தடம் அழியா நினைவுடன் … மே 15 -பகுதி –3 அ. அபிராமி

breaking

மே-15, உறக்கம் தொலைத்த விழிகள் கந்தக நெடியில் கரித்துப் போயிருந்தன. மரத்துப் போயிருந்த மனித மனங்களிற்கு காலையில்லை, மாலையில்லை,இரவில்லை,பகலில்லை, புலரிப்பொழுதை கூவியழைக்க சேவல்கள் இல்லை,எங்கள் வானில் எந்தப்பறவைகளும் இல்லை.

எங்கள் நிலமெங்கும் கருக்கொண்ட தீ மேகங்கள் நெருப்புமழையைக் கக்கிக் கொண்டிருந்தன. அன்றைய நாட்களில் மனிதப்பேரவலத்துக்கு முகம் கொடுத்து நின்ற அத்தனை உயிர்களுக்குமே அடுத்த நொடி என்பதே பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

அதற்கு இன்று மட்டும் விதிவிலக்கா என்ன?  காலை நேரத்து பூபாளம் தொலைந்த எங்கள் முற்றத்தில் முகாரியோடே பொழுது புலர்ந்து கொண்டிருந்தது.

நாங்கள் இருந்த இடத்துக்கு முன்னால் ஒரு சிறிய கிணறு இருந்தது. மளமளவென்று அள்ளிக்குளிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அந்தளவுக்கு நிலமை சரியில்லை.எல்லாரும் விழிப்பாகத்தான் இருந்தார்கள். ஒன்றாக வெளியில் சென்று வரமுடியாது. ஒவ்வொருத்தராகத்தான் கடமைகளை முடிக்கலாம்.

எனக்கு வெளியில் செல்லவேண்டிய அலுவல் இருந்ததால் முதலாவது ஆளாக ஓடிப்போய் காலைக்கடனை முடித்துக் கொண்டு ஓடி வந்தேன்.

நான் அணிந்திருந்த ஆடை மிக அழுக்காகி இருந்தது.இருந்த ஒரேயோரு மாற்றுடையை எடுத்து அணிந்து கொண்டேன். வெளியில் வெளிச்சம் பரவத் தொடங்கியது.

சுற்றி எங்கும் எழும்பிய கரும்புகையால் வானமே கருமேகம் சூழ்ந்து கிடந்தது.ஆனால் அந்த கருமேகத்திரளுக்குள்ளும் புகுந்து படமேடுத்துக் கொண்டு இருந்தது வேவு விமானம்.

''வண்டைப் பார்த்துக் கொண்டு நின்றால் வேலைக்காகாது,''

எனது உடமைப்பையை முதுகில் அடித்துக் கொண்டு முன்னரங்கிற்குச் செல்லத் தயாரானேன்.இவ்வளவு நாளும் எங்கு வெளிக்கிட்டாலும் உடைமை பையைக் சுமக்கும் வேலை இருக்கவில்லை. கவியும் இசையும் இருந்ததால் அவர்களே அதை வைத்திருந்தார்கள்.

ஆனால் இப்போது அதையும் காவ வேண்டி இருந்தது.

''ஒயாம அடிச்சுக் கொண்டு இருக்கிறான்.. பாத்துப் பத்திரமாப் போயிற்று வாங்க..,எல்லா அலுவலையும் முடிச்சிற்று இஞ்ச வாங்கக்கா..''

அவள் வழியனுப்பி வைத்தாள்.

''திரும்பி வந்தால்தான் கண்டு கொள்ள வேண்டும்''

நான் சிரித்துக் கொண்டே இறங்கினேன்.

மூச்செடுக்க முடியாதடி எங்கும் புகை மண்டலம்,இரசாயன நெடிகளைக் காவி வந்தது காற்று. இப்போது மக்களால் சுவாசிக்கக் கூட முடியவில்லை. உண்ண உணவில்லை, தூக்கமில்லை,இருக்க பாதுகாப்பான இடமில்லை,காயப்பட்டால் மருந்தில்லை, உறவுகளை இழந்த துயரமும்,வலிகளால் கதறும் உறவுகளின் வேதனையின் முனகலுமாய் உயிரோடே சாவின் வலிகளைச் சுமந்துகொண்டு நடைப்பிணமாய் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

ஓரு வயதான அப்பா ஈருருளியில் வைத்து ஒரு 22,23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை உருட்ட முடியாது உருட்டிக் கொண்டு சென்றார். அவளது தலையில் பெரிய கட்டுப்போடப்பட்டிருந்தது. ஆனால் அந்தக்கட்டையும் மீறி உடலெங்கும் இரத்தம் சொட்டிக் கொண்டு இருந்தது. அவளில் எந்தச் சலனமும் இல்லை பக்கத்திலே அந்தப் பெண்ணைப் பிடித்தபடி ஓர் அம்மாவும் நகர்ந்து கொண்டு இருந்தார்.

''பயப்பிடாத பிள்ள...,

அப்பா இருக்கிறன்..,

என்னபாடுபட்டாவது பிள்ளையக் காப்பாற்றியிருவன்., அப்பா பக்கத்திலதான் இருக்கிறன் தைரியமா இரம்மா..''

மகளுக்கு நம்பிக்கை ஊட்டியபடி பேசிக்கொண்டே வந்தவரது விழிகள் இரண்டும் கண்ணீரால் நிரம்பி வழிந்தது.அம்மா பேயறைந்தது போல பின்னாலே சென்று கொண்டிருந்தார்.

அந்த அப்பாவின் கண்ணீர் ஒரு மகளாக என்னுடலைப் புல்லரிக்கச் செய்தது. என்னுடைய பையில் அவசரத்துக்கு உதவுமென்று எப்போதும் இருக்கும் விழுப்புண்களுக்கு கட்டுப்போடும் துணியை எடுத்துக் கொண்டு அப்பா பின்னே ஒடினேன்.

''கொஞ்சம் நில்லுங்கப்பா..இரத்தம் கசியாம கட்டுப் போட்டுவிடுறன்''

அப்பா வேண்டாமென்று தலையசைத்தார். எனக்கு குழப்பமாக இருந்தது. ஏன் வேண்டாமென்று சொல்கிறார்.. யோசனையூடே சென்றுகொண்டிருந்தேன். சிலநொடிகள் கழிந்திருக்கும், டமார் என்ற சத்தம் அப்பாவின் ஈருருளி கீழே கிடந்தது.

மகள் அசைவற்றுக் கிடந்தாள்.

'' எனக்குத் தெரியுமம்மா..

என்ர பிள்ள என்னவிட்டிட்டு போகப்போறாள் எண்டு..

என்ரபிள்ளையக் காப்பாற்ற முடியாதென்று எனக்குத் தெரியுமம்மா..,

என்ர பிள்ளையல் எல்லாத்தையும் பறிச்சிற்றாங்களே..,

நேற்றுத்தானே இரண்டு பிள்ளைகள அள்ளிப்போட்டிட்டு வந்தனான்..

இண்டைக்கு உன்னையும் கொடுத்திற்றனே..,

என்ர வம்சத்தையே அழிச்சிட்டாங்களே...,

கடவுளே..உனக்குக்கூட கண்ணில்லையா.. ''

அந்தத் தந்தையின் கதறல் ஒலி என் நெஞ்சை நெருடியது. அந்த அம்மா அப்போதும் பேசாமல் இருந்தார்.

''உன்னப்போல இருந்திருந்தா இந்தக் கொடுமையெல்லாம் தெரியாமலே இருந்திருக்குமே..''

மனைவியைக் கட்டிப்பிடித்து அழுதுதார்.அப்போதுதான் புரிந்தது அந்த அம்மா தன் சுய நினைவை இழந்திருந்தாரேன்று..

அதையும் கடந்து போய் வீதிக்கு ஏறினேன். மக்கள் தற்காலிகமாக இருந்த இடங்கள்.உடமைகள் எல்லாம் சிதறுண்டு கிடந்தன. பனைமரங்கள் பலவற்றை தீயின் நாக்குகள் இன்னும் தனக்கு இரையாக்கிக் கொண்டு இருந்தன.

வீதியின் மருங்கில் நின்ற ஊர்திகள் எரிந்தும் சிதறுண்டும் கிடந்தன.அழிவின் கோரத்தை அப்பட்டமாய் அந்தப்பகுதி பறைசாற்றிக் கொண்டிருந்தது. எனக்கு எதிர் திசையிலிருந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

''அக்கா.. என்ர பிள்ளையப் பாருங்கக்கா...''

அதற்கு மிஞ்சி அவளால் பேசமுடியவில்லை..கதறி அழுதபடி இரண்டு கையிலும் குழந்தையை எந்தியபடி ஓட்டமும் நடையுமாய் வந்துகொண்டிருந்தாள் ஒரு போராளி.

அவளது கையில் இருந்த குழந்தையைப் பார்த்தேன்..வெள்ளை வெளேரென்று அழகாய்க் கிடந்த குழந்தை விழிகளை மூடி உறக்கத்தில் இருப்பது போலவே எனக்குத் தெரிந்தது.அந்தக் குழந்தை இறந்து கிடக்கிறான் என்பதை என்னால் நம்பக் கூட முடியவில்லை.

அவளை மறித்துவைத்து கதைகேட்கும் அளவுக்கு சூழலும் இல்லை.அவள் பேசக்கூடிய நிலையிலும் இல்லை. அவளுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாதவளாய் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

ஏற்கனவே அவளது கணவன் மண்மீட்புப் போரிலே வீரச்சாவடைந்திருந்தான். இப்போது அவளது குழந்தை.. என்னையறியாமலே விழிகள் கலங்கின.கண்ணீரைத் துடைத்தபடி நடக்கத் தொடங்கினேன்.

என்னையே இலக்கு வைத்து பின்தொடர்வது போல தலைக்கு மேலே வண்டு சுற்றிக் கொண்டிருந்தது.

வீதியின் வெட்டைப்பகுதியைத் தவிர்த்து கொஞ்சம் உட்பகுதியால் நடக்கத் தொடங்கினேன்.

அந்தப்பகுதி எங்கும் மரங்கள் முறிந்தும், எரிந்தும் சிதறுண்டும் கிடந்தன. அதுகும் மக்கள் தற்காலிகமாக இருந்துவிட்டுச் சென்ற இடம்தான்.

சீறி வந்த துப்பாக்கிச் சன்னம் எதிரி பக்கத்தில்தான் என்பதை உணர்த்தியது.சுதாரித்துக் கொண்டேன். முன்னரங்கு என்பது பெரிய மண்காப்பரண் அமைத்து நின்று சண்டை செய்யும் இடமல்ல.

சாதாரண பாதுகாப்பழிகளுக்குள்ளும், நிலக்காப்பு மறைப்புக்களிலும் நின்றுதான்; போராளிகள் எதிரியின் நகர்வைத் தடுத்து சண்டை செய்து கொண்டிருந்தார்கள்.

அதற்குள் எங்கட பிரிவுக்கார போராளி ஒருவர் என்னைக் கண்டுவிட்டு அழைத்தார். அவர் 50 கலிபர் கனரக ஆயுத நிலையில் நின்று கொண்டிருந்தார்.

''அண்ண..எங்கட பிள்ளைகள் எங்காலப் பக்கம் நிற்கினம்..''

அந்த அந்தப் போராளியிடம் கேட்டேன்.

''இதில கரும்புலிக்காரப் பிள்ளைகள் இரண்டு பேர் நிற்கினம்..

அவைக்குப் பக்கத்தில பூரணியக்காவோட கொஞ்சப் பிள்ளைகள் நிக்கினம்...

அது சரி தங்கச்சி கண்டபாட்டில திரியாதையுங்கோ...,

கண்மண்தெரியாம அவன் அடிக்கிறான்...

அநியாயமா சாகதையுங்கோ..''

நாளை தொடரும்… தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 2 தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 3 தடம் அழியா நினைவுடன் … மே-14 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-15 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-15 – பகுதி 2
 தாரகம் இணையத்திற்காக அ. அபிராமி