தடம் அழியா நினைவுடன் ... மே-13 பகுதி -3

breaking

இரவு நேரந்தான், ஆனாலும் எல்லாம் பகல்போலதான் இருந்தது. சிறிலங்காப் படைகள் தமது அச்சத்தைப் போக்க இயற்கையின் இருளை மறைத்து வானத்தில் பரா வெளிச்சக் குண்டுகளால் ஒளிப்போர்வையை போர்த்தபடி இருந்தார்கள். வேவுவிமானம்  தலைக்கு மேலால் சுற்றிக்கொண்டுதான் இருந்தது. எதிரியின் படைக்கலங்களிலிருந்து பாய்ந்துவரும் ரவைகளும் எறிகணைகளும் வீழ்ந்த வண்ணம்தான் இருந்தன. மக்களும் பாதுகாப்பைத்தேடிநகர்ந்து கொண்டுதான் இருந்தார்கள். நாங்களும் மெல்ல மெல்ல கால்போன போக்கில் நடந்து வட்டுவாகல் பகுதியை அண்டிய இடத்தை அடைந்திருந்தோம்.

அந்தப்பகுதி எமக்கு பழக்கமான இடம்தான். எங்கள் கடற்சண்டையணிகளின் பெரும் தளமாக அது இருந்தது. அடர்நத் பனைமரத் தோப்பு, பற்றைக் காடுகள், மணல்நிறைந்த வெட்டவெளியென பலதரப்படட் நிலப்பரப்பைத் தாங்கியிருந்த அந்த நெய்தல்மண் இப்போது அனைவரையும் சுமக்கத் தொடங்கியிருந்தது.

நாங்களும் அந்த இடத்தில்  பற்றைகளாய் கிடந்த ஒருபகுதியை எமக்கான இடமாக்கி பாதுகாப்பகழியை அகழத் தொடங்கினோம்.

மண்ணை வெட்டுவதற்கான எந்த உபகரணமும் இப்போது எங்களிடம் இல்லை. கையில் எம்பிட்ட தடியொன்றை எடுத்து கிண்டிக்கிண்டி கையாலே மண்ணை வெளியில் எடுத்தோம். அது மணற்பாங்கான இடமாக இருந்ததால் மூன்றுபேரும் முழுமூச்சாக நின்று குறுகிய நேரத்திலே காப்பகழியை அமைத்து விட்டோம்.

பக்கத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் நாங்கள் காப்பகழி வெட்டத் தொடங்கிய நேரத்தில் இருந்தே மாறி மாறிக் கேட்டுக் கொண்டு இருந்தது. ஆனால் இப்போது அந்தக் குழந்தையின் குரல் அடைத்துப்போயிருந்தது. களைத்துப்போய் அமைதியாகும் குழந்தை மீண்டும் சிலநொடிகளிலே அழத்தொடங்கிவிடும். ஏன் குழந்தை அழுகிறது? நித்திரைக்கு அழுகிறதா? இல்லைப் பசியால் அழுகிறதா? எதுவும் எங்களுக்குப் புரியவில்லை. அதற்கு மிஞ்சியும் அந்த அழுகுரலைக் கேட்டுக்கொண்டு இருக்க மனம் பொறுக்கவில்லை. குயிலைக் காப்பகழியடியில் இருத்தி விட்டு நானும் கவியுமாய் குழந்தை அழும் இடத்தை அடைந்தோம்.

பாதுகாப்பகழி எதுவுமில்லாமல் பற்றையருகே ஒரு உருவம் குழந்தையை மடியில் வைத்திருப்பது தெரிந்தது. பக்கத்தில் சிறிய உருவம் ஒன்று நிலத்தில் படுத்திருந்தது.

''அக்கா.. அக்கா ...''

மெல்லக் குரல் கொடுத்துப் பார்த்தோம் எந்தப் பதிலுமில்லை. கொஞ்சம் உரக்க கூப்பிட்டுப்பார்த்தோம்..

''அக்கா அக்கா...''

''யார் ..என்னையா கூப்பிடுறீங்கள்..''

ஓர் ஆண்குரல். அக்கா என்று நினைத்து அழைத்தால் அது அண்ணாவாக இருக்கே..மனதிற்குள் ஒருமாதிரியாக உணர்ந்தாலும் சமாளித்துக் கொண்டோம்.

''குழந்தையின்ர அம்மா எங்க..., நிறைய நேரமா பிள்ளை அழுது கொண்டே இருக்கே...அதுதான்..''

கேட்க நினைத்ததைக் கேட்டுவிட்டோம்.

''அவா போயிற்றா..எங்க எல்லாரையும் விட்டிட்டுப் ஒரேயடியா போயிற்றா.. விழுந்த செல் எங்க எல்லாரையும் ஒன்றாப் பறிச்சின்ரு போயிருக்கலாம்... இப்ப எங்களத் தவிக்கவிட்டிட்டு போயிற்றா..''

அந்த அண்ணா வாய்விட்டு அழத்தொடங்கி விட்டார். நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அந்தத் துயர் எங்கள் நெஞ்சையும் அடைத்தது. அடுத்துப் பேசமுடியாது அமைதியானோம். அந்த அண்ணாவே தன்னைச் சமாளித்துக் கொண்டு பேசினார்.

''பிள்ள பசியிலதான் அழுகிறாள்.. நாங்க இருந்த இடத்திலேயே எல்லாத்தையும் விட்டிட்டு வந்திட்டம். பிள்ளைக்கு தண்ணி கொடுக்க 'பால்புட்டி' கூட எடுத்திற்று வரேல்ல..  பக்கத்தில பிள்ளை அழுகிறதப் பார்த்தவர்கள் தேத்தண்ணி ஆத்திக் கொண்டு வந்து தந்தவை.. பிறந்து பத்து மாதம்தான்.. கப்பால பிள்ளைக்கு வடிவா குடிக்கத் தெரியல்ல.., மூதத்வன் தாய் சிதறிக் கிடந்தத கண்ணுக்கு நேர பார்த்தவன்.. பிள்ளை பயந்து போய் இருக்கு.., என்னோட கூட எதுவும் பேசிறானில்ல.., பயந்து படுத்திருக்கிற பிள்ளையப் பார்க்கிறதா இல்லை பசியில அழுகிற பிள்ளையப் பார்க்கிறதா எதுவுமே புரியாம நான் குழம்பிப் போயிருக்கிறன்....''

விம்மி விம்மி அழும் அந்த அண்ணாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாதவர்களாக அப்படியே உறைந்துபோய் நின்றோம்.

''..நாங்கள் உண்டியல் சந்திக்கு அங்கால நந்திக்கடல் பக்கமாத்தான் இருந்தனாங்கள்.. பொழுதுசாயிற நேரமா எங்கட பக்கத்தால துடைச்செடுத்திட்டான்...ஒரு மூடின பங்கருக்கதான் நாங்க இருந்தனாங்கள்..., செல் ஒன்று கூவிக்கொண்டு வந்தது.., மடியில வைத்திருந்த பிள்ளையக் காப்பாற்ற பிள்ளைக்கு மேல அவள் விழுந்து படுத்து  ஒரு நொடிக்க கண்ணுக்கு முன்னாலேயே அவள் சிதறிப்போனாள்..

என்னால நம்பவே முடியல ..எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு..ஆனா எல்லாம் நடந்து முடிந்து போயிற்று... அவளுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட இன்னும் விடேல்ல.. அந்த பங்கருக்குள்ளேயே அவளப் அப்படியே விட்டிட்டு வந்திட்டன்..''

அவருக்கு சொல்லி அழுவதற்கோ, துன்பத்தில் பங்கெடுத்து ஆறுதல் சொல்வதற்கோ யாரும் இல்லை. முதல்முதலாக தனது துயரை எங்களிடம் தான் பகிர்ந்து கொள்கிறார்.அவரின் ஆற்றாமையை அதன் வலியை எங்களால் உணர முடிந்தது.பொதுவாகவே மற்றவர் துயரைத் தாங்கமுடியாத எங்களால் எம்மையறியாமல் வழிந்தோடும் கண்ணீரைக் கட்டுபப்டுதத் முடியவில்லை..

கவி எனது கைகளை இழுத்துக் கொண்டு சற்றுத் தள்ளி கூட்டி வந்தாள்.

''அக்கா அந்தப்பிள்ளையப் பார்க்க பாவமா இருக்கு.. பச்ச மண் பசியால துடிக்கிது.. கொஞ்ச அங்கர்மாவும் சீனியும் கிடக்கு கொடுப்பமா..''

''இருந்தா ஓடிப்போய் எடுத்தின்ரு வா..''

அடுத்தநொடி அவள் பால்மாவும் சீனியோடும் வந்து நின்றாள். கவி சிறந்த நிர்வாகி. இல்லையில்லை என்று சொல்லிச்சொல்லியே ஒவ்வொருநாளும் தேனீர் தருபவள். அதையும் விட இவ்வளவு மிச்சமாகவும் வைத்திருக்கிறாள். ஆச்சரியமாக இருந்தது.

''அதுசரி அக்கா அழுதுகொண்டு இருக்கின்ற பிள்ளைய வைத்துக் கொண்டு என்னென்று பிள்ளைக்கு பால்மா கரைக்க முடியும்..''

அவள் கேட்பதிலும் நியாயம் இருந்தது. நேரத்தைப் பார்த்தேன் அதிகாலை 3.50 தான் ஆகிறது. அந்த நேரத்திலும் ஆங்காங்கே அடுப்புகள் எரிந்துகொண்டுதான் இருந்தன.பலர் இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருந்தார்கள்.

''சரி வா பாப்பம்..''

இருவரும் அடுப்பு எரிந்து கொண்டிருந்த ஓர் இடத்தடிக்குச் சென்றோம். மறைப்பு எதுவுமில்லை. வெட்டவெளியான இடத்தில் வடட் வடிவில் மணலை ஒதுக்கி பாதுகாப்பரண் அமைத்திருந்தார்கள். அதற்குள் மூன்று நாலு பேர் படுத்திருப்பது தெரிந்தது. அடுப்படியோடு நிற்பது ஒரு அக்கா என்பது தெளிவாகத் தெரிந்தது. பக்கத்தில் மண்ணரணில் சாய்ந்தபடி ஒருவர் இருந்தார். அந்தக்காவிடம் கேடப்தென்று முடிவெடுத்தோம்.

''அக்கா..''

கவிதான் மெல்ல அழைத்தாள்.

''யாரது..''

பதற்றத்தோடு மண்ணரணில் சாய்ந்திருந்தவர் எழும்பினார்.

'' அது நாங்கள்.. '' எங்கள் உடை நாங்கள் யாரென்பதை அடையாளம் காட்டியிருக்க வேண்டும்.

'' என்ன தங்கச்சியவை...''

அந்த அண்ணா கேட்டபோது குழந்;தை பசியால் அழுவதைப்பற்றியும் அந்தக்குழந்தையின் தாய் இறந்ததைப்பற்றியும் சொன்னோம்.எங்களிடட் கொஞ்சம் மாவும் சீனியும் கிடக்கு சுடுதண்ணி இருந்தா கொண்டுபோய்க் கொடுகலாம் என்றுதான் வந்தனாங்கள்  நிலமையை அவர்களுக்கு சொன்னபோது அவர்கள் கவலைப்படட் தோடு நின்றுவிடாது அவர்கள் துயரை தம்துயராக நினைத்து உதவவும் முன்வந்தார்கள்.

''குழந்தையின்ர அழுகுரல் ஒன்று மாறிமாறிக் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.இப்படியென்று தெரியாமப் போச்சே.. நாங்களும் மூன்று குழந்தைகள வைச்சுக்கொண்டுதான் இருக்கிறம்.யாருக்கு எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியாது.., இந்த நேரத்தில சகமனிதனுக்கு சகமனிதன்தான் உதவி செய்யவேணும்..,குழந்தை குடிக்கிற பால்மா எங்களிட்ட இருக்கு.. மீனா நீ பிள்ளைக்கு பால்மாவைக் கரை நான் அவையக் கூட்டீன்ரு வாறன்...''

கருணை உள்ளங்களில்தான் கடவுள் இருப்பார். கடவுளை நேரில் பார்த்த மாதிரி இருந்தது.

''வாங்க தங்கச்சியவை போவம்..''

உற்சாகமாக எழுந்து வந்தார் அந்த அண்ணா.இப்போதும் எங்கள் விழிகள் கனத்தன துயரில் அல்ல அவருக்குள் இருந்த மானிட நேயத்தைப் பார்த்து.

''எனக்கும் ஒரு தங்கச்சி மாலதி படையணியில இருந்தவள். புளியங்குளச் சண்டையில அவள் வீரச்சாவடைந்திட்டாள்..

அந்த அண்ணர் சொல்ல வந்த கதையைச் சொல்ல விடாது தடுதத்து அந்தக் குழந்தையின் அழுகுரல்.

'' அட கடவுளே .. அழுதழுது பிள்ளையின்ர குரலே அடைச்சுப் போயிற்ரே..''

கூறிக் கொண்டே வேகமாய் குழந்தை இருந்த இடத்தை அடைந்தார். இருவரும் முன்பின்; அறிமுகமில்லாதவர்கள்தான். ஆனாலும் உரிமையோடு குழந்தையின் தந்தையை அழைத்தார்.

''வாங்க தம்பி எங்கட இடத்துக்குப்போவம்.. பிள்ளை பசியால அழுதழுது களைத்துப் போயிற்று...தனிய உங்களால சமாளிக்க முடியாது.. வாங்க..தம்பி..''

அவரது கையில் இருந்த குழந்தையை வாங்கினார்.

''நீங்க மற்றப் பிள்ளையத் தூக்குங்கோ.. பயப்படாம என்னோட வாங்க.., தங்கச்சியவை சொல்லாட்டா எனக்குத் தெரியாது...,தங்கச்சியவை நீங்க இதிலதானே இருக்கிறீங்கள்?''

எங்கள் பதிலைக் கூட எதிர்பார்க்காது குழந்தையை அணைத்துக் கொண்டு மளமளவென நடக்கத் தொடங்கினார். அந்த அண்ணாவின் பின்னே பிள்ளையைத் தூக்கிக் கொண்டு மற்ற அண்ணாவும் புறபடத் தயாரானார்.

''நன்றி தங்கச்சியவை..பத்திரமா இருங்கோ..'' இருவரும் ஒருவர்பின் ஒருவராகச் சென்று கொண்டிருந்தார்கள் மனதில் பெரும் சுமை இறங்கியது போன்ற உணர்வு..

''அட இதக் கொடுகக் மறந்திட்டமே..''

கவி கையில் வைத்திருந்த சீனியையும் மாவையும் காட்டினாள்.

''ஓடிப்போய் கொடுத்திற்று வா.. சிறியவர்களை வைத்திருப்பவர்களுக்கு உதவியா இருக்கும்''

அவள் பின்னால் சென்ற அண்ணனிடம் கொடுத்து விட்டு ஓடி வந்தாள்.

இருவரது மனசிலும் பெரிதாக சாதித்து விடட் திருப்தியும் மனநிறைவும் இருந்தது. கிழக்கு வானில் விடிவெள்ளி பூகக்த் தொடங்கி இருந்தது. மகிழ்வோடு எங்கள் இருப்பிடத்தை அடைந்தோம்.

நாளை தொடரும்... தடம் அழியா நினைவுடன் … மே-13 - பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-13 - பகுதி 2

 தாரகம் இணையத்திற்காக அ. அபிராமி