உலக சுகாதார அமைப்பை மிரட்டும் டிரம்ப்

breaking
கொரோனா வைரசால் அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பலி எண்ணிக்கை அதிபயங்கரமாக அதிகரிப்பதை தடுக்க முடியாத அதிபர் டிரம்ப், உலக சுகாதார அமைப்பையும் மிரட்டி இருக்கிறார்.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசின் மையப்புள்ளியாக அமெரிக்கா மாறியிருக்கிறது. இங்கு நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,000 பேர் பலியாகி இருப்பது அமெரிக்க மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. ஜான் ஹாப்கின்சன் பல்கலைக் கழக புள்ளி விவரங்களின்படி, 24 மணி நேரத்தில் 1,939 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 13,000த்தை தொட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 12,911 பேர் பலியாகி இருந்தனர். அதே போல. வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது.  மிக மோசமாக பாதித்துள்ள நியூயார்க்கில் மட்டும் 5,489 பேரும், நியூ ஜெர்சியில் 1,232 பேரும் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த முடியாத அதிபர் டிரம்ப், உலக சுகாதார அமைப்பின் மீது பழி சுமத்தி உள்ளார். நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர், ‘‘உலக சுகாதார அமைப்புக்கு அதிகப்படியான நிதியை அமெரிக்கா அளித்து வருகிறது. ஆனால், பயணக் கட்டுப்பாடு விதித்த நேரத்தில், எனது முடிவை அந்த அமைப்பு விமர்சனம் செய்து ஏற்றுக் கொள்ள மறுத்தது. இதுபோல், அவர்கள் பல விஷயங்களில் தவறு செய்துள்ளனர். கொரோனா குறித்து ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே அவர்கள் எச்சரித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யத் தவறி விட்டது. பல நேரத்தில் அந்த அமைப்பு தவறான முடிவுகளையே எடுக்கிறது. மேலும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இது நல்லதற்கில்லை. நாங்கள் இனி மிகுந்த விழிப்புடன் செயல்படுவோம். உலக சுகாதார அமைப்பிற்கு செலவிடும் நிதியை நிறுத்தவும் தயங்க மாட்டோம்,’’ என்றார். அதே சமயம், செனட் வெளியுறவு கமிட்டி தலைவரான ஜிம் ரிஸ்ச் கூறுகையில், ‘‘கொரோனா வைரசை கையாள்வதில் உலக சுகாதார அமைப்பு தோல்வி அடைந்துள்ளது. நோய் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அமெரிக்க மக்களின் வரிப் பணத்தை உலக சுகாதார அமைப்பிற்கு செலவிடுகிறோம். ஆனால், அந்த அமைப்பின்  தவறான கையாளுதலால் இன்று அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்,’’ என வலியுறுத்தி உள்ளார். இதற்கு உலக சுகாதார அமைப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அதன் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், ‘‘சீன அரசின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக கூறுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதொடர்பாக தனி விசாரணை கமிஷனை சந்திக்க நாங்கள் தயார்’’ என்றார். ஐநாவில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளும் உலக சுகாதார அமைப்பிற்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. இதில், ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வரை அமெரிக்கா அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.