கொரொனாவால் இறக்கும் முஸ்லீம்களை உடலை எரிப்பதா? புதைப்பதா?: ஆளுங்கட்சிக்கட்சிக் கூட்டத்தில் வாக்குவாதம்

breaking
  கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் தகனம் செய்ய வேண்டுமென்ற சிறிலங்கா அரசின் முடிவை ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தில் கடுமையாக எதிர்த்தார் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லா. இதனால் நேற்று மாலை இடம்பெற்ற ஆளுங்கட்சிக் குழுக்கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன. “சர்வதேச நியமங்களுக்கு விரோதமாக முஸ்லிம்களின் உடல்கள் கொரோனா வைரஸை காரணம் காட்டி எரிக்கப்படுகின்றன. அதனை அனுமதிக்க முடியாது. அரசு இதனை நிறுத்தி கொரோனாவால் இறக்கும் உடல்களை அடக்கம் செய்ய முன்வரவேண்டும்” என்றார் அதாவுல்லா. ஆனால் அதனை மறுத்த சுகாதார அமைச்சர் பவித்ரா , சட்டம் பொதுவானது என்றும் வேறு மதத்தவர்கள் கூட இப்படியான கோரிக்கையை முன்வைத்தாலும் அதனை அரசு ஏற்கவில்லையென கூறியதுடன் சட்டம் அனைவருக்கும் பொதுவானதென தெரிவித்துள்ளார். “ அப்படியானால் இனிமேல் தொற்றுக்குள்ளாகும் முஸ்லிம்கள் வெளியில் வர – வந்து சொல்ல அச்சப்படுவார்கள்? அப்போது என்ன செய்வது ..?” என்று அப்போது கேள்வியெழுப்பியுள்ளார் அதாவுல்லா. அதாவுல்லாவின் இந்த கருத்தால் சினமடைந்த பிரதமர் மஹிந்த “ அப்படி யாரும் செய்வார்களாயின் அதனால் வரும் பாதிப்புகளை அவர்களே பொறுப்பேற்க வேண்டுமெனவும் யார் என்ன கூறினாலும் கொரோனா காரணமாக உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்யும் அரசின் தீர்மானம் மாறாதென்றும் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவின் இந்த கருத்துக்கு ஆளுங்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவாக கருத்தை வெளியிட்டதாகவும் அறியமுடிந்தது.