தடம் அழியா நினைவுடன் ... மே 15 -பகுதி - 2 அ. அபிராமி

breaking

என்னை விரட்டுவதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள்.நான் நின்றும் அவர்களுக்கு

உதவும் வழிதெரியாது கையாளாகத்தனத்தோடு அங்கிருந்து நகர்ந்தேன்.இப்போது வெறும் காலில் நடந்தும் நிலத்தின் சூட்டை என்னால் உணரமுடியவில்லை. ஒருவாறு எனது பணிகளை எல்லாம் முடித்தக் கொண்டு எனது இருப்பிடத்தை அடைந்த போது நேரம் மாலை 4 மணியை எட்டியிருந்தது.

என்னைக் கண்டவுடன் கவிக்கும் இசைக்கும் பெரும் மகிழ்ச்சி.

''நீங்க போன நேரத்தில இருந்து ஒரே அடியா இருந்தது. நாங்க பயந்து கொண்டு இருந்தனாங்கள்..''

இசை சொன்னாள்.

கவி ஓடிப்போய் தேத்தண்ணி வைத்துக் கொண்டு வந்து தந்தாள்.அது பெரும் தெம்பைத் தந்தது. அன்றைய பொழுதுக்கு வயிற்றுக்குப் போனது அந்தத் தேனீர்மட்டும்தான்.

 உடம்பெல்லாம் மண்ணாக இருந்தது.எப்படியாவது இன்று குளிக்கவேணும்.ஆனால் கிணற்றடியை அண்டிய இடமெல்லாம் மக்கள் இருந்தார்கள்.கிணற்றைச் சுற்றி அடைத்திருந்ததகரவேலியெல்லாம் எறிகணைகள் பட்டு சிதறிக்கிடந்தது.பொழுது சாயட்டும் பாப்பம்.இப்ப சாப்பாட்டுக்கு எதாவது வழி செய்யவேணும். திரும்பவும் எங்கட சமையல் கூடத்தைத்தேடி புறப்படத் தயாரானேன்.

''எங்கயக்கா.. வெளிக்கிடுறீங்கள்..''

இசை அழுவாரைப்போல கேட்டாள்.

''சாப்பாடு எடுத்திற்று வரப்போறன்..''

வேண்டாமக்கா இருவரும் பிடிவாதமாய் மறுத்தார்கள்.

''பொரிஞ்சு தள்ளுறான்..,வேலையாப்போறது வேற.., உங்களுக்கு புதுக்கிச்சின் எங்க இருக்கென்றே தெரியாது.இதுக்க எங்கபோய்த் தேடுவீங்க...

சும்மா இருங்கக்கா.. ஏதோ ''படைச்சவன் படி அளக்கத்தானே வேணும்'' என்னிட்ட கொஞ்ச மாக்கிடக்கு இரவு நல்ல ரீ போட்டுத்தாறன் இருங்கக்கா.., இந்தா இவ்வளவாயிரம் சனத்துக்க எத்தினபேர் எத்தினநாளா சாப்பிடாம இருக்கினமோ தெரியாது..அதவிடுங்கோ எத்தின பச்சமண்ணுகள் சாப்பிடாம இருக்கோ தெரியாது..,ஒருநாள் சாப்பிடாட்டி நாங்க ஒன்றும் குறையமாட்டம்..பேசாம இருங்கக்கா..''

கவி பெரிய சொற்பொழிவே ஆற்றி முடித்தாள்.

அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருந்ததால் பேசாமல் இருந்தேன்.இப்போது இருவரிடமும் ஒரு விடயத்தைக் கேட்டேன். ''இப்ப உங்களுக்கு உருத்தான ஆட்கள் உங்களப் பொறுப்பெடுத்தா அவர்களோட போவீங்களா ...'' இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

''கவியின்ர பெரியம்மாவ பக்கத்திலதான் இருக்கினம்..கவியக் கண்டு தங்களோட வரச்சொல்லிக் கேட்டவ..கவிதான் உங்களக் கேட்கவேணும் என்று சொல்லி அனுப்பினவள்..''

''உங்கள அப்பவே வீட்டபோகச்சொல்லித்தான் தலைமைச் செயலகம் சொன்னது.நீங்கதான் பிடிவாதமா வீட்ட போக மறுத்தனீங்கள்..அதாலதான் சண்டையில்லாத பணிகளில உங்கள விட்டது.இப்ப அந்தப்பணிகள் ஒன்றும் இல்லை, அதால நீங்க உங்களப் பத்திரமா பாதுகாக்கக் கூடியவர்களா இருந்தாப் போறதில எந்தப் பிரச்சனையும் இல்ல..''

அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.கவி பெரியம்மாவோடு செல்வதற்கு உடன்பட்டாள்.ஆனாலும் எங்கள் இருவரையும் விட்டுச்செல்ல மனமின்றித் தயங்கினாள்.

''கவலைப்படாம போயிற்றுவா..இசையையும் பாதுகாப்பா நான் விட்டிருவன்..என்னைப்பற்றிக் கவலைப்படாத ..''

அவளைத் தேற்றி அவளை பெரியம்மாவிடம் பத்திரமாய் ஒப்படைக்க நானும் இசையும்; தயாரானோம்.

புறப்படும்போது அவள் பொத்திப் பொத்தி வைத்திருந்த சிறிய பை ஒன்றை இசையிடம் கொடுத்தாள்.அதற்குள் கொஞ்ச சீனி,தேயிலை, கொஞ்சப் பால்மா இருந்தது. பாவம்..சாப்பிடாமப் போகப்போறாள் போற இடத்திலும் என்ன நிலமையோ தெரியாது.

''சரி அப்ப கடைசியா ஒரு பால்தேத்தண்ணியக் குடிச்சிற்று வெளிக்கிடுவம்.. அத நானே ஊற்றித்தாறன்..''

நான் அடுப்பைப் பற்ற வைத்தேன். அம்மா சமைக்க பக்கத்தில இருந்து பார்க்கும் குழந்தைகள் போல இருவரும் என்னருகே வந்திருந்தார்கள். மூவரும் தேனீரைக் குடித்துவிட்டு புறப்பட்டோம்.கவியின் பெரியம்மாவிடம் கவியை ஒப்படைத்துவிட்டு திரும்பி வரும் வழியில் இசைக்குத் தெரிந்த அக்கா ஒருவர் வந்தார்.

''இசை.. இப்பதான் உங்கட அக்காவக் கண்டனான்.அவள் உன்னத்தான் தேடுவதாக சொன்னவள்..''

அந்த அக்கா சொன்ன செய்தி எனக்கு பெருமகிழ்வாக இருந்தது. இசையையும் அவளது சகோதரியிடம் ஒப்படைத்தால் எனக்கு பெரும் சுமை இறங்கின மாதிரி இருக்கும்.அந்த அக்கா சொன்ன பக்கமாக தேடத் தொடங்கினோம். பொழுது சாயமுதல் கண்டுபிடித்துவிட வேண்டும் நாங்கள் தேடத்தொடங்கிய சில நிமிடங்களிலே இசையின் அக்கா எங்களைக் கண்டு ஓடிவந்தாள்.

இசையையும் அவளது அக்காவிடம் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு நான் தனியாளாக வெளிக்கிட்டபோது இசையின் கண்கள் கலங்கின.அவளது முதுகில்தட்டி ஆறுதல் படுத்திவிட்டு நடக்கத்தொடங்கினேன்.

பனைமரங்கள் வடலிகள் எனப் பெரும் தோப்பாய்ச் செறிந்து நின்ற அந்தப்பகுதி எங்கும் மக்களும் செறிவாக இருந்தனர்.அதற்குள் தான் பாதை பிடித்து நடந்து கொண்டிருந்தேன்.

அப்போதுதான் வேலைக்கு ஆட்களைப் பிடித்து பாதுகாப்பான காப்பரண் ஒன்றை அமைத்துவிட்டு அவர்களுக்கான சம்பளம் கொடுத்துக் கொண்டு வெளியில் நின்றவள் என்னைக் கண்டு கூப்பிட்டாள்.அவளும் நானும் நெருங்கிய தோழிகள்;.அவளை அந்த இடத்தில் கண்டது எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. கடைசியா பொக்கணையில அவளின்ர குழந்தை தவறியபோது பார்த்ததுக்கு இன்றுதான் மீண்டும்

அவளை நான் சந்திக்கிறன். எனக்கு இப்பவும் நல்ல நினைவா இருக்கு.

''குழந்தைகள் சாவடைஞ்சா அழக்கூடாதாம் அக்கா..,அப்படி அழுதா.. பிள்ளையின்ர ஆத்மா அந்தரப்படுமாமக்கா..''

அவள் தன்னைவிட்டுப்போன அந்தக் குழந்தைக்காக கண்ணீர்விட்டுக் கதறி அழுதால் பிள்ளைய அந்தரப்படும் என்று, அழவும் முடியாமல்,அழாமல்; இருக்கவும் முடியாமல் ஒரு தாயாய் அவள் பட்ட தவிப்பை பார்த்து நாங்களே கண்கலங்கி நின்றதை எப்படி மறக்கிறது.

''உள்ள வாங்கக்கா..என்ன சாப்பிட்டியல்.. ஏதாவது சாப்பிறீங்களாக்கா..''

இதுவும் எந்தநேரத்தில் அவளது வீட்டுக்குப் போனாலும் அவள் கேட்கும் கேள்விதான்.எனது பதிலை எதிர்பாராது மளமளவென்று தட்டிலே சாப்பாடு போட்டாள்.அவளும் ஒரு போராளிதானே அவளுக்குப் புரியாததா?

''கையக்கழுவி விட்டு முதல் சாப்பிடுங்கோ அக்கா ..''

தண்ணீரை நீட்டினாள்.நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்விட்டு சமைத்த ரின்மீன் குழம்பும்,சுடச்சுட சோறும் சாப்பிட்டேன் தேவாமிர்தமாக இருந்தது.

அவளின் அந்த இடம் பலபேரிற்கு காப்பகமாக மாறிக் கொண்டு இருந்தது.வெளியே தலை காட்டமுடியாதபடி எறிகணைகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.

பார்க்கும் இடமெங்கும் சுடர்விட்டெரியும் தீயின் நாக்குகளும், நாலாபக்கமும் பரவி வியாபிக்கும் கரும்புகைகளின் தூசியும் கந்தக நெடிலுமாய் அழிவின் பேரவலத்தை அந்த மண் தாங்கிக் கொண்டிருந்து.

நாளை தொடரும்… தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 2 தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 3 தடம் அழியா நினைவுடன் … மே-14 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-15 – பகுதி 1
 தாரகம் இணையத்திற்காக அ. அபிராமி