தடம் அழியா நினைவுடன் … மே 15 -பகுதி – 4 அ. அபிராமி

breaking

அந்தண்ணா கண்டிப்பு நிறைந்த குரலில் பேசினார்.தலையாட்டிக் கொண்டே அவர் காட்டிய இடத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன்.

அதற்குள் அவர்கள் என்னைக் கண்டுவிட்டு, மேலே வண்டு நிற்பதைக் காட்டி அங்கால போகவிட்டு வரும்படி கைச் சைகையால் காட்டினார்கள். நானும் எரிந்தும் எரியாமலும் தலைசிதறி முண்டமாய் நின்ற பனைமரங்களோடு பனை பரமாய் வண்டு நகரும்வரை நின்று விட்டு, அவர்கள் இருந்த இடத்துக்குச் சென்றேன்.

அவர்கள் இருந்த இடத்தில் நின்ற மரம் பிரிந்து நார்நாராய்த் தொங்கியது. தங்களுக்கு மறைப்பாக பக்கத்தில் சிதறிக்கிடந்த சில மரக் கொப்புகளையும் இழுத்துவந்து போட்டிருந்தார்கள்.

'என்ன பிள்ள.. இன்னும் இந்த பேட்டி எடுக்கிற, அறிக்கை எடுக்கிற தொழிலக் கைவிடேல்லையா..''

அந்தக்கரும்புலிக்கார அக்கா என்னைக் கிண்டல் செய்தார்.

''போங்கக்கா..,ஆளணிக்கட்டமைப்பு, களநிலைஅறிக்கை ஒவ்வொருநாளும் நேர வந்து பார்த்துத்தான் விபரம் எடுத்துக் கொடுக்க வேணும்.. '' நான் வந்த விடயத்தைச் சொன்னேன்.

அந்த அக்காவோடு இருந்தவள் தனது பொய்க்காலை சரி செய்து கொண்டிருந்தாள். அவளது காலின் பாதப்பகுதி ஆடிக்கொண்டிருந்தது.

அவளுக்கு நடப்பதற்கு சரியான சிரமமாக இருக்கும் என்பதை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்.

''கால் சரியா பழுதாயிற்றுப்போல..''

அவளிடம் கேட்டேன்.

''அதையேன் கேட்கிற, அவளின்ர காலில செல்லுக்கொரு கண்ணு..,நியக்கால்தான் செல்லடியில போயிற்றென்று பார்த்தா..,பொய்க்காலும் செல்லடியில போயிற்றுது.., இப்ப பழுதாப்போயிற்று என்று கழிச்சு வைச்ச கால்தான் கை கொடுக்குது..''

அந்த அக்காதான் சிரித்தபடி பதில் சொன்னார்.

இந்த இறுக்கமான சூழலுக்குள்ளும் சிரித்துப்பேசி மகிழ்வாக இருக்க அவர்களால் மட்டும்தான் முடியும்.சாவைக் கூட சிரித்தபடி ஏற்றுக் கொள்பவர்கள் ஆச்சே, அவர்களோடு இருந்தால் பொழுது போவதே தெரியாது.

''அக்கா..வண்டின்ர சத்தம் தூரவாக் கேட்குது,அடுத்த சுற்று வாறதுக்க நான் வெளிக்கிடப்போறன் ..''

நான் புறப்படத்தயாரானேன்.

''அதுசரி பிள்ள நாங்க செத்தா எங்களப் பற்றி எழுதுவதானே..,அப்ப ஒரு பின்னிணைப்பு.., இதையும் சேர்த்துவிடு.''

நான் அவரை முறைத்துப் பார்த்தேன்.

'' இல்லப்பிள்ள..உண்மையாத்தான் சொல்லுறன்...மக்களிட்டச் சொல்லு எப்பவும் நாங்க உங்கள இஞ்ச சுமந்திருக்கும் என்று..''

தனது கையால் நெஞ்சைத் தட்டிச் சொன்னார். மக்கள் என்ற சொல் அந்தக் கல்லைக் கூட கசிய வைத்திருந்தது. அந்த அக்காவின் முகத்தில் தெரிந்த குறும்புத்தனம் இப்போது இல்லை.

''நான் உயிரோட இருந்தா கண்டிப்பா சொல்லுவன் அக்கா..''

அவரது முகத்தைப் பார்க்கும் தைரியம் இன்றி மளமளவென நடக்கத் தொடங்கினேன்.

எத்தனையோ கடல் நடவடிக்கைகளின் போதும், கடற்சண்டைகளின் போதும் சிம்மசொப்பனமாய் கடல் மடியில் வெடிமருந்துப் படகோடு எதிரியைத் துரத்தியடித்தவர்கள், இன்று முன்னரங்குகளிலே தமது உடல்களில் வெடிசுமந்து எந்த நேரத்திலும் தம்மை அர்பணிப்பதற்குத் தயாராகக் காத்திருந்தார்கள். அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டே சென்றேன்.

காலில் ஏதோ இடறுப் பட்டது.குனிந்து பார்த்தேன். பனம் பாத்தி போட்டதுபோல் கொஞ்சம் அகலமாய் மண் உயர்த்திக் கிடந்தது. பக்கத்திலே சிதறிக்கிடந்த தரப்பால் கொட்டில், சேலைகளில் வெட்டித்தைத்த பைகளில் மண்நிரப்பி மூட்டைகளாய் அடுக்கியிருந்த

பாதுகாப்பரண், எல்லாமே சிதறுண்டு கிடந்தது. இதில் சாவடைந்தவர்களை புதைத்திருக்கலாம். எனது கால்பட்ட இடத்தை தொட்டு வணங்கி விட்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். ஒரு இளவயது பெண் தோளிலே ஒருவரை அணைத்தபடி வந்து கொண்டிருந்தார்.அந்த அண்ணனின் நெஞ்சுப் பகுதியிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. கால்கள் இரண்டிலும் சாக்குக் கட்டியிருந்தது.அவரால் கொஞ்சம் கூட நடக்கமுடியவில்லை.கால்களை இழுத்திழுத்து மெல்ல நடந்து கொண்டிருந்தார்.

''என்னால இனி ஏலாது..,என்னப் பாக்காத..,என்ன விட்டிட்டு நீ போம்மா..''

அந்தப் பெண்ணிடம் தன்னை விட்டுவிட்டு செல்லும்படி அவளின் கணவர் சொல்லிக் கொண்டே வந்தார்.

''இல்ல..கடைசிவரை நான் உங்கள விட்டிட்டுப் போகமாட்டன் என்ன நடந்தாலும் இரண்டு பேருக்குமே நடக்கட்டும்..''

அந்தப்பெண் கணவனைக் கூட்டி செல்வதில் உறுதியாக இருந்தார். நான் அவர்களை நெருங்கினேன்.

''நான் ஏதாவது உதவி செய்ய வேணுமாக்கா...''

அந்தப் பெண்ணிடம் கேட்டேன்.

''தங்கச்சி ..உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்..இவருக்கு மருந்து கட்ட ஏதாவது உதவி செய்ய முடியுமா..''

தனது கணவனை பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்க்கத் துடிக்கும் அந்தப் பெண்ணிடம் எங்கள் மருத்தவப் பிரிவு இயங்கிக் கொண்டிருக்கும் இடத்தைக் காட்டினேன்.

''இந்தா இதில தெரியிற பனங்கூடலுக்கு பக்கத்தில எங்கட மருத்துவப்பிரிவு இருக்கு..அங்க போனீங்கள் என்றால் மருந்து கட்டிவிடுவினம்...,நீங்க போவீங்களா..?இல்லை வரவா? என்று கேட்டேன்..''

''பக்கத்திலதானே நாங்கபோயிருவம்..''

அவர்கள் நகர நான் கடற்கரை பக்கமாக இருந்த நிலைகளை நோக்கி நடக்கத் தொடங்கினேன். எனது பணியை முடித்துக் கொண்டு கடற்புலிகளின் தளமமைந்திருந்த பகுதிக்கு வந்துகொண்டிருந்தேன். அங்கே உழவு இயந்திரப் பெட்டி ஒன்றில் களமுனைகளில் வீரச்சாவடைந்திருந்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைப்பதற்காய் வைக்கப்பட்டிருந்தது. அந்த வித்துடல்களைப் பார்ப்பதற்காக பெட்டியடியில் எட்டிப் பார்த்தேன்.

அதுகூட எதிரிக்குப் பொறுக்கவில்லைப் போலும்.அந்த இடத்தையே குறிவைத்து மோட்டார் எறிகணைகளால் பொழியத் தொடங்கினான். அது படையணித் தளமாக இருந்தால் ஆங்காங்கே பாதுகாப்பகழிகள் வெட்டப்பட்டிருந்தன.ஓடிப்போய் பக்கத்தில இருந்த பாதுகாப்பகழிக்குள் குதித்தேன். விடிந்ததில் இருந்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லை.வெறும் வயிறு.வித்துடல்களில் இருந்து வந்த நெடியென எல்லாம் சேர்ந்து வயிற்றைப்பிரட்டத் தொடங்கியது.

ஒருவாறு அடி கொஞ்சம் குறைய எழுந்து எனது தோழி இருந்த இடம் நோக்கி நகர்ந்தேன். விழுப்புண்களின் வலிகளோடு கதறுபவர்களும், இறந்து போன தம் உறவுகளின் உடலங்களை வைத்து அழுபவர்களுமாய் எங்கள் உறவுகளின் அவலக்குரல்கள் நெஞ்சைப் பிளிய வைத்தது. இடங்களும் மிகக் குறுகி விட்டிருந்தன. தலை தூக்கமுடியாதபடி நாலாபக்கம் இருந்தும் எதிரியின் தாக்குதல்கள்.அவ்வளவு அடிக்கும் யார் மிஞ்சுவார்கள் என்பதே தெரியவில்லை.அன்றைய இரவு இன்னும் பயங்கரமாக இருந்தது.

நாளை தொடரும்… தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 2 தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 3 தடம் அழியா நினைவுடன் … மே-14 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-15 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-15 – பகுதி 2 தடம் அழியா நினைவுடன் … மே-15 – பகுதி 3
 தாரகம் இணையத்திற்காக அ. அபிராமி