தடம் அழியா நினைவுடன் … மே-13 - பகுதி 2

breaking

''எத்தனை பெரிய ஆக்களாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு அவை அம்மா அப்பாதானே.., அதுகும் சின்னவனுக்கு வடிவா ஒருவயது கூட ஆகேல்ல.., வாயால சொல்லத் தெரியா விட்டாலும் பிள்ளை அம்மான்ர அணைப்பைத் தேடி ஏங்கிறத ஒரு தாயா நான் உணர்ந்திருக்கிறன். பெரியவன் சொல்லவே தேவையில்ல.. அடிக்கடி அம்மா அப்பாவக் கேட்டு அடம்பிடித்து அழுவான்....பச்ச மண்ணுகள் தானே அதுகளுக்கு என்ன தெரியும்...''

பேசமுடியாது தடுமாறினார்.

''கொஞ்சம் தண்ணி குடிக்கிறீங்களாக்கா..''

போத்தலில் நிரப்பி வைத்திருந்த தண்ணீர் எடுத்துக் கொடுத்தேன். குடித்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.

''இரவு ஒரு ஒன்பது மணி இருக்கும். இரண்டு பேரும்; வந்திச்சினம். எனக்கு மனசெல்லாம் இனம்புரியாத மகிழ்ச்சி. இப்பதான் பிள்ளையல் படுத்தவ. இரண்டுபேரையும் பார்த்தா சந்தோசப்படுவாங்கள். நான் பிள்ளையல எழுப்பீற்று வாறன்...''

ஓடிப் போக முயன்ற என்னை தங்கச்சிதான் தடுத்தாள்.

''வேண்டாமக்கா.., நாங்க பிள்ளைகள் படுக்க முதலே வந்திட்டம். இந்த தரப்பால் ஓட்டைக்குளால எல்லாத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனாங்கள். பிள்ளைகள் நித்திரையாப் போகட்டும் என்று வெளியிலேயே நிண்டிடட்ம்..''

எனக்குத்  தூக்கி வாரிப் போட்டது.

''ஏன்? பிள்ளைகள் பார்த்தா எவ்வளவு சந்தோசப்படுவாங்கள்.''

நான் பிள்ளைகள் நிலையிலிருந்து பேசினேன். அவள் தனது நிலையிலிருந்து பேசினாள்.

''நாங்கள் போகவேணுமக்கா.., பிள்ளையல் எங்களப் பார்த்து நிறைய நாளாயிற்று.., இப்ப பார்த்தா விடமாட்டாங்களக்கா...,நிலமையச் சொல்லிப் புரிய வைக்கும் பக்குவப்படட் வயசு அவன்களுக்கு இல்லை..,ஏற்கனவே அம்மா அப்பான்ர ஏக்கத்தில இருக்கிற பிள்ளைகளுக்கு கொஞ்ச நேர மகிழ்ச்சியக் குடுத்திட்டு அதத் திரும்பவும் பறிச்சிற்றுப் போகக்கூடாது..''

இருவரும் கதைத்துப்பேசி தங்களுக்குள்ள தீர்க்கமான முடிவெடுத்து விட்டுத்தன் வந்திருக்கினம். பிள்ளைகள் அழுது கவலைப்பட்டு மனம் வருந்துவதைப் பார்க்கின்ற தைரியம் அவர்களுக்கும் இல்லை.

வானத்தில் எரிந்து கொண்டிருந்த பரா வெளிச்சத்தில் அவள் முக உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் போர்க்கோலத்தில் கையில் ஆயுதங்கள் தரித்து எப்போதும் போல் கம்பீரமாகவே வந்திருந்தார்கள். கையில் இருந்த ஆயுதத்தை காப்பாகப் போடப்பட்டிருந்த மண்மூட்டை மீது பத்திமாக வைத்துவிட்டு காப்பகழிக்குள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை ''ரோச்லைற்'' வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

துயர் நெஞ்சை அடைக்க நான் வெளியால வந்திட்டன்.

''பெற்ற பிள்ளைகள அவர்களுக்கே தெரியாம மறைந்து நின்று பார்க்கிற கொடுமை எந்தப் பெற்றவர்களுக்குமே வரக்கூடாது.''

விம்மி வெடித்த அழுகையை அடக்கிக்கொண்டு தேனீர் தயாரிக்க வந்தேன்.

சத்தமின்றி பின்னாலே அவர்களும் வந்து விட்டார்கள்.

''தேத்தண்ணி ஒன்றும் வேண்டாமக்கா..நாங்க வெளிக்கிடப் போறம்..''

அதற்கு மிஞ்சி அங்கு நிற்பதற்கு இருவராலும் முடியாது என்பது எனக்குத்  தெரியும். அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டு வெளியில் வந்தார்கள். கடைசியா வெளியில வந்து என்னுடைய கையப் பிடித்து,

''அக்கா பிள்ளைகள் பத்திரம்.. திரும்பவும் எல்லாரையும்  பார்க்கிற சந்தர்ப்பம் எப்ப கிடைக்குமோ தெரியாது..நாங்க போயிற்றுவாறம் ..''

அவளது கை எனது கைகளை இறுகப்பற்றிக் கொண்டது. ''அக்கா போயிற்று வாறன்..பிள்ளைகள் கவனம்..''

இப்போதும் அந்தக் குரல் என் காதுகளில் எதிரொலித்தபடி இருக்கு. எப்போதும் கம்பீரமாக இருக்கும் அவளின் குரல் புறப்படும் நேரத்தில் உடைந்திருந்தது. என்னால தாங்க முடியேல்ல. நான் கலங்கினால் அவளும் கலங்குவாள். என்னைத் திடப்படுத்திக் கொண்டேன். ''

 நீ... பிள்ளைகளைப் பற்றி கவலைப்படாத, நானிருக்கிறன், கவலைப்படாம போயிற்றுவா..''

அவளை வழியனுப்பி வைத்திட்டன்.ஆனால் அதில இருந்து என்ர மனசு நிம்மதிய இழந்து தவிக்கிறமாதிரி இருக்கு. அவள் என்ர கையப்பிடித்த பிடியும் அதவிடேக்க இருந்த ஏதோ ஒருவித உணர்வும் இப்பவும் எனக்கு ஒரு மாதிரியாவே இருக்கு. பிள்ளைகளுக்கு முன்னால எதையும் வெளிக் காட்ட முடியேல்ல..

அவரது தவிப்பு எனக்குப் புரிந்தது.எதைச்சொல்லித் தேற்றுவது என்று புரியவில்லை. அவர் புறப்படத் தயாரானார்.

''அக்கா இப்ப நீங்க தைரியமா இருக்கவேண்டிய நேரம்...நீங்க உடைந்து போனா பிள்ளைகளப் பார்க்கிறது யாரு.. எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.கவலைப்படாம போயிற்று வாங்க அக்கா..., தாறு மாறா ரவுண்சுகள் கீசிக்கீசி வருது.. பாத்துப் பத்திரமா போங்கோ.... எதைப்பற்றியும் யோசிக்காதையுங்கோ.. இப்ப உங்கட மூன்று பிள்ளைகளோட தங்கச்சின்ர இரண்டு பிள்ளைகளுமா ஐந்து பிள்ளைகளப் பாதுகாக்கிற பெரும் பொறுப்பு உங்களிட்ட இருக்கு..

''ஏதேதோ ஆறுதல் சொல்லி அவரை அனுப்பி வைத்துவிட்டேன். ஆனாலும் அவர் சொன்ன கதையின் காட்சி என் மனக்கண்ணில் படமாய் வந்து கொண்டே இருந்தது.

நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தங்கள் குழந்தைகளை விட, தாய்நாட்டைக் காப்பாற்றும் கடமையை நேசிக்கும் அந்த அர்ப்பணிப்பு எந்த அளவுகோலாலும் அளவிட முடியாதது.

இவர்களைப் போல இன்னும் எத்தினபேர்.... தங்கட பிள்ளைகளை பெற்றவர்களிடமும் உறவுகளிடமும் ஒப்படைத்து விட்டு  தாங்கள் வரித்துக் கொண்ட தேசவிடுதலைக் கனவை நெஞ்சினில் சுமந்து களத்தில நிற்கிறார்கள். அவர்கள் மீதான மரியாதை இன்னும் உயாந்தது.

பசி என்ற உணர்வு மரத்துப்போயிருந்தாலும் அடிக்கடி வெளியில் எட்டிப்பார்த்தபடி இருந்தாள் கவி. சாப்பாடு கொண்டு வரும் தம்பியை இன்னமும் காணவில்லை. இந்த குண்டு மழையைக் கடந்து அவனால் மட்டும் எப்படி வரமுடியும்.

''ஐயோ என்ர பிள்ளையக் காப்பாற்றுங்கோ.. என்ர பிள்ளையக் காப்பாற்றுங்கோ..''

கதறிக் கொண்டு ஒரு ஏழு வயது மதிக்கத்தக்க குழந்தையைக் கையில் ஏந்தியபடி ஓடிக்கொண்டு இருந்தார் நடுதத்ர வயது மதிக்கத்தக்க ஒரு தந்தை.அவரது முதுகிலும் இரத்தம் சொட்டிக் கொண்டு இருந்தது. கொஞ்சம் தள்ளி அவரது மனைவியாக இருக்கலாம்.நடக்க முடியாது அந்த இடத்திலேயே இருந்தபடி கதறிக் கொண்டு இருந்தார்.

'' பத்து வருசமாத் தவமிருந்து பெத்த பிள்ள..எனக்கு முன்னால என்ர பிள்ளையப் பறிச்சிராத கடவுளே..''

கத்துவதற்குக் கூட திராணி அற்று இருந்தது அந்தத் தாயின் கதறல். ஓடிப்போய் இடுப்பில் கட்டியிருந்த சாரத்தைப் கிழித்து துடைப் பகுதியைச் சிதைத்து கொட்டிக் கொண்டு இருந்த இரத்தத்தைத் தடுத்து முடிந்தவரை கட்டுப்போட்டு விட்டேன். அந்த இடத்தில் அவரை அப்படியே விட்டுவிட்டுப் போக என்னால் முடியவில்லை.

அவரது நல்ல காலமாக இருக்கவேணும்.முன்னரங்கில் விழுப்புண்தாங்கிய போராளிகளை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தில் அவரை ஏற்றி விட்டேன்.

உடலெங்கும் இரத்தம் பிசுபிசுத்தது. அநத் குண்டு மழை நடுவிலும் மறைப்போடு இருந்த கிணற்றில் மளமளவென்று அள்ளிக் குளித்துவிட்டு ஓடிவந்தேன்.

வெளியில் உடுப்புகளக் காயவிடமுடியாது. உள்ளேயே உலரவிடடேன்.அதையும் விட்டால் மாற்று உடுப்பே இல்லாமல் போய்விடும்.

''அக்கா சாப்பாடு வருதாம்..வெளியில நிக்கட்டாம்..''

தொலைத் தொடர்புக் கருவியோடு இருந்த இசை சொன்னாள்.

அதற்குள் சாப்பாட்டோடு அவன் வந்து விட்டான்.

''அக்கா..எங்கட சமையல் கூடத்துக்கல்லோ அடி விழுநத்திட்டு. பாவம் சமைச்சுக் கொண்டு இருந்த ஐயாவும் ஒராள் காயப்பட்டிட்டார். அதுதான் நல்லா நேரம் போயிற்று. இரவு சாப்பாடு வராது..இதை வைச்சே சமாளியுங்கோ...''

அவன் அடுதத் இடத்துக்கு சாப்பாடு கொண்டு போகும் அவசரத்தில் ஓடிவிட்டான்.

சோற்றையும் பருப்புக் கறியையும்; ஒன்றாக கலந்து ஒரு சொப்பின் பையில் கட்டியிருந்தார்கள்.அதுகும் வழமையை விட குறைவாகத்தானிருந்தது. கவி ஓடிவந்து அதை வாங்கினாள்.

'' அக்கா முதல் இருக்கிறத இப்ப சாப்பிடுவம்.. இரவப்பற்றி பிறகு யோசிப்பம்..''

அவள்தான் இருந்த மூன்று பேருக்கும் சாப்பாட்டைப் பங்கிட்டாள். உணவின் சுவையைப்பற்றியோ.. இல்லைப் போதும் போதாது பற்றியோ யாரும் எதுவும் மூச்சு விடவில்லை.

பொழுது சாயத் தொடங்கியிருந்தது. அந்த இடத்தை விட்டு  கிட்டத்தட்ட அனைவருமே வெறியேறி விட்டார்கள். வானத்தில் பரா வெளிச்சக் குண்டுகள் ஒளியேற்றத் தொடங்கியிருந்தன.

'' அக்கா உங்களக் கதைக்கட்டாம்...''

தொலைத் தொடர்புச் கருவியோடு வந்தாள் இசை.

அந்த இடத்தை விட்டு வெளியேறும்படியான கட்டளை.

எப்போதும் தயாராக இருக்கும் எமது துப்பாக்கிகளோடு எமது உடைமைப் பைகளையும் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம்.

நாளை தொடரும்... தடம் அழியா நினைவுடன் … மே-13 - பகுதி 1
தாரகம் இணையத்திற்க்காக அ . அபிராமி