்கள் சாதி ஆதிக்கமும், தங்கள் சாதி உயர்வும் நீடிக்கும் என்ற உத்தியில், பிராமணரல்லாத சாதிகளில் ஒரு சாரார் ஆரியத்துவா பாசிசத்தை ஆதரிக்கும் போக்கும் உண்டு!

 

முசுலிம்களுடன், கிறித்தவர்களுடன் உள்ள தனிநபர் முரண்பாடுகள், தெரு முரண்பாடுகள், ஊர் முரண்பாடு கள், மதக் கொள்கை முரண்பாடுகள் முதலியவற்றின் காரணமாக பா.ச.க.வின் ஆரிய பாசிசத்தை ஏற்கும் பிராமணரல்லாத இந்துக்கள் உண்டு!

 

ஆனால், அனைத்துப் பகுதி மக்களுக்கும் அழிவைக் கொண்டு வரும் பாசிசம் – பா.ச.க. பாசிசம்!

 

இதுதான் இத்தாலி, செர்மன் அனுபவம்!

 

தமிழர்களின் வரலாறு

————————————–

தமிழ்நாட்டில் ஆரிய எதிர்ப்பும் பிராமணிய – சமற்கிருத எதிர்ப்பும் சங்ககாலத்திலிருந்து தொடர்ந்து வந்துள்ளது. அரசர்கள் பிராமணர்களை அரவணைத்துப் போனாலும் தமிழ் மக்களிடையே ஆரிய – பிராமணிய – சமற்கிருத எதிர்ப்பு தொடர்ந்து வந்திருக்கிறது. சமற்கிருதத் தாக்கமும் பிற்காலத்தில் தெலுங்குத் தாக்கமும் தமிழ்நாட்டில் இருந்தாலும் தமிழ் சிதையவில்லை; அழியவில்லை!

 

பிற்காலச் சோழர்களின் எழுச்சி காரணமாகத் தமிழ்நாட்டில் வேற்று மொழி பேசும் வெளிநாட்டு முசுலிம் படையெடுப்புகள் நிகழாமல் போயிற்று!

 

காலந்தோறும் தமிழ்ப் புலவர்களும் சமண, சைவ, வைணவத் தமிழ்ச் சான்றோர்களும் தமிழை வளர்த்து வந்தனர். வள்ளலார் காலத்தில் தொடங்கிய தமிழர் மறுமலர்ச்சி – தமிழை வளர்த்தது. பரிதிமாற் கலைஞர் தொடங்கி வைத்த தனித்தமிழ்க் கோட்பாடு, மறைமலை அடிகளால், தனித்தமிழ் இயக்கமாய், தனித்தமிழர் இயக்கமாய் வளர்ச்சியடைந்தது.

 

இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஊடாகத் தமிழ்நாட்டில் தமிழ் வளர்ந்தது. தமிழறிஞர்கள் பலர் காங்கிரசுக் கட்சியில் துடிப்பாகச் செயல்பட்டுத் தமிழ் வளர்த்தனர். பாரதியாரும் பின்னர் பாவேந்தரும் தமிழ் வளர்ச்சியை முடுக்கி விட்டனர். இப்பின்னணியில் பிற்காலத்தில் தோன்றிய தி.மு.க. அரசியல் துறையில் தமிழ் வளர்ச்சிக்கு முதன்மை கொடுத்தது. இந்தி, சமற் கிருத மொழிகளை எதிர்த்தது.

 

மறைமலை அடிகளார் வழிவந்த பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றோர் செயல் படுத்திய தனித்தமிழ் இயக்கம், உலகத் தமிழ்க் கழகம் போன்ற அமைப்புகள் தமிழ்க் காப்பின் அரண்களாய் விளங்கின.

 

இவ்வாறான வரலாற்றுப் பின்னணியில் இயற்கையாகவே, தன்னளவில் தனித்தன்மையுடன் விளங்கிய தமிழ் மொழி, அது பெற்றுள்ள உள்ளாற்றல், சமற்கிருதம், இந்தி, உருது, தெலுங்கு ஆக்கிரமிப்புகளிலிருந்து தன்னையும் தமிழ் இனத்தையும் காப்பாற்றின!

 

இன்று தமிழும், தமிழினமும் தமிழ்த்தேசியமாய்த் தழைத்து வருகிறது!

 

இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இப்போது தமிழினத்தைச் சிதைக்க “இந்து இனவாதத்தை” பா.ச.க. பரிவாரங்கள் திணிக்கின்றன.

 

இந்து இனவாதத்தின் சாரம் – ஆரிய, பிராமண மேலாதிக்கம் + அதை ஏற்றுக் கொண்ட ஆரியரல்லாத – பிராமணரல்லாத கீழ்நிலை இந்துக்கள் என்ற தொகுப்பு ஆகும். இத்தொகுப்பில் ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஆரிய – பிராமணர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய் வாழ வேண்டும் என்பதே ஆரியத்துவா!

 

பா.ச.க. பாசிசத்தை எதிர் கொள்வது எப்படி?

———————————————————————–

ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. முன்வைக்கும் ஆரிய இன வாதத்தை அடிப்படையாகக் கொண்ட – இந்து மதத்தையே ஆரிய இனமாக புனைந்து கொள்ளும் பாசிசத்தை எதிர்கொள்வதற்கு இந்தியாவிலுள்ள இயற்கையான தேசிய இனங்களை முன்வைத்துத்தான் களம் அமைக்க வேண்டும்.

 

இந்தியாவில் தமிழர்கள், மராத்தியர், வங்காளிகள், வடகிழக்கு இனங்கள் எனப் பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன. அவரவர்க்கும் வரலாறு மற்றும் பண்பாட்டுத் தனித்துவங்கள் இருக்கின்றன. அவற்றை முன்வைத்துத்தான் ஆரியத்துவா இனவாதத்தை சந்திக்க வேண்டும்.

 

பா.ச.க. பாசிசத்தை எதிர்ப்போர் முதலில் இந்தியன் என்றோ, பாரதீயன் என்றோ ஒரு தேசிய இனம் (Nationality) இல்லை என்ற உண்மையை உரத்துப் பேச வேண்டும். பல தேசிய இனங்களின் கூட்டமைப்புதான் இந்தியா என்பதைப் பேச வேண்டும். இந்தியா என்ற நாட்டை உருவாக்கியவர்கள் வணிக வேட்டைக்கு வந்த வெள்ளையர்கள்தானே தவிர, எந்த இந்திய மன்னரும், இந்திய முனிவரும், இந்து மதமும் அல்ல என்ற உண்மையைப் பேச வேண்டும்.

 

தில்லியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தேசிய இனங்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டுமே தவிர, தில்லியில் அதிகாரங்களைக் குவிக்கக் கூடாது என்று உரத்துப் பேச வேண்டும்.

 

இயற்கையான ஒவ்வொரு தேசிய இனமும் உணர்ச்சி பெற்று எழும் போதுதான் இந்து மதத்தையே ஒரு தேசிய இனமாகக் கற்பித்துக் கொண்டு, ஆரிய – பிராமண பாசிசத்தை அரங் கேற்றும் பா.ச.க.வின் சூழ்ச்சியைத் தடுக்க முடியும்.

 

மற்ற இனங்கள் முன் வருமா என்ற வினாவைக் கேட்டுக் கொண்டு முடங்கிவிடக் கூடாது. தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய இனத்தை முன்னிறுத்தி, பாசிச எதிர்ப்பு அணியைக் கட்ட வேண்டும். இதற்கு பா.ச.க. பாசிசத்தை எதிர்த்து இப்பொழுது பரப்புரை செய்யும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும், இடதுசாரிகளும் முன்வர வேண்டும்.

 

இங்கு தமிழின அடிப்படையில் வலுவான பாசிச எதிர்ப்புக் கூட்டணி உருவானால், இதன் பொறுப் பாளர்கள் மற்ற மாநிலங்களில் பேசி அனைத்திந்திய அளவில் பல் தேசிய இன பாசிச எதிர்ப்புக் கூட்டணியை உருவாக்க முடியும். ஒருவேளை, அவ்வாறு அனைத்திந்தியக் கூட்டணி உருவாகாவிட்டாலும் தமிழ் நாட்டளவில் பா.ச.க. பாசிசம் வளராமல் தடுக்க முடியும்; பா.ச.க.வைத் தனிமைப்படுத்த முடியும்!

 

தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும், இடதுசாரிகளும் தமிழ்த்தேசிய இன அடிப்படையில் பா.ச.க. பாசிச எதிர்ப்புக் கூட்டணி அமைக்க முனையாவிட்டால், தமிழ்த்தேசிய அமைப்புகள் – தமிழின உணர்வாளர்கள் ஒத்த கருத்துள்ள சனநாயக இயக்கங்கள் இவ்வாறான பாசிச எதிர்ப்பு முன்னணியை தமிழ்நாட்டளவில் உருவாக்க முடியும்.

 

தேவையான மாற்றங்கள்

——————————————-

இந்து மதம் பற்றிய புரிதலில் மாற்றம் தேவை. இந்து மதம் என்ற பெயரை ஆரிய பிராமணர்களோ, மற்ற இந்திய இனத்தவரோ சூட்டவில்லை; ஆங்கிலேயர் சூட்டினர். இந்து மதம் என்ற பெயருக்கு மூலகாரணம் சிந்து ஆறு.

 

இந்து மதம் என்ற பெயரை எந்த சமற்கிருத நூலும் கூறவில்லை. வர்ணசாதிப் பிளவுகள், உயர்வு தாழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டது ஆரிய பிராமண வைதிக மதம். ஆரிய பிராமண வைதீக மதத்திற்கும், தமிழர்களின் சிவநெறி – திருமால்நெறி ஆகியவற்றுக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் உள்ளன. பல கடவுள்கள், பல வழிபாட்டு முறைகள், பல புனித நூல்கள் முதலிய வற்றைக் கொண்டதுதான் வெள்ளையர் தொகுத்த இந்து மதம்!

 

ஆரிய இந்து மதம் வேறு, தமிழ் இந்து மதம் வேறு! தமிழர்களுக்கு ஆன்மிகத் தலைவர்களாக பிராமணர் களோ, வடவர்களோ இருப்பதற்கு எந்த விதிமுறையும், ஆகமச் சான்றும் இந்து மதத்தில் இல்லை. ஆரிய வைதிக மதத்திலும் இல்லை.

 

ஒரே அல்லாவை ஏக இறைவனாகக் கொண்ட இசுலாத்தில் சன்னி – சியா என்ற இரு பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இவற்றிடையே உறவு கிடையாது.

 

ஒரே ஏசுவை – கர்த்தரை இறைவனாகக் கொண்ட கிறித்துவத்தில் ஆர்.சி. – புரோட்டஸ்டெண்ட் என்று இரு பெரும் பிரிவுகள் உண்டு. இவற்றிற்கிடையே உறவு கிடையாது.

 

பல கடவுள்கள், பல புனித நூல்கள் கொண்ட இந்து மதத்தில் ஒற்றைத் தலைமைக்கோ, ஒற்றைக் கடவுளுக் கோ, ஒற்றை வழிபாட்டு முறைக்கோ வேலையில்லை.

 

இந்து மதத்திற்கு மாற்றாக, தமிழர்களுக்கென்று புதிய மதம் உருவாக்க பழைய காலத்தில் ஆன்மிகப் பெரியவர்களும், பிற்காலத்தில் சமூக சீர்திருத்தக் காரர்களும் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

 

ஒரு மதத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதன்று! அதுபோல், மதத்திலிருந்து மக்களை வெளியேற்றுவதும் இயலாத ஒன்று! உலகப் பட்டறிவு இதுதான்!

 

எனவே, இந்து மதத்தை ஒழிப்பதாக அல்லது இந்து மதத்தை மாற்றி வேறோரு மதத்தை உருவாக்குவதாகச் சொல்வதெல்லாம் தமிழ் இந்துக்களை ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. முகாமுக்கு நாமே அனுப்பி வைக்கும் உத்தியாகவே முடியும். ஆரிய இந்து வேறு, தமிழ் இந்து வேறு! தமிழ் இந்து மதத்திற்கு பிராமணர்கள் குருமார்களும் இல்லை, தலைவர்களும் இல்லை என்ற உண்மை நிலையை உணர்வோம்; தமிழர் தலைமையை வளர்த்துக் கொள்வோம்.

 

கடவுளை ஏற்போரும், கடவுளை மறுப்போரும் இந்து மதத்தில் இருக்க உரிமையுண்டு. கடவுளை மறுப்போரை இந்து மதத்திலிருந்து நீக்கிட எவருக்கும் அதிகாரமில்லை.

 

கடவுள் மறுப்பாளர்கள் தங்கள் கருத்தைத் தாராள மாக தர்க்க அடிப்படையில் மக்களிடம் பரப்ப உரிமை இருக்க வேண்டும். அதேவேளை, “கடவுளைக் கற்பித்த வன் முட்டாள், கடவுளை வணங்குபவன் காட்டு மிராண்டி, கடவுளை பரப்பியவன் அயோக்கியன்” என்ற பெரியார் பாணி பரப்புரை தமிழ் இந்துக்களை ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பக்கம் திருப்பிவிடவே பயன் படும். அப்படிப்பட்ட பரப்புரைகளில் மாற்றம் வேண்டும்.

 

தமிழ்நாட்டு முசுலிம்கள் – கிறித்தவர்கள்

——————————————————————–

தமிழ்நாட்டு முசுலிம்களும் கிறித்தவர்களும் தங்களின் மதவழிப்பாட்டுரிமையை முழுமையாகப் பெற எந்தத் தடையும் இங்கே கூடாது. ஆனால் முசுலிம்களிடையே ஒரு போக்கு இப்போது பரப்பப்படுகிறது. அதாவது முசுலிம்கள் தமிழர்கள் அல்லர், முசுலிம் என்பதே தனி இனம் என்பதே அந்தக் கருத்து.

 

இசுலாம், முசுலிம் என்பவை ஒரு மதத்தின் பெயர். தனிவழிப்பாட்டு முறையின் பெயர்! பிறந்த இனம் ஒவ்வொரு நாட்டு முசுலிமுக்கும் வேறு வேறு! பாக்கித்தான் முசுலிம் வேறு இனம்; தமிழ்நாட்டு முசுலிம் வேறு இனம், உத்தரப்பிரதேச முசுலிம் வேறு இனம்! ஈரான் – ஈராக் நாடுகளின் முசுலிம்கள் வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள்!

 

ஐரோப்பிய நாடுகளில் வாழும் கிறித்தவர்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள்.

 

ஒரு மெய்யியல் என்ற அடிப்படையில், ஒரு மதம் மொழி கடந்து, நாடு கடந்து பரவக்கூடியது. மத அடிப்படையில் இந்தியாவிலிருந்து பிரிந்த பாக்கித் தானிலிருந்து, பின்னர் இன அடிப்படையில் வங்காள தேச முசுலிம்கள் பிரிந்து தனி நாடு அமைத்துக் கொண்டனர்.

 

இந்து மதம் ஒரு மெய்யியல் என்ற அடிப்படையில், இந்தியத் துணைக் கண்டத்தில் பல இனங்களிடையே இருக்கிறது.

 

உலகம் முழுவதும் ஒரே இசுலாமியப் பேரரசு அமைக்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கை மத உரிமை சார்ந்தது அல்ல; மத ஆக்கிரமிப்பு சார்ந்தது! மனித உரிமையில் அக்கறையுள்ளோர் எந்த மத ஆக்கிரமிப்பையும் ஏற்க மாட்டார்கள்.

 

ஆரிய இந்துத்துவாவின் மத ஆக்கிரமிப்பை எதிர்ப்பதைப் போலவே ஐ.எஸ் கூறும் இசுலாமிய மத ஆக்கிரமிப்பையும் எதிர்க்க வேண்டும்.

 

“இசுலாமியர்களுக்கு இனம், மொழி கிடையாது இசுலாமிய மார்க்கம் மட்டும்தான் எங்களுக்கு உண்டு” என்று தவ்கீத் சமாஅத் அமைப்பினர் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மறுபக்கம் போன்றவர்கள். இவர்களின் இக்கருத்தை சனநாயக உணர்வுள்ள முசுலிம்கள், மனிதர்களைச் சமமாகக் கருதும் முசுலிம்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

 

கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில்  அனைத்து மதங்களுக்குமான பொதுக் கட்சிகளில், பொது அமைப்புகளில் முசுலிம் மக்கள் சேருவது, செயல்படுவது மிகமிகக் குறைந்து விட்டது. முசுலிம் அமைப்புகளில் மட்டுமே இருக்கிறார்கள். இந்தப் போக்கு தமிழ்நாட்டில் முசுலிம்களைத் தனிமைப்படுத்தத் திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. உத்திக்கே மிகவும் பயன்படும். அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதற்காக மட்டுமல்ல, இவ்வாறு முசுலிம்கள் ஒதுங்கிக் கொள்வது சனநாயகமல்ல!

 

முசுலிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பேச்சாளர்கள், அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் பேசும் போதும்கூட “ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாகட்டும்” என்று கூறி பேச்சைத் தொடங்குகின்றனர். பல்வேறு மதத்தினர் சேர்ந்திருக்கும் கூட்டத்தில் உலகத்தின் “ஒரே இறை வனின் (அல்லாவின்) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்” என்று கூறுவது சனநாயக நடை முறையா? எந்நேரமும் இசுலாமிய மதச் சிந்தனையிலேயே இருந்தால் வெவ்வேறு மத மக்களிடையே முசுலிம் மக்களுடன் இணக்க உறவு எப்படி உருவாகும்?

 

முசுலிம் தமிழர்களிடையே, மேற்படிச் செயல்பாடுகளில், கருத்துநிலைகளில் சனநாயக வழிப்பட்ட மாற்றங்கள் வர வேண்டும்.

 

உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முசுலிம்கள் தங்கள் தாய் மொழியில் பேசுவது, எழுதுவது அவர்களின் அடிப்படை உரிமை. ஆனால் மத நம்பிக்கையைப் பயன்படுத்தி தமிழ் முசுலிம்களை, தங்கள் தாய் மொழியான தமிழைப் புறக்கணிக்கச் செய்யும் வேலைகளில் உருது பேசும் முசுலிம்கள் இறங்கக் கூடாது. அம்முயற்சிகளுக்குத் தமிழ் முசுலிம்கள் இணங்கக் கூடாது!

 

புதிய புதிய கிறித்தவப் பிரிவுகள் இந்துக்களை தங்கள் மதத்திற்கு மாற்றும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுகின்றன. அதற்காக “கர்த்தரின் அற்புதங்களை” இந்துக்களிடம் பரப்புகிறார்கள். இந்துக்களைத் தங்கள் மதத்திற்கு மாற்றுகிறார்கள். ஒருவர் மாற்று மதக் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, அவர் தாமாக மதம் மாறினால் தவறன்று! அந்த உரிமை அனுமதிக்கப்பட வேண்டும்! ஆனால், மதம் மாற்றுவதைத் தீவிர வேலைத் திட்டமாக செய்யக் கூடாது. அவ்வாறு வலிந்து மதம் மாற்றும்போது மதமோதல் வெடிக்கும். இவ்வாறான திட்டமிட்ட மத மாற்றங்களில் ஈடுபடும் கிறித்தவ அமைப்புகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

பா.ச.க.வின் பாசிசம் வளர்ச்சயடைந்தால் தமிழ் நாட்டில் தமிழ் இந்துக்கள், முசுலிம்கள், கிறித்தவர்கள் அத்தனை பேர் ஆன்மிக உரிமைகளும், தனித்துவங்களும் அழிக்கப்படும் என்பதை உணர வேண்டும்.

 

பாய்ந்து வரும் பா.ச.க.வின் பாசிசத்தை எதிர்கொண்டு தடுத்து, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் கடைசி வாய்ப்பு, சரியான இலட்சியத்தின் கீழ் தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாகும்!

 

சாதி

——–

பா.ச.க. பாசிசவாதிகள் தமிழ்நாட்டில் தங்களுக்கு ஆள்பிடிக்க சாதியைப் பயன்படுத்துகின்றனர். எல்லாச் சாதிகளிலும் தனித் தனியே சாதி உணர்வுக்குத் தீனி போட்டு அச்சாதியைப் பாதுகாக்கப் போவது போல் பாசாங்கு செய்து ஆள் பிடிக்கின்றார்கள்.

 

மதத்திற்கும் சாதிக்கும் இடையே வேறுபாடு உள்ளது. மதம் என்பது கடவுள் நம்பிக்கை, மனிதகுலப் படைப்பு, பாவ – புண்ணியங்கள், மனிதக் கடைத் தேற்றம், இம்மை – மறுமை தொடர்பான கருத்தியல் சார்ந்தது. இவ்வாறான கருத்தியல் எதுவும் சாதிக்கு இல்லை.

 

உலகத்தில் வளர்ச்சியடைந்த சமூகங்கள் அனைத்தும் ஏதாவதொரு மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், சாதி என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமே உள்ளது. பழங்காலத்தில் ஆரிய – பிராமண வைதிக மதம் – சமற்கிருத வேத – உபநிடதங்கள் வழி உருவாகி, மனுசுமிருதி, புராணங்கள் போன்றவற்றால் நிலை நிறுத்தப்பட்டது. அந்த வேத பிராமண வைதிக மதத்தின் பிறப்பு அடிப்படையிலான வர்ண – சாதி உயர்வு தாழ்வுக் கருத்தியல்தான் சாதி உருவாக்கத்திற்கு – மூல வேர்!

 

மனிதகுல வளர்ச்சியில் உழைப்புப் பிரிவினைகள், குலக்குழுச் சமூகம் என்ற பிரிவுகள் எல்லா நாடுகளிலும் இருந்திருக்கின்றன. வளர்ச்சிப் போக்கில் மற்ற நாடுகளில் எல்லாம் பிறப்பு அடிப்படையில் உழைப்புப் பிரிவினை இல்லாமல் எல்லாரும் எல்லா வேலையும் செய்யும் வளர்ச்சி ஏற்பட்டது.

 

ஆரியப் பிராமணிய வர்ணாசிரமத் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட இந்தியத் துணைக்கண்ட சமூகத்தில் உழைப்புப் பிரிவினை சாதிகளாய் இறுகி, உயர்வு தாழ்வுக்கான அடையாளங்களாக நிலைத்தன.

 

தன் குடும்பத்திலும், சமூகத்திலும் அடுத்தவரை ஆதிக்கம் செய்யும் குணம் ஒவ்வொரு மனிதர் உள்ளத் திலும் இயல்பாக இருக்கிறது. அந்த ஆதிக்கக் குணம் செயல்படாமல் போவதற்கு முகாமையாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அடுத்தவர் ஆதிக்கத்திற்குப் பாதிக்கப்பட்டவர் காட்டும் எதிர்வினை. இரண்டு, பண்பாடு மிக்க மனிதர்கள் தங்கள் உளவியலைப் பக்குவப்படுத்திக் கொள்வது.

 

தங்கள் மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளாதவர் களும், தங்கள் ஆதிக்கத்தை எதிர்ப்போரை அடக்க முடிந்தவர்களும் ஆதிக்கத்தைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இந்த ஆதிக்கக்காரர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்தவும், ஞாயப்படுத்தவும் கதைகளை “நீதி நெறிகளை”ப் புனைந்து விடுகிறார்கள்.

 

ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வடிவங்களில் – மனிதர்களை மனிதர்கள் ஆதிக்கம் செய்கிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில் – ஆரிய வர்ணாசிரம – சாதி – பிறப்பு உயர்வு தாழ்வு வடிவத்திலும் மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். குலத்தொழில் முறை இந்தியாவில், தமிழ்நாட்டில் பெருமளவில் காலாவதியாகிவிட்டது. இன்ன தொழிலை இன்ன சாதியார்தான் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினால் இப்போது அது சட்டப்படி குற்றம்!

 

ஆனால், பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு பார்க்கும் உளவியல் பிராமணர்களிடம் மட்டுமின்றி, பிராமணரல்லாத தமிழர்களிடமும் இருக்கிறது. சொந்த சாதிக்குள்தான் திருமண உறவு கொள்ள வேண்டும் என்ற நடைமுறை மிகப் பெருமளவில் கடுமையாகக் கடைபிடிக்கப்படுகிறது.

 

தமிழர்களிடையே நிலவும் இந்த சாதி, மனித சமத்துவத்திற்கு எதிராகவும், தமிழர் ஒற்றுமைக்கு எதிராகவும் செயல்படுகிறது.

 

இன்றைக்கு நம் தமிழ்ச் சமூகம் சாதி முகாம்களாகத்தான் பிளவுபட்டுக் கிடக்கிறது. தமிழ்நாட்டில் சாதி சங்கங்களும் சாதிக் கட்சிகளும், சாதி உணர்ச்சி – மங்கி மறைந்து போகாமல் தீவிர நிலையில் இருக்குமாறு தூண்டிவிட்டுக் கொண்டுள்ளன.

 

தமிழ் இன உணர்வு பேசுவோரில் ஒரு சாரார், “குடி வழிப் பெருமிதம்” என்ற பெயரில் தன் சாதி அடையாளங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றனர். கற்றறிந்த இளையோரிடம் தன் சாதிப் பெருமிதத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் போக்கு தோன்றி இருக்கிறது. தன் பெயருக்கு முன்னாலோ – பின்னாலோ தன் சாதிப் பெயரைப் போடும் போக்கு உருவாகியுள்ளது.

 

தன் சாதியின் தனிப் பெருமைகளைப் பேசுவோர், சாதிகளின் ஒற்றுமைக்கு, தமிழர் ஒற்றுமைக்குச் சிறிதும் பங்காற்ற முடியாது. ஒரு சாதியை நம்பி இன்னொரு சாதி வராது.

 

தமிழர்களை வளைத்துக் கொள்வதற்கும் – தமிழினத்தை வீழ்த்துவதற்கும் பா.ச.க. பாசிசவாதிகளுக்கு தமிழ்ச்சாதி புத்தாக்கம் பெருந்துணை செய்யும்.

 

தமிழ்நாட்டில் அட்டவணை வகுப்பு, பிற்படுத்தப் பட்ட வகுப்பு சாதி அமைப்புகளை பா.ச.க. தலைவர் அமித்சாவும், மற்றவர்களும் சந்தித்துப் பேசியது நாடறிந்த செய்தி. தமிழ்ச் சாதி அமைப்புத் தலைவர்கள் சிலர் இப்போது பா.ச.க. வளையத்திற்குள் இருப்பதும் நாடறிந்த செய்தி!

 

பிறப்பால் உயர்வு – தாழ்வு கற்பிப்பது தவிர, வேறு எந்தப் பயனுள்ள வேலையும் சாதிக்கு இப்போது இல்லை.

 

ஒருவர் தமிழரா அல்லது வேற்று இனத்தவரா என்று கண்டுபிடிக்க சாதி தேவை என்று தமிழின உணர் வாளர்கள் சிலர் கருத்துக் கூறுகின்றனர்.

 

இதில் நம்முடைய கருத்து : ஒருவர் தன்னைப் பற்றி என்ன கூறிக் கொள்கிறார் என்பதைவிடத் தமிழின உரிமை மீட்புக் கருத்துப் பணியில் – களப்பணியில் ஒருவர் எப்படிச் செயல்படுகிறார் என்று பார்த்துதான் அவரைத் தமிழ்த்தேசிய அணிவகுப்பில் சேர்ப்பதும், சேர்க்காததும் முடிவாக வேண்டும். இந்த அளவுகோல் மரபுவழித் தமிழர்களுக்கும் பொருந்தும்! வரலாற்று வழியில் பலநூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைத் தாயக மாகக் கொண்டு வாழும் பிறமொழி பேசு வோர்க்கும் பொருந்தும்.

 

வளர வேண்டிய தமிழின ஒற்றுமையினை, சாதியைப் புதுப்பித்து சீர்குலைக்கக் கூடாது.

 

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் பா.ச.க. பாசிச இருள் கவ்வக் கூடாது என்பதற்கான போராட்டத் திட்டம்தான் இது! இத்திட்டத்தைத் தமிழ்நாட்டிலிருந்து தொடங்க வேண்டும்!

 

தமிழ்த்தேசிய இனத்தின் தாயகப் பாதுகாப்பு, இன, மொழி, பண்பாட்டுப் பாதுகாப்பு, சனநாயகப் பாதுகாப்பு அடிப்படையில் இங்கு மக்கள் இயக்கம் வீச்சுப் பெற்றால் – இந்தியாவின் மற்ற தேசிய இனங்களும் எழுச்சி பெறவும், நம்முடன் கூட்டாகப் போராடவும் முன்வரும்! ஒருவேளை மற்றவர்கள் அவ்வாறு இணையாவிட்டால் நாம் நம் தமிழினத்தைப் பாதுகாத்துக் கொள்ள இந்த எழுச்சி அரணாகும்!

 

முதலில், கருத்துப் பரவல் – அடுத்து களப் போராட்டம் – ஆம், மாபெரும் மக்கள் எழுச்சி!

 

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோாட்டம் 2020 ஏப்ரல் இதழில் வெளியான கட்டுரை)

 

ஐயா பெ. மணியரசன், 

தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

முக்கிய குறிப்பு:
*

%d bloggers like this: