மே 18 தமிழர் வரலாற்றில் உச்சம் தொட்ட தமிழின அழிப்பின் நினைவு நாள்.

breaking
மே 18 தமிழர் வரலாற்றில் உச்சம் தொட்ட தமிழின அழிப்பின்  நினைவு நாள். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-
2020 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி  - இன்றுடன் - முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு  நடைபெற்று 11 வருடங்கள் நிறைவடைகின்றது. காலம்காலமாக  சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்குள் ஈழத்தமிழினம் சிக்குண்டு பல்வேறு படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர் . இத்தகைய இனப்படுகொலைகளின் உச்சம்தொட்டு ஈழத்தமிழர்கள் மிக மோசமாக 21 ஆம் நூற்றாண்டில் சர்வதேசம் பார்த்திருக்க முள்ளிவாய்க்காலில்  இனப்படுகொலை செய்யப்பட்ட வலிநிறைந்த நினைவு நாளே இன்றாகும்.
மகாவம்ச மனநிலைகொண்ட, சிங்கள-பௌத்த பேரினவாத அரசால் இந்த நூற்றாண்டின்  இன அழிப்பு   ஈழத்தமிழர் தாயகத்தில் மிகக் கொடூரமான முறையில் நிகழ்த்தப்பட்டது.  இதன்போது விழிதிறந்தவர்களாக  உறக்க நிலையில் இருந்தவர் போன்று உலக நாடுகளும், ஐ.நா. சபையும் கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்து நின்றிருந்தனர். ஆனால் இன்று அவர்களிடமே அதற்கான நீதியை எதிர்நோக்கியிருக்கும் கையறுநிலையில் உலகத் தமிழர்களாகிய நாமுள்ளோம். ஐநாவின் உள்ளக அறிக்கையின் அடிப்படையில்  போரின் இறுதிக் கட்டத்தில் 75,000 க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் அதேவேளை அன்றைய மன்னார் ஆயரின் கூற்றுப்படி 146,679 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். தமக்கு மறுக்கப்பட்ட அரசியல் தீர்வையும், வாழ்வுரிமையையும் தமிழினம் வேண்டிநின்ற ஒரே காரணத்துக்காக  மனிதத்துவமற்ற முறையில் இனவழிப்புச் செய்யப்பட்டனர். சிறிலங்கா இராணுவத்தாலும் ஒட்டுக்குழுக்களாலும் பல்லாயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கக்கப்பட்ட நிலையில் 90,000 க்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். மேற்கத்தேய நாடுகளை 'நல்லிணக்கம்' என்ற சொல்லாடலுடன் சமாதானப்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அரசானது ஈடுபட்டுவருகின்றது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையான பொறுப்புக்கூறலினூடாக நீதி வழங்கி இதுபோன்ற குற்றங்கள் இனிமேல் ஏற்படாது என்ற உத்தரவாதத்தினை வழங்கக்கூடிய நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு செயற்படவில்லை. மாறாக தமிழின அழிப்பிற்கு தலைமைதாங்கி போர்க்குற்றங்கள் புரிந்த இராணுவத்தரப்பை கொளரவப்படுத்தும் விதமாகவே உயர் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. போர்க்குற்றவாளியான தற்போதைய சிறிலங்கா அரச அதிபர் கோதபாய ராஜபக்ஸவால் - போர்க்குற்றவாளிகளான சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகவும், கமல் குணரத்ன பாதுகாப்பு செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை இதற்கு சான்றாகும். அதுமட்டுமல்லாமல் 2015 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் - வீடு திரும்பிய சிறார்கள் உட்பட எட்டு அப்பாவித் தமிழர்களைக் கொலை செய்ததான குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டிருந்த கொலைக் குற்றவாளியான  இராணுவ கப்டன் சுனில் ரத்நாயக்க கோவிட் -19 நெருக்கடி நிலையைக் காரணம்காட்டி சிறிலங்காவின் ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆயினும் பல தசாப்தங்களாக குற்றச்சாட்டுக்கள் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எவ்வித கரிசனையும் காட்டப்படவில்லை. இதுவே சிறிலங்கா இனபேரினவாத அரசிடமிருந்து தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப்போவதில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான சிறப்பு ஆய்வாளர்களால் 2017 யூன் மாதத்தில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது (A / HRC / 35/31 / Add.1). இந்த அறிக்கையில் படுமோசமான குறைபாடுகள் சிறிலங்காவில் உள்ளதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது - சிறிலங்காவில் சாட்சிகளிற்குப் பாதுகாப்பு இல்லாமை, நீதித்துறைக்குச் சுதந்திரம் இல்லாமை, சிறிலங்கா நீதித்துறை அமைப்பில் உள்ள முறைகேடுகள், மற்றும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், நடைபெற்ற இனப்படுகொலைக் குற்றங்களை கையாள்வதற்கு இலங்கையில் போதுமான நீதிப் பொறிமுறைகள் இல்லாதது உட்பட பல விடயங்களைச் சுட்டிக்காட்டி  சர்வதேச நீதித்துறை பொறிமுறையை கோருவதே உகந்தது என்றும் பரிந்துரைத்துள்ளனர். கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கை அரசின் இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலானது அப்பாவித் தமிழ் மக்களைப் பலவகையிலும் துன்புறுத்தி அவர்களை இடம்பெயர்ந்து வேறு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையவைத்தது. பல்லாயிரம் தமிழர்கள் ஏதிலிகளாக தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறி  வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். காணி அபகரிப்புகள், தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலை நிறுவுதல் போன்ற கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகள் சிறிலங்காவில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. நிர்க்கதியாக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களின் மரணங்களுக்கு பொறுப்புக்கூறல் அல்லது நீதி வழங்கல் சிறிலங்காவில் திட்டமிட்டே நிராகரிக்கப்பட்டு வருகின்றது. ஆயுத மௌனிப்பின் பின்பும் நடைமுறையிலுள்ள தமிழ் தேசத்தின் தாங்கு தூண்களான நிலம், மொழி, கலாசாரம், பொருளாதாரம்  என்பவற்றை சிதைக்கும் இனவழிப்புச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அரங்கேறிவருகிறது. இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்ற விசாரணைகள் தொடர்பாக - ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானங்களிலிருந்து சிறிலங்கா விலகியுள்ளது. இச்செயற்பாடானது தமிழின அழிப்பிற்கு  உள்ளகப் பொறிமுறைமூலம் நீதி கிடைக்கப்போவதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டாகும். ஆனாலும் - 30/1 தீர்மானம் ஒரு உள்ளக விசாரணைப் பொறிமுறையாகும். இதன் மூலம் நீதி கிடைக்கப்போவதில்லை என்பதை நேர்மையாகச் செயற்படும் தமிழ்த் தரப்புகள் ஆரம்பத்திலிருந்தே சுட்டிக்காட்டி வந்துள்ளன. எனவே இந்த தீர்மானத்தில் இருந்து சிறிலங்கா அரசு வெளியேறியதைக் கண்டிப்பதோ அல்லது மீண்டும் இந்த தீர்மானத்தை அரசு அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதோ இனப்படுகொலையாளிகளைப் பாதுகாக்கும் செயற்பாடாகவே அமையும். எனவே இனியும் காலம்தாழ்த்தாது சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயத்தில்  நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த தமிழர்களும் ஈடுபடவேண்டும். "ரொகிங்கியா" மக்களின் இனப்படுகொலை வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்க முடியுமானால் தமிழர்களுக்கு நடந்த இனவழிப்பையும் ஒரு சர்வதேசப் பொறிமுறைக்கு எடுத்துச்செல்ல முடியும். ஈழத்தமிழர்களுக்கு நடந்த இன அழிப்பிற்கும் மற்றும் தொடரும் கட்டமைப்புசார் இன அழிப்பை   தடுப்பதற்கும்  சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயத்தில் சிறிலங்காவை பாரப்படுத்துவதற்கு  உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்கவேண்டும். தமிழர்களின் அரசியல்  அபிலாசைகளான தாயகம் - தேசியம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்  தமிழ்த் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்படுவதே  தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழியாகும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி என்று கூறி  ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை தமிழர்கள் மீது திணிக்கும் ஏமாற்று முயற்சியில் பாராளுமன்றத்தில் உள்ள தமிழ் தலைமைகளின் உதவியோடு சிறிலங்கா பேரினவாத அரசு ஈடுபட்டு வருகின்றது. இந்த ஒற்றையாட்சிக்கான புதிய இடைக்கால அறிக்கையை தமிழர்கள் அடியோடு நிராகரித்து  தமிழ்த் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட தீர்வு வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக அணிதிரள்வோம். இந்த வலிமிகுந்த நாளில் -எமக்கு முன்னால் உள்ள தடைகளை உடைத்தெறிந்து  நெஞ்சுறுதி கொண்ட வேங்கைகளாக ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும்  "மூச்சோடும் வீச்சோடும் விடுதலையை வென்றெடுக்கும் வரை ஒருபோதும் ஓயோம்" என்ற ஓர்மத்துடன் கொல்லப்பட்ட எமது மக்கள்மீதும் , எமது மண்ணின் விடுதலைக்காக இறுதி கணம் வரை போராடி தம்மை ஈகம் செய்த மாவீரர்கள் மீதும் உறுதியெடுத்து சுடர் ஏற்றுவோமாக. -தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-