தடம் அழியா நினைவுடன் ... மே 14 - அ. அபிராமி

breaking

அதிகாலை 6 மணியிருக்கும்.. எனது பொறுப்பாளரிடம் இருந்து அவசர அழைப்பு. ''களமுனைகளில் நிற்கும் போராளிகளின் விபரங்களோடு உடனடியாக என்னைச் சந்தியுங்கோ''

எந்த நேரத்திலும் எனக்கான அழைப்பு வரும் என்பது தெரிந்திருந்ததால் அதற்கான தயார்ப்படுத்தலோடு காத்திருந்தது நல்லதாப் போச்சு.அழைப்பு வந்த மறுநொடியே எப்போதும் என்னோடு இருக்கும் தோல் பையையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.

''அக்கா தேத்தண்ணி வைக்கப்போறன் குடிச்சிட்டுப் போகலாமே..''

கவி மறித்தாள்;.அந்த இறுக்கத்திலும் சிரிப்பு வந்தது.

''இன்னும் சீனி இருக்கா..''

நான் வியப்போடுதான் கேட்டேன்.

''இண்டைக்கு மட்டும் தொட்டுக் குடிக்கக் காணுமக்கா..''

அவள் நமட்டுச் சிரிப்போடு சொன்னாள்.

''எனக்கு நேரம் போயிற்று..நான் வெளிக்கிடப்போறன்..,நீங்க தேத்தண்ணி வைச்சுக் குடியுங்கோ. கவனமா இருங்கோ, தாறுமாறாப் பொழியிறான் கண்டபாட்டில வெளியில வராதீங்க..''

அவர்களிடமிருந்து விடைபெற்றேன். எப்போதும் எனது பயணங்களின் போதெல்லாம் வழித்துணையாய் என்னைச்சுமந்து பறக்கும் உந்துருளி இப்போது என்னிடம் இல்லை. எத்தனையோ தடவை என் உயிரை அது தன்னுடைய வேகத்தினால் பாதுகாத்துத் தந்திருக்கின்றது.

தேவிபுரம்-கைவேலி வெட்டவெளி, இரணைப்பாலை -பொக்கணை வெளி, வலைஞர்மடம் -இரட்டைவாய்க்கால் வெளியென இராணுவத்தின் பல்குழல் எறிகணைகள் வீழந்து வெடிக்கும் இடங்களிலெல்லாம் என்னைப் பத்திரமாய்க் காவிவந்து சேர்க்கும். உண்டியல் சந்திக்கு நாங்கள் வந்த அன்றே எறிகணைத் துண்டொன்று பட்டு முன்பக்கத்தால் சிதறி,தலையிழந்த முண்டமாய்க் கிடந்த என்னுடைய உந்துருளியை இப்போது நினைத்தாலும் கவலையாக இருந்தது. அது இருந்தால் கூட இப்போது ஓடக்கூடிய நிலமையில் இல்லை.

''ஸ்ஸ்ஸ்..'' என்ற சத்தத்தோடு எனக்கு இரண்டடி முன்னே வந்து குத்தியது உந்துகணை ஒன்று.

எனது வாழ்வின் முற்றுப்புள்ளி இந்த இடத்தில்தான் என எண்ணியபடியே கண்களை இறுக மூடிக் கொண்டேன். சாவைப்பற்றிய அச்சம் ஒருதுளியும் எனக்கு இருக்கவில்லை. ஆனால் விழுப்புண் பட்டுவிடக்கூடாது என்று மட்டும் உள்மனம் வேண்டிக்கொண்டது.சில நொடிகள் கழிந்தன கண்களை மெல்லத் திறந்தேன்.வீழ்ந்த உந்துகணை வெடிக்காது மணலில் புதைந்து கிடந்தது.

'அட அதுகூட என்னக் கண்டு பயந்திட்டுப் போல..| எனக்குள் சிரித்துக் கொண்டு விறுவிறுவென மணலில் கால்புதைய நடக்கத் தொடங்கினேன். எனது காலணியும் இன்றோ நாளையோ என்று தனக்கான ஓய்வை எச்சரித்துக் கொண்டு இருந்தது.மணற்பாங்கான இந்த இடத்தால் நடப்பதைவிட பிரதான வீதியைப் பிடித்து நடந்தால் விரைவாகச் சென்று விடலாம்.வீதியைப் பிடித்து நடக்கத் தொடங்கினேன்.

கடற்கரையில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்கள் போல வீதியின் மருங்கில் நீள்வரிசை கட்டிநின்றன போக்குவரத்து ஊர்திகள்.அந்த இடங்களை அண்டியும் மக்கள் செறிவாக இருந்தனர்.சில ஊர்திகள் எறிகணைகளால் சிதைந்து கிடந்தன. கொஞ்சம் முன்னே நடக்க நடக்க மக்களின் நடமாட்டம் குறைந்து கொண்டே சென்றது. ஆங்காங்கே ஒருசில போராளிகள் தவிர கிட்டத்தட்ட சூனியப்பிரதேசமாக அந்தப் பகுதி இருந்தது.

நான் நடந்து சென்ற தெருவில் ஒரு வயதான பாட்டியின் உடல் சிதைந்து ஈக்களும் புழுக்களும் மொய்த்துக் கிடந்தது.நெஞ்சை அடைக்கும் துயரோடு அதையும் கடந்து சென்றேன்.அடுத்து நான் திரும்ப வேண்டிய சந்திக்குக் காலடி எடுத்து வைக்க முதலே அந்த இடத்தின் கோரத்தை சொல்வதுபோல் பிணநெடி மூக்கில் பக்கென்று அடித்தது.

என் முதல் பார்வையிலே கண்ணில் பட்டது அந்தக் காட்சிதான்.சிதைந்து கிடந்த தரப்பால் கொட்டில், உயிர்காக்க அமைத்த காப்பகழி, பாதுகாப்புக்கு அடுக்கியிருந்த மண்மூட்டைகள் நடுவே பாதிஉடல் காப்பரணுக்குள்ளும் வெளியே தலைப்பகுதி தெரிய ஒரு பெண்ணின் உடல். அதனருகே சுருண்டபடி படுத்திருந்தது ஒரு நாய்க்குட்டி.

அந்தநாய்க்குட்டி நான் நடக்கும் அரவத்தைக் கேட்டு துள்ளிக் குதித்தபடி குரைத்துக் கொண்டு ஓடி வந்தது. இறந்து கிடக்கும் அந்தப் பெண அதன் எஜமானியாக இருக்கலாம். நான் அதன் அருகே செல்லாததைக் கண்டு மீண்டும் தன் இடத்தில் போய்ச் சுருண்டு படுத்தது. அந்த உடலை வேறு எந்தப் பிராணிகளும் அண்டவிடாது அது பத்திரமாய் நன்றியோடு தன் காவல் கடமையை செய்து கொண்டிருந்தது. துயரில் கண்கள் பனித்தன.

இந்த அவலங்களைத் தாங்கும் சக்தியின்றி, விழிகளை வீதியில் செலுத்தியபடி நடக்கத் தொடங்கினேன்.மிக அருகில் யாரோ நடக்கும் சத்தம் என்னையறியாமலே என் வலக்கை தோல்பைக்குள் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்தது. இடக்கை நான் அணிந்திருந்த குப்பியை எடுத்து வாய்குள் கொண்டுசென்றது.

முன்னெச்சரிக்கையோடே சத்தம் வந்த திசையை மெல்லக் கூர்ந்து பார்த்தேன்.ஒரு ஐயா மண்வெட்டியோடு வந்துகொண்டிருந்தார். பதற்றத்திலிருந்து மெல்ல விடுபட்டேன்.

''இஞ்ச என்னையா செய்யிறீங்க..''

அந்த ஐயாவின் உடல் வியர்த்துப் போயிருந்தது.

''அது பிள்ள.. நேற்று பின்னேரம் செல்விழுந்து என்ர பேரப்போடியன் அந்த இடத்திலேயே போயிற்றான்.என்ர மனிசிக்கு இடுப்புக்கு கீழ அப்படியே சிதறிப் போச்சு.. தலையிலும் பெரிய காயம்.. கண்ணுக்கு முன்னால அவளின்ர உயிர் பிரிந்து   கொண்டு இருந்தது...என்ர பேத்திக்கு காலில பெரிய காயம்..அவள் காப்பாற்றக்கூடிய நிலையில இருந்தாள். ஒன்றுமே செய்ய முடியாத நிலை..குற்றுயிராக் கிடந்த மனைவியை அப்படியே விட்டிட்டு பேத்தியைத் தூக்கீன்ரு ஓடிப்போயிற்றன்...,ஆனா இரவு முழுக்க ஒரே குற்ற உணர்வா இருந்திச்சு.. அதுதான் விடிஞ்சதும்  டியாததுமாக ஓடிவந்து இரண்டுபேரையும் ஒரே இடத்தில புதைச்சிற்று வாறன்..''

பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்த ஐயாவுக்கு மூச்சு வாங்கியது. வலிகளுக்கு மேல் வலிகளைச் சுமந்து வைரம்பாய்ந்திருக்கும் அவருக்கு, வெளியே கண்ணீர் வராவிட்டாலும் அவரது உள்ளம் ரணமாய் கொதிப்பதை என்னால் உணரமுடிந்தது.

''பிள்ளைகளின்ர அம்மா அப்பா எங்க..''கேட்கவேண்டும் போல் வாய்வரை வந்த கேள்வியை எனக்குள் அடக்கிக் கொண்டேன்.

''சரி பிள்ள, பார்த்துப் பத்திரமா போங்க..''

அந்தஐயா விடைபெற்றுக் கொண்டார்.ஆனால் அவரது துன்பச் சுமையையும் சேர்த்து இப்போது நான் சுமக்கத் தொடங்கினேன்.

குற்றுயிராய்க் கிடந்த உறவுகளை எடுத்துச் செல்லவும் முடியாமல் விட்டுப் போகவும் முடியாமல் தவிக்கும் அந்த வலியை இன்னும் எத்தனைபேர் சுமந்திருக்கிறார்களோ தெரியாது.., எண்ணச்சிறகுகளின்  வேகத்தோடே கால்களும் நான் செல்லவேண்டிய இடத்தை அடைந்தது.

சுற்றி எங்கும் கரும்புகையும்,கந்தக நெடிலும், இரத்தவாடையும், பிணமணமுமாய் வயிற்றைக் குமட்டியது. அந்த சூழலுக்குள்தான் தான் பெரும் கிளைபரப்பி விழுதெறிந்து நின்ற ஆலமரத்தின் கீழ் அந்தக் கட்டளை மையம் இயங்கிக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்தவுடன் பாதுகாப்புக் கடமையில் நின்ற போராளி ஓடி வந்தான்.

''என்ன தம்பி இப்படி மணக்குது ..''

மூக்கைப் பொத்திக் கொண்டே அவனிடம் கேட்டேன்.

''அதக்கா ..பக்கத்திலதான் மருத்துவமனை இயங்கினதாம்..அத அடிச்சு துடைச்செடுத்திட்டான்...நகரமுடியாத ஓடமுடியாத காயங்களோட இருந்தாக்களெல்லாம் அந்தந்த இடத்திலேயே செத்துச் செத்துக் கிடக்கினமாம்..''

உள்ளம் பதறியது. மருத்தவ மனைகள், பாதுகாப்பு வலயங்களைக்கூட விட்டு வைக்காது கொலைவெறித் தாண்டவம் புரியும் அரச பயங்கரவாதத்தின் மீது கடும் கோபம் வந்தது. எப்பொழுதுமே தமிழினம் இவர்களை மன்னிக்கக்கூடாது. எனக்குள் சபித்துக் கொண்டேன்.

''அக்கா ஏதாவது சாப்பிட்டீங்களா..?இண்டைக்கு உங்களுக்குத்தர எங்களுட்டும் ஒண்டும் இல்ல..,இந்தா இதத்தான் நாங்களும் சாப்பிட்டனாங்கள்..,நீங்களும் எடுங்கோ அக்கா..''

நாள் முடிந்துபோன உடைத்த சிறிய பிஸ்கட் பையை நீட்டினான்.

''பரவாயில்ல தம்பி..நான் வெளியால போறனான்தானே ஏதாவது சாப்பிடக் கிடைக்கும்..நீங்க இத வைச்சிருங்கோ..ஆபத்துக்கு உதவும்...''

அதற்குள் உள்ளிருந்து ஒருவன் ஓடிவந்தான்.

''அக்கா உங்கள வரட்டாம்..''

அவன் பின்னே நானும் உள்ளே சென்றேன்.

உள்ளே சூசையண்ணா தொலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தார்.

அவர்பேசுவது எனக்குத் தெளிவாக விளங்கியது.

'ஒருவர் தொலைபேசியில் உரையாடும்போதுஅதைக் கேட்பது அழகில்லை'

என்பதைப் புரிந்து நான் வெளியில் வரத் திரும்பினேன். சூசையண்ணா அமரும்படி கையசைத்தார். அமர்ந்து கொண்டேன். இப்போது சூசையண்ணாவுடன் எதிர்முனையில் பேசிக் கொண்டு இருப்பவர் யார் என்பது எனக்குத் தெளிவாகத் புரிந்தது.

'சிறிலங்காப் படைகளின் தாக்குதல்களால் குழந்தைகள் சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வேறுபாடு இன்றி நொடிக்கு நொடி மக்கள் சாவடைந்து கொண்டு இருப்பதைப்பற்றியும், மருந்தில்லாமல், சாப்பாடு இல்லாமல் உயிரோடு மக்கள் சாவடைந்து கொண்டு இருக்கும் அவலம் பற்றியும் எடுத்துச் சொல்லிக் கொண்டு இருந்தார்... எப்படியாவது எங்கட மக்களப் பாதுகாப்பா வெளியேற்றுவதற்கு ஏதாவது முயற்சி எடுக்கும்படி அவர் கேட்டுக் கொண்டிருந்தார்...'

மக்களுக்கு ஓர் ஆபத்து என்றால் அவர் எப்படித் துடிப்பார் என்பதை பலமுறை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.எந்த மக்களின்ர விடுதலைக்காகப் போராடினார்களோ அந்த மக்களை அரச பயங்கரவாதம் கொன்றொழித்துக் கொண்டு இருப்பதை பார்த்து அவர் தவிக்கும் தவிப்பு அவர் பேச்சிலே வெளிப்படையாகத் தெரிந்தது.எப்போதும் கம்பீரமாக பேசும் அவரது பேச்சில் ஒருவித நெகிழ்வு இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

தொலைபேசியை துண்டித்தபின் என்னோடு பேசினார். அவரது பேச்சில் எப்படியாவது மக்களைப் பத்திரமாக பாதுகாத்துவிட வேண்டும் என்ற தவிப்புத்தான் அதிகம் தெரிந்தது. அடுத்து நான் செய்யவேண்டிய பணிகளைத் தெளிவு படுத்தினார்;.நானும் கொண்டு சென்ற சென்ற விபரங்களைப் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.ஏதோ இனம்புரியாத உணர்வு என்னை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது.

நாளை தொடரும்… தடம் அழியா நினைவுடன் … மே-13 - பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-13 - பகுதி 2 தடம் அழியா நினைவுடன் … மே-13 - பகுதி 3
 தாரகம் இணையத்திற்காக அ. அபிராமி