சீன விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

breaking
  கொரோனா தொற்றிலிருந்து மீண்டெழுந்த சீன தேசம், தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. எனினும், கொரோனா தொடர்பான ஆய்வினை அந்நாட்டு விஞ்ஞானிகள் தொடர்ந்தும் மேற்கொண்டுவருகின்றனர். அவர்களின் ஆய்வின் பின்னர் முக்கியமான தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளனர், அதில், கொரோனா வைரஸ் காரணமாக புதிதாக பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், கர்ப்பத்தில் இருக்கும் காலத்திலேயே குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், கர்ப்ப காலத்தின் போது, தாய்மார்கள் கொரோனா வைரஸிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது மிக முக்கியமானது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக மேற்கொள்ளும் ஆய்வுகளின் போது, பிறந்த சில நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நான்கு புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஆய்வு செய்ததையடுத்தே சீன மருத்துவர்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இந்நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பிறந்த உடனேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர், ஏனெனில் அக் குழந்தைகளின் தாய்மாருக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. நான்காவது தாய்க்கும் குழந்தைக்கும் குழந்தை பிறந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதேவேளை ஒரு குழந்தைக்கு பிறந்து 30 மணித்தியாலத்தின் பின் கொரோனா அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளது. அதேபோன்று, இரண்டு குழந்தைகள் பிறந்து ஐந்து நாட்களில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தைக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந் நான்கு குழந்தைகளை ஆய்வுக்குட்படுத்திய ஆராய்ச்சியாளர்களால் தாயின் கருப்பையில் இருக்கும்போதே தொப்புள் கொடி வழியாக குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்பதை 'நிராகரிக்க முடியவில்லை' இருப்பினும், இதற்கு நேரடி ஆதாரங்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை என்று கூறியுள்ளார்கள். வைத்தியசாலையில் இருந்த காலத்திலும் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் இருந்தபோதும், குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு சிறப்பு நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் அதற்கான வாய்புகள் 'குறைவாக' இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், இது தொடர்பான மேலதிக ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டாலும், கர்ப்பிணிப்பெண்கள் தம்மை பாதுகாத்து கொள்வதில் இரட்டிப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் சீனா விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்