தடம் அழியா நினைவுடன் ... மே 15 -பகுதி - 1 அ. அபிராமி

breaking

வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. எனது பாதணிகளையும் மீறி சுடுமணல் காலைச் சுட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும் அந்த உணர்வே தெரியாது நடந்து கொண்டிருந்தேன். அந்தப்பகுதியில் மக்களின் நடமாட்டம் இல்லை. ஏன் எப்போதும் தலைக்கு மேலே இரைந்தபடி சுற்றிச்சுற்றி வெறுப்பேற்றிக் கொண்டு இருக்கும் வண்டின் சத்தம் கூட இல்லாமல் இருந்தது.

இந்த அமைதி ஆபத்தானது என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது.இயன்றவரை வேகமாக நடக்கத் தொடங்கினேன்.மண்ணும் வியர்வையும் சேர்ந்த கலவையால் உடலெங்கும் பிசுபிசுத்தது.

''அக்கா பிரதான வீதியால செல்லாதீங்க..

.அது பாதுகாப்பில்லை..

ஏதும்நடந்தாக்கூட தெரியாது..

உள்பாதையால போங்க..''

நான் வெளிக்கிடும்போது பாதுகாப்புப் பணியில் நின்றவன் முன் எச்சரிக்கை செய்து அனுப்பியிருந்தான்.

அப்போதுதான் நான் நடந்து வந்த பாதையின் பயங்கரம் எனக்குப் புரிந்தது.அதன் பிறகு வந்தபாதையாலே திரும்பிச் செல்லும் துணிச்சல் எனக்கு வரவில்லை. கொஞ்சத்தூரம் கடந்திருப்பேன். மோட்டார் எறிகணைகளாலும் ,ஆர்.பீ.ஜீ உந்துகணைகளாலும் அந்த இடத்தை எதிரி வறுத்தெடுக்கத் தொடங்கினான்.

பற்றைகள் படர்ந்திருந்த மணற்பாங்கான அந்த இடத்தில் பாதுகாப்பகழிகள் எதுவும் இல்லை. என்னையே குறிவைத்துத் துரத்துவதுபோல முன்னுக்கு, பின்னுக்கு, பக்கத்தில் என்று எல்லா இடமும் எறிகiணைகள் வெடித்துச் சிதறிக்கொண்டு இருந்தன.நிலத்தில் விழுந்து படுத்தேன்.அப்படியே படுத்து இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

''எறிகணைகள் எப்போது ஓய்வது நான் எப்போது நகர்வது ,வேறுவழியின்றி நிலத்தோடு நிலமாய் 'குரோல்,  இழுத்தபடி நகர்வதும் எழும்பிவென்ரெடுத்து ஓடுவதுமாய் கொஞ்சத்;தூரம் கடந்திருப்பேன்;. எனது பெயரைச்சொல்லி யாரோ அழைத்தார்கள்.குரல் வந்த திசையில் பார்த்தேன்.

திறந்த பாதுகாப்பகழிக்குள் தேவியும், குயிலினியும் இருந்தார்கள். அவர்களைக் கண்டதில் இனம்புரியாத மகிழ்வு.ஓடிப்போய் அவர்களோடு காப்பகழிக்குள் நானும் அமர்ந்துகொண்டேன். ஆங்காங்கே பாதுகாப்பகழிகளுக்குள் எமது பிரிவில் காயபட்ட போராளிகள்தான்; இருந்தார்கள். தேவியும் நானும் ஒரே பயிற்சிமுகாமைச் சேர்ந்தவர்கள்.ஆரம்பத்தில்; பணிகூட இருவருக்கும் ஒரே இடத்தில்தான் இருந்தது.அவள் களமுனையில் விழுப்புண்தாங்கியது எனக்குத் தெரியும், ஆனால் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.குயிலினியும் தலையில் பெரிய கட்டுப் போட்டிருந்தாள்.அவள் இரவுதான் விழுப்புண்தாங்கி வந்திருந்தாள்.

நேற்றில் இருந்துதான் இந்த இடம் மருத்துவப் பிரிவாக இயங்கத் தொடங்கியதாக தேவி சொன்னாள்.இரண்டுபேரிலுமே குருதி வெளியேறிய சோர்வும் இயலாமையும் தெரிந்தது.அவர்கள் சாப்பி;ட்டிருக்க மாட்டார்கள் என்பது அவர்களது முகத்தில் தெரிந்தது.

''இன்னும் சாப்பாடு வரவில்லையா ''

என்று கேட்டேன்.

''இல்லை..எடுக்கப் போயிற்று இப்பதான் வந்தவ..''

தேவி சொல்லி முடிக்கமுதலே குயிலினி தொடங்கினாள்.

''நினைக்கவே கவலையாகக் கிடக்கக்கா..எங்கட சமையல் கூடத்தில இருந்து சாப்பாடு எடுத்தின்ரு வாறவழியில நிறையக் சின்னப்பிள்ளைகள் பசியோட கையில பாத்திரங்களையும் வைச்சுக் கொண்டு நின்றிருக்கிதுகள்.அந்தப் பிள்கைளின்ர முகத்தப் பார்த்த பிறகு எப்படியக்கா அந்தச் சாப்பாட்டக் கொண்டுவரமுடியும்? அதுதான்அதில வைச்சே நின்ற பிள்ளைகளுக்குக் கொடுத்திற்று வந்திட்டினும். அதிலும் கொஞ்சப்பிள்ளைகளுக்கு சாப்பாடு காணாதாம் அக்கா..,ஏமாற்றத்தோட திரும்பிப்போன அந்தச் சின்னப்பி;ள்ளைகளின்ர முகம்தான் தன்ர கண்ணுக்கு முன்னால வருகிதென்று சாப்பாடு எடுக்கப்போன மதுவந்தி கண்ணீர் விட்டு அழுகிறாளக்கா. ஏனக்கா இந்த அரச படைகள் எங்;கட பச்சைமண்ணுகள கொத்துக்கொத்தா குண்டாலும் ,பசியாலும் கொல்லுறதக் கூடவா ஒருத்தரும் தட்டிக்கேட்கேல்ல..''

அவளின் ஆதங்கம் புரிந்தது.தங்களுக்கு பசி என்கிற கவலை அவர்களுக்கு ஒருதுளிகூட இருக்கவில்லை.மக்கள் படுற அவலம் தான் அவர்களுக்கு பெரும் வேதனையாக இருந்தது.

''தனிய இந்தப் பேரினவாத அரச படைகள் மட்டுமா எங்கள அழிக்கிறான். எங்கட போராட்டத்தைக் கண்டு மிரண்டு போன எல்லா நாடுகளும் கூட்டுச்சேர்ந்துதான் எங்கட இனத்தையே அழிக்கிறாங்கள்..பன்னாட்டுச் சட்டதிட்டங்களை எல்லாம் மீறி இனப்படுகொலை எங்கட மண்ணில நடந்து கொண்டு இருக்கிறது எல்லாருக்குமே தெரியும்..வெளிநாட்டில இருக்கிற எங்கட சனமெல்லாம் ஒன்று திரண்டுபோய் ஐநா முற்றத்தில எங்கட மக்களைக் காப்பாற்றுங்கோ என்று தவம் கிடக்கிதுகள். எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு தான் உலக நாடுகள் இருக்கு..ஆனா போரத் தடுத்து நிறுத்தி மக்களக் காப்பாற்றத்தான் ஒருத்தரும் முன்வருகினமில்ல.... சரிசரி உங்களோட இருந்தா, நேரம் போறதே தெரியேல்ல நான் வெளிக்கிடப்போறன்..பத்திரமா இருங்கோ..''

அவர்களிடம் இருந்து விடைபெற்று கொஞ்சத்தூரந்தான் சென்றிருப்பேன்.என் கண்களில் பட்ட அந்தக் காட்சியால் நான் துடித்துப்போனேன். பெரும் விழுப்புண்களைத் தாங்கியவர்கள் நடக்க முடியாது நிலத்தோடு நிலமாய் அரைந்து அரைந்து அந்தச் சுடுமணலில் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.இரண்டுபேர் ஒருவர்க்கு ஒருவர் உதவியபடி தோளில் கைபிடித்துத் தாங்கியபடி நகர்ந்தார்கள். இன்னுமொரு பெண் சேலைன் கொழுவிடும் தாங்கியை ஊன்றுகோலாய்க் கையில் பிடித்தபடி மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தாள். வாய்விட்டுக் கதறி அழவேண்டும் போலிருந்தது.அவர்கள் நகரும் இடத்துக்கு ஓடிப்போனேன். அங்கு யாருக்குமே எனது உதவி தேவைப்படவில்லை.

நிலத்தோடு அரைந்து போன ஒர் அண்ணாக்கு ஒரு கால் துடைப்பகுதியோடு துண்டிக்கப்பட்டிருந்தது. மற்றக்கால் எழுந்து நடக்க முடியாதபடி கட்டுப்போடப்பட்டிருந்து. இன்னுமொரு இளம்பெண் அவருக்கு வயிற்றிலே பெரிய காயம்.எழுந்து நடக்க முடியாது.கைகளை மணலில் ஊன்றி ஊன்றி அரைந்து சென்றாள்.அவளது கை அந்தச் சுடுமணலில் ஊன்றி ஊன்றி கன்றிச் சிவந்திருந்தது. அவள் மறுக்க மறுக்க எனது பாதணிகளைக் கழற்றி அவளது கையில் போட்டுவிட்டேன். மருத்துவமனைத் தாக்குதலுக்குள் இருந்து தப்பிப் பிழைத்த அச்சம் அவர்கள் முகத்தில் இருந்து கொஞ்சமும் விலகவில்லை.

''பிள்ள..,எங்களோடமினக்கெட்டு அநியாயமா காயப்பட்டிராதையுங்கோ.. நீங்க போங்கோ..''

நாளை தொடரும்… தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 2 தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 3 தடம் அழியா நினைவுடன் … மே-14 – பகுதி 1
 தாரகம் இணையத்திற்காக அ. அபிராமி