தடம் அழியா நினைவுடன் ... மே-13

breaking

'டமார்' என்ற ஒரு பேரோலி, அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த என்னை திடுக்கிட்டு விழிக்க வைத்தது. பொலுபொலு என்ற சத்தத்துடன் எறிகணைத் சிதறல்கள்  ஆங்காங்கே தகரத்தில் பட்டுத்   தெறித்தன. எறிகணைத் துண்டொன்று மண்மூட்டைக்கு மேல பட்டிருக்க வேணும் , சொர சொர என்று கழுத்துக்கு நேரே மண்ணைக் கொட்டியது. வாய் மூக்கு எல்லாம் ஒரே மண் சடாரென்று எழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.

இப்போதும் வானத்தில் எரிந்து கொண்டிருந்தன வெளிச்சக் குண்டுகள். தலைக்கு மேலே நின்று இரைந்தபடி, படம்பிடித்துக் கொண்டிருந்தது ஆளில்லா விமானம். கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் அருகருகே வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்த ரவைகள், மோட்டார் ரக எறிகணைகள். எதுவும் சற்றுக்கூட ஓய்ந்ததாக இல்லை. மணிக்கட்டைப் பார்த்தேன்.நேரம் அதிகாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

''அட நாலு மணிக்குத்தானே காவல் கடமைய மாத்தி விட்டனான். அதுக்குள்ள ஐந்து மணியாச்சா..''

இனி எப்படிப் படுத்தாலும் தூக்கம் வரப்போவதில்லை. தலைக்கு வைத்துப் படுத்திருந்த உடமைப் பையிலிருந்து சீப்பை எடுத்துத் தலையை வாரிக் கட்டிக் கொண்டேன். கீழே விரித்துப் படுத்திருந்த உரப்பையை மடித்து வைத்துவிட்டு முகம் கழுவ வெளியில் வந்தேன். தலையை உரசிக்கொண்டு போவதுபோல் சீறிக் கொண்டு போனது எறிகணை ஒன்று.

''அக்கா... உள்ளவாங்கோ.. கனோனால பொழியப்போறான்...ஓடி வாங்கோ..''

பக்கத்தில் காவல் கடமையில் நின்றவள் இரண்டு மூன்று அடி தள்ளி நின்ற என்னை அழைக்க பத்து வீடு கேட்க கத்தினாள்.அவள் சொல்லி வாய் மூடவில்லை. மூச்சு விடாமல் பொழியத் தொடங்கியது பல்குழல் எறிகணை.

''ம்.. விடியக் காத்தாலேயே தொடங்கீற்றான்... இண்டைக்கு எத்தின பேற்ற உயிரப்பறிக்கப் போறானோ தெரியேல்ல...''

அவள் வாய் முணுமுணுத்தது. அதற்குள் மற்றவள் தேனீரோடு வந்தாள்.

''கிடந்த சீனியப் போட்டுத்தான் தேத்தண்ணி ஊத்திருக்கு. இண்டையோட அதுகும் சரி .''

கிட்டத்தட்ட மூன்று நாலு நாளா இதையேதான் அவளும் சொல்லிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் விடிந்ததும் எப்படியோ தேத்தண்ணி ஊத்தித் தந்திடுவாள். நாங்கள் இப்போது இருக்கும் இடம் உண்டியல் சந்தியடிக்கு சற்று முன்னதாக இருந்தது. அந்த இடத்துக்கு வந்து இரண்டு நாடக்ள் தான் ஆகியிருந்தது. என்னோடு இன்னும் இரு போராளிகள். இசை செஞ்சோலையில் வளாந்தவள். கவி இரு மாவீரர்களின் சகோதரி.இருவருமே எந்தச் சூழ்நிலையிலும் களமுனைக்கு அனுப்பக்கூடாது என்ற தலைமைச் செயலகத்தின் உறுதி மொழியோடு நிற்பவர்கள்.

எமக்கு முன்னதாக அந்த இடத்தில் இருந்துவிட்டு சென்றவர்கள் அமைத்திருந்த பாதுகாப்பகழி இப்போது எங்களின் பாதுகாப்பிடமாக இருந்தது.

கிழக்கு வானம் மெல்ல வெளிக்கத் தொடங்கியது. ஆங்காங்கே மூட்டை முடிச்சுகளோடு மக்கள் நகரத் தொடங்கியிருந்தார்கள். பணியின் நிமிர்த்தம் முன்னரங்கிற்கு சென்று வர வேண்டிய தேவை எனக்கிருந்தது. புறப்படத் தயாரானேன்.

முன்னரங்கு என்பது பல கிலோ மீற்றர்கள் தள்ளி இருக்கும் இடமல்ல. நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு 800 மீற்றருக்கு உடப் ட்ட தூரம்தான். பொடிநடையாப்போனா 4-5 நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் வண்டுக்கு மறைப்பெடுத்து, எதிரியின் தாக்குதல்களுக்கு காப்பெடுத்துச் செல்ல ஒரு மணி நேரத்துக்கு மேலாக எடுத்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த தரப்பால் கொட்டகைகள் சுனாமி அழிவுக்குப்பின் கட்டப்பட்ட வீடுகள் என மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்த அந்தப் பகுதி இப்போது கொடும் சூறைக்காற்றில் சிக்குண்டு அழிந்த இடமாய்க் காட்சி தந்தது. சாம்பல் மேட்டின் மேல் நிற்பது போன்ற உணர்வு. காப்பகழிகளுக்குள்ளே புதைந்தும் புதைபடாமலும் கிடந்த உடலங்களின் நெடி நெஞ்சை நெருடியது. காகங்கள் அங்கும் இங்குமாய் பறந்து பறந்து மனித உடலங்களை தமக்கு இரையாக்கிக் கொண்டு இருந்தன.

அதற்குள் நின்றுதான் போராளிகள் எதிரியை எதிர்த்துக் களமாடிக் கொண்டிருந்தார்கள். களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்த போராளிகளின் மனவுறுதியை ஒப்பிட்டுச் சொல்ல எதுவுமே இல்லை.

ஆர்.பீ.ஜீ எறிகணை ஒன்று ஸ்ஸ்ஸ்.. என்ற இரைச்சலுடன் காதை உரசிச் சென்றது.விழுந்து படுத்தேன்.உடலில் ஏதாவது எறிகணைத் துண்டு பட்டிருக்கும் என்று நினைத்தேன்.ஆனால் அப்படி எதுவும் பட்டதாக தெரியவில்லை.

''அக்கா பார்த்து வாங்கோ..., நிமிர்ந்து நடந்தால் தலைதான் பறக்கும்...வென்ரெடுத்து வாங்கோ...''

முன்னரங்கில் நின்ற போராளி உரத்த குரலில் சொன்னான்.

ஒரு மாதிரி வென்ரெடுத்தபடியே முன்னரங்கை அடைந்தேன். குயிலினி என்னைக் கண்டு விட்டு  ஓடிவந்தாள். சுடரொளியின் கையில் பெரிய கட்டுபோடப்பட்டிருந்தது. அவள்தான் எங்களது அணியை வழிப்படுத்திக் கொண்டு இருப்பவள்.

''என்ன சுடர் காயப்பட்டத அறிவிக்கவே இல்லையே.. பின்னுக்கு வந்து மருந்தாவது கட்டியிருக்கலாம் தானே....''

அக்கறையோடு நான் சொன்னேன்.அவள் சிரித்தாள்.

''என்னக்கா..இதெல்லாம் பெரிய காயமே..இதவிடப் பெரிய காயக்காரர் எல்லாம் லைனில நிக்கிறாங்கள். இஞ்ச பாருங்க குறிபார்த்துச் சுட கண்ணிருக்கு..துப்பாக்கி விசை வில்லை அழுத்த வலக்கை விரலிருக்கு ..அதவிட என்னால முடியும் எனகிற மனத்துணிவு இருக்கு.. இதவிட வேற என்னக்கா வேணும்....''

அவளுக்குள் இருந்த ஓர்மம் என்னை நெகிழ வைத்தது. எவ்வளவு தற்துணிவு. எந்தப் படைவலுவாலும் தகர்க்க முடியாத ஆன்ம பலம் என்ற ஆயுதத்தைத் தாங்கி களங்களை நிறைத்து நிற்கும் இந்தக் காவல் தெய்வங்களை இந்த மண் ஒருபோதும் மறந்து போகக்கூடாது. எனக்குள் வேண்டிக் கொண்டேன்.

எனது பணியை முடித்துக் கொண்டு இருப்பிடத்துக்கு திரும்பியபோது நேரம் நண்பகலைக் கடந்து விட்டது.

எங்கும் களீர் பளீர் என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறும் இரும்புத் துண்டுகள். எங்கே வீழ்கிறது எங்கே வெடிக்கிறது என்பதைக் புரிந்து கொள்ள முடியாவிடட் லலும் ஒவ்வொரு இடமாய்க் கேடகு; ம் எங்கள் உறவுகளின் அவலக்குரல்கள் அவை எங்கே வீழ்ந்திருக்கிறது என்பதை அடிக்கடி உணர்த்திக் கொண்டிருந்தது. எங்களது இருப்பிடத்தில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கும் அக்கா தலையை ஒரு துணியால் போர்த்தி மூடிக் கொண்டு குனிந்தபடியே ஓடி வந்தார்.அவருக்கும் எனக்கும் நீண்டநாள் பழக்கம்.

''வெளியில நிக்காதையுங்கோ..உள்ள வாங்க அக்கா..''

அவரையும் எங்கள் காப்பகழிக்குள் அழைத்தேன். இருந்து ஆறுதலாகப் பேசுமளவுக்கு சூழலில்லை.

''சின்னாக்களையும் வைச்சுக் கொண்டு இனி இதில இருக்கிறது கொஞ்சம் கூட பாதுகாப்பில்ல. நாங்க வெளிக்கிடப்போறம். அதுதான் சொல்லீற்றுப் போகலாம் எண்டு வந்தனான்.''

அந்த அக்காவின் முகத்தில் பதற்றம் கவலை என பலவித உணர்வுகள் ஓடிக் கொண்டிருந்தது. எப்போதும் துருதுருவென்று இருக்கும் அவர் விழிகளில் சொல்ல முடியாத சோகங்கள் நிறையவே தேங்கிக் கிடக்கும். ஆனால் இன்று அது வழமைக்கு மாறாக நிறையவே தெரிந்தது.

இந்த நெருக்கடியான சூழலுக்குள் ஐந்து சின்னச் சின்ன குழந்தைகள், கூடவே வயதான அம்மா அப்பா என ஒரு பெரும் குடும்பத்தை தனி ஒருவராகத் தாங்கிக் கொண்டு இருப்பவர் அவர்.

சுற்றுமுற்றும் விழிகளை ஓடவிட்டுவிட்டு இரகசியக் குரலில் என்னோடு பேசினார்.

''இஞ்சே..ராத்திரி பிள்ளைகள் எல்லாம் நித்திரைக்குப் போன பிறகு தங்கச்சியும் அவரும் வந்தவ''

அக்காவின் குரல் உடைந்து விழியோரம் கசிந்தது.

''ஏனக்கா.. ஏன் அழுகிறீங்கள். அழாதையுங்கோ அக்கா ''

அவரை ஆறுதல் படுதத் முயன்றேன்......

நாளை தொடரும்
தாரகம் இணையத்திற்க்காக அ . அபிராமி