முள்ளாய்க் குற்றும் முள்ளிவாய்க்கால்... - சிவதர்சினி ராகவன்

breaking

ஒற்றை வலியென்றால் ஓரமாய் நின்றே அழுதிடலாம் ஆற்றவொணாக் கற்றை வலியெல்லோ ஆண்டவனே ஐயோ என்றே கத்தவும் முடியலையே கதறினால் தான் முள்ளாய்க் குற்றும் வலியும் சற்றே ஆறலாம் ஆனால் அவை ஆற்றாதே ...நாம் விலையாய்க் கொடுத்திட்ட அத்தனை உயிர்ப்பூக்கள் வலிகளையும்......

மூபத்து ஆண்டுகளாய் மூடி மூடிக் காத்தோம் முனை மழுங்காது வீர யாகம்

செய்தோம் உயிர்த் தியாகம் ஈந்தோம் இருப்புக்காய் பல படை சேர்த்தோம் பக்கத்துணையாய் அறிவினை யாத்தோம் பயணித்தோம்...

அடங்காப்பற்றென அன்றே ஆண்ட வன்னி மன்னன்பண்டார வன்னியனின் கால் பட்டுக் கட்டியெழுப்பிய வீரத்திருமண்ணை வெள்ளையன் மட்டுமல்ல உள்ளூர்க் கொள்ளையனும் அபகரிக்க முடியா ஓடி ஒழிந்ததும்... ஓரவஞ்சகம் நரித்தந்திரம் சூழ்ச்சியெனும் மந்திரம் மட்டுமே அன்றும் இன்றும் வென்றுபோனது....

தன் கையே தனக்குதவியெனத் தன் மக்கள் விடிவுக்காய் இராவணன் பேரனாய் எல்லை காக்கும் சாமியாய் வல்வை மண்ணின் மகனாய்த் தோன்றிய வேலுப்பிள்ளை ஐயா பிள்ளையின் பின்னே அணிவகுத்த ஈழத்தாயின் மைந்தர்கள் புற நானூற்றுச் சித்திரங்கள் படைகொண்டு பாரிவள்ளலாய்ப் பெருக்கிய வீரம்... உலகம் வியக்கவில்லையோ...

போனால் வராதென்று நாமெலால் அஞ்சியொடுங்கிக் கிடக்கையிலே அஞ்சாத வீரராய் விஞ்சிய பற்றோடு ஈழதேசம் காக்கச் சென்ற வீரரே... வீணர் கொட்டம் அடக்கச் சிறுத்தையாய் நீவிரும்.... சீவிச் சிங்காரிக்கும் இளமைப் பருவத்தில்.. களம் பல கண்ட வீரத் தமிழிச்சிகளும்.. நினைக்கையிலே.. புடைத்தெழுந்த தோள்களிலே அணிந்த சுடுகுழல்களாய் எனக்குள்ளே சீறிச் சினக்குதே வரிகளும்...

நெய்தல் நிலக்கரையில் நெடிதே பயணித்துக் களைத்த உறவுகளெல்லாம் கூடிக் கரையொதுங்கிய படகுகளாய்...பட்ட மரத்தில் பாலூறுமென்று அண்ணாந்து நோக்கிய அசுரக் கணங்கள் வானிலே வல்லூறுகள் வட்டமடிக்க வயிற்றிலே நிரப்பி வந்த குண்டுகளை மழையாய்ப் பொழியச் சிதறுண்டு போனது எம்மவர் உயிர்களல்லவா...

கொத்துக்குண்டுகளும் கொடிய நச்சு வாயுக்களும் நெருக்கியபோதும் பாலுக்கு அழுத பாலகரும் பச்சைக்குழந்தைகளும் பட்டிணியோடு தவித்த உறவுகளும் மந்தைகளாய் உலகமே உங்கள் பார்வையில்.... காப்பீரென்று கதறிய போது நீவிர் கோப்பியருந்தியா காலத்தைக் கடத்தினீர் ஈழ உயிர்கள் என்ன அத்தனை மலிவா உங்கள் இரக்கமற்ற விழிகளுக்கு...

நம்பியவர் மனங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்த ஓரணி நின்றே ...அழித்தொழித்த அன்னிய தேசத்தவரே அல்லலில் ஒன்றாய் க் கரம் கோர்த்த அசுர குலத்தவரே நீவிர் பதிலுரைப்பீர் இன்று வரை நீறுபூத்த நெருப்பாய் உள்ளங்களுக்குள் கனன்றுகிடக்கும் தீரா வலி போக்க பாதையொன்று சொல்லும்....

விலை மதிப்பில்லா வீரத் திருமகன்கள் வில்லிலே அம்பெனப் பாயும் தளபதிகள் எள்ளுக்கும் விட்டு வைக்காது அழித்தொழித்தீர் எஞ்சியவரைக் காணாது ஆக்கினீர் இன்றுவரை பெற்றபிள்ளைகளைத் தேடியலைந்தே பெற்றவர் ஆவியும் தொலைகிறதே கூண்டுக்குள் அடைத்துக் கொலைவெறியாடும் எத்தன் பசி இன்னும் தீரவில்லையோ...

எப்படி ஆறும் எங்கள் மனம் விழுப்புண் பட்டவர் காயங்கள் ஆறியதாய்த் தோன்றலாம் அவலம் பட்டவர் மௌனமாய்க் கிடப்பதாய் நீ நினைக்கலாம் உறவுகளை இழந்தவர் மறந்துவிட்டார் என்றே நீ எண்ணலாம்,.. அத்தனையும் உன் எண்ணப்பிழை ஓயமாட்டோம் நீதி ஒன்று கிடைக்கும் வரை கொட்டும் பனிமழையும் கொல்லும் உயிர்வதையும் எம்மை ஒன்றும் செய்யாது..

காலம் வரும்.. எமக்கான ஈழம் என்னும் தேசம் வரும் அதுவரை கோர்த்திருக்கும் கைகள் ஒற்றுமையென்னும் அட்சயபாத்திரத்தை ஏந்தியபடி...எங்கள் தலைமுறைக்கு அநீதியை உணர்த்தும் வரை..அவர் கையில் இலட்சியக் கனலை ஒப்படைக்கும் வரை ஐ நாவே உன் பார்வை எம் மீது திரும்பும் வரை எமக்கான எம் மக்களுக்கான பாதை திறக்கப்படும் வரை...

எவராலும் பிரிக்கமுடியாத சக்தி எம் இன ஒற்றுமை எவருக்கும் தாரை வார்க்க மாட்டோம் எம் தேச விடியலுக்கான இலட்சியத்தை எப்போதும் ஓயமாட்டோம் காலங்கள் ஓடுகிறபோதும்..ஆண்டுகள்பத்தோடு ஒன்று இத்தோடு முடிந்ததென்று புலம்பலோடு விடைபெற மாட்டோம் புதியபரணி எழுதிய மாவீரர் கனவுகள் பலிக்கும் வரை..நந்திக்கடலில் கேட்ட ஓலங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்...ஒடுங்கிக் கிடக்க மாட்டோம்.. முள்ளாய்க் குற்றும் வலிகளுக்கும் மருந்தாய்க் கிடைக்கும் அந்தச் சேதி வரும் வரை ஓயாது எங்கள் ஒற்றுமை தீராது எங்கள் வலிகள்...

சிவதர்சினி ராகவன்