காலத்தின் சாட்சிகள் - ஆதிலட்சுமி சிவகுமார்....

breaking
வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயத்தின் சுற்றாடலில் ஒரு கல்வீடு. அந்த வீட்டைச் சுற்றியிருந்த வெளிமுமுவதும் சனங்கள். திருவிழாக்கால வீதிகள்போல தோற்றங்காட்டியது அந்நிலப்பகுதி. மேலே வானம் வில்லாய் வளைந்திருந்தது. ஒவ்வொரு இடத்திலும் படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைய.... நகர்ந்து நகர்ந்து வலைஞர்மடம் என்ற இந்த கடலோரக் கிராமத்தை வந்தடைந்துவிட்டோம். மேலே அடிக்கடி வந்து சுற்றிச் சுழன்று மிரட்டிவிட்டு... எங்காவது குண்டுகளைத் தள்ளிவிட்டுப் போகும் விமானங்கள்.  கூடவே எறிகணைகளின் இரைச்சலும் வெடிப்புகளும்..... தூரத்தே இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும் வேட்டொலிகள்..... சனங்கள் ஆற்றாமையோடும் அழுகையோடும் அச்சத்தோடும் இருந்தார்கள். அபூர்வமாய் அந்தவெளியில் ஒருகாட்டுமரம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நீட்டியிருந்த கிளைகளில் கொஞ்சமாய் இலைகள். எஸ்கிமோவர்களின் பனிவீடுகளை நினைவுபடுத்தும் சனங்களின் தறப்பாட் கொட்டில்கள்..... இடைவெளிகளற்று நிறைந்து கிடந்தன..... சனங்களின் மனங்களைப் போல.... அடுப்புகள் ஆங்காங்கே புகைந்துகொண்டிருந்தன..... மரம் ஒன்றிற்கும்  ஒரு தறப்பாட் கொட்டிலுக்கும் இடையே கிடந்த சிறிய இடைவெளியில் இடம்பிடித்து நானும் என்னோடுவந்த இன்னொரு குடும்பத்தின் ஐவருமாக அமர்ந்துகொண்டோம்.. பேய்க்களை என்பார்களே.... அதற்கும் மேலாக களைத்துப்போயிருந்தோம். ஆனாலும் எறிகணைகள் துரத்திக்கொண்டுதான் இருந்தன. மணல்தறை என்பதால் பாதுகாப்பு குழிகள் வெட்ட இயலாது. வெட்டுவதற்கும் சனங்களிடம் தெம்பில்லாதிருந்தது. அந்தவீட்டின் ஒரேயொரு கழிப்பறை. எந்தநேரமும் வரிசையில் நிற்கும் பெண்கள். எல்லாமே எங்களுடைய சனங்கள் தான். சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தது.... வயதானவர்களும், காயமுற்ற சிலரும் இலையான்கள் மொய்க்கக் கிடந்தார்கள். நடமாடும் வலுவுள்ள ஆண்கள் பெரும்பாலும் இரவுகளில் கடற்கரையை கழிப்பிடமாக்கினார்கள்.   சிலநாட்களாக குளிக்கவோ... கடன்களைக் கழிக்கவோ எமக்கு  இடமில்லை. கழிப்பறை வரிசையில் நின்று நின்று நலைகுலைந்து போனோம். பசியையும் கழிப்பு உணர்வையும் அடக்கிக்கொண்டிருந்தோம். எல்லா இடத்திலும் ஈ மொய்த்தது போலச்சனம். ஒவ்வொருவரில் இருந்தும் கிளம்பிய துர்நாற்றம் அவரவர்க்கே  சகித்துக்கொள்ளவியலாத நிலை. இன்னொருவர் கிட்டவந்தால் மற்றவரால் தாங்கமுடியாத நிலை.   துணைவனையும் ... மகனையும் எண்ணி எண்ணி மனது தளர்ந்துகொண்டிருந்தது.... கெட்ட சேதி வந்துவிடக்கூடாது என்கின்ற எண்ணம் கடந்து.... வரவுள்ள கெட்ட சேதியை தாங்கிக்கொள்ளவேண்டும் என மனது  அடிக்கடி தன்னைத்  தயார்ப்படுத்திக் கொண்டிருந்தது. நாங்கள் இருந்த வளவின் முன்பக்கமாகவும் இடதுபக்கமாகவும் தெருக்கள் இருந்தன. தூரத்தூரவாக வீடுகள் தெரிந்தன... எல்லாவீடுகளும், வளவுகளும் சனங்களால் நிரம்பிவிட்டிருந்தன. இரவுகளில் நிலாவும் நட்சத்திரங்களுமே உறவுகளாகின.... அவற்றோடு சேர்ந்து பழுத்துத் தொங்கும் பழங்களாய் வெளிச்சக்குண்டுகள்.... தேவாலயம் கடந்து போக.... தெருவின் ஓரங்களில், இடம்பெயர்ந்திருந்த சனங்கள் தங்களிடமிருந்த பாவனைப்பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார்கள்.... அவ்விடத்துக்கு போனால் யாராவது தெரிந்தவர்களைக் காணலாம். அப்படிக் கண்டால்... எங்காவது என் மகனைப் பார்த்தீர்களா எனக் கேட்கலாம்... இவ்வளவு நாட்கள் அவனைப் பிரிந்ததே இல்லை... பசிக்கும்போது என்ன செய்வான்.... எங்கே படுத்து உறங்குவானோ... என்றெல்லாம் மனது அந்தரித்தது...... நான் சேர்ந்திருந்த குடும்பத்து அம்மாவிடம் சொல்லிவிட்டு.... மெல்ல நடந்தேன்... யாரையும் உரசிக்கொள்ளாமல் தெருவில் நகரமுடியாதிருந்து. களைத்துப்போன சனங்கள் தனியாகவும், குடும்பமாகவும், கூட்டமாகவும் அமர்ந்திருந்தார்கள். சாக்குருவி அகலத் திறந்த வாயுடன் அலைவது போன்ற உணர்வின் உறுத்தல் ஆட்கொண்டிருந்தது. தெரிந்த ஆண்கள் சிலர் தோற்றம்மாறியிருந்தார்கள். என்னோடு வானொலியில் பணியாற்றிய ஒருவர், என்னைக்கண்டபோது.... பேசமுடியாமல் தலையை மட்டும் அசைத்தார். அவரது கோலம் மனதை வருத்தியது. சனங்களைப் போலவே போராளிகளும் நடமாடிக்கொண்டிருந்தார்கள். தெரிந்த... பழக்கமான ஆண்பெண் போராளிகளைக் கண்டாலும் நின்று நிதானித்து கதைக்கக்கூடிய சூழ்நிலை இல்லாதிருந்தது. தனித்துப்போன நிலையில்... கனத்துப்போன மனதுடன் கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு புன்னகைத்துவைத்தேன். இப்போது ஒருபெரும் ஆலமரத்தடி. சனங்கள் மிக அதிகமாகத் தெரிந்தார்கள். தற்செயலாக அவளை அங்கு கண்டேன். அடிக்கடி என்னை தேடி வருபவள். அது அவளது கடமை. அதையும் தாண்டி நான் அவளையும், அவள் என்னையும் புரிந்து வைத்திருந்தோம். தன் பணியின் தன்மைகளை, அதில் ஏற்படும் நெளிவுசுழிவுகளை, இன்னும் பலவற்றை நாங்கள் பேசிக்கொள்வோம். “ அக்கா... எங்கை இருக்கிறியள்.... அண்ணை எங்கை...... “ என்று கைகளைப் பற்றி....நலம் விசாரித்தவளைப் பார்த்தேன். செம்மஞ்சள் நிறத்தில் ஒரு சுடிதாரும், நீலநிறத்தில் நீளக்காற்சட்டையும் அணிந்திருந்தாள். சத்தின்றி வெளிறிப்போன முகத்தில் வியர்வைபூத்திருந்தது. இரண்டாவது தடைவையாக தாய்மையுற்றிருந்தாள். குழந்தைப் பேற்றை அண்மித்துவிட்டாள் எனப் புரிந்தது. “ கண்டமாதிரி செல் வருகுது.... இந்தநிலைமையில... அதுவும் தனியா ஏன் இதிலை..... “  கொஞ்சம் உரிமையெடுத்து, கடிந்தேன். “ இல்லையக்கா.... தெரியும் தானே.... ஒருவேலையா வந்தனான்.... போகப்போறன்.... நீங்கள் கவனம்.... அண்ணைக்கு ஒண்டும்நடக்காது... பயப்பிடாதேங்கோ.... போய் அங்கயே இருங்கோ.... திரியிறது தான் பயம்.....” எனக்கு அறிவுறுத்தினாள். கருவைச் சுமந்தநிலையில் அவளும் அவளின் போராளித் துணைவனும் உடையார்கட்டுப் பகுதியில் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பியதையும் நான் பார்த்திருந்தேன். இருவரும் விடைபெற்றோம். அவளது போராளித்துணைவன் இப்போது வேறுபணியில். இவள் இங்கே வேறுபணியில்.   கனத்துப்பருத்த இதயத்துடன், தங்கியிருந்த  மரத்தடிக்கே வந்துவிட்டேன். அதற்கு அடுத்தடுத்து வந்தநாட்களில் மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் என எல்லாஇடங்களையும் படையினர் எறிகணைகளால் பொழிந்து தள்ளினார்கள். ஓடி ஒளிவதற்கு இடமில்லை. உண்டியல்சந்தி......... முள்ளிவாய்க்கால்..... நந்திக்கடற்கரை  என ஓடினோம். உடல்கள் பலமிழந்து கண்கள் பழுத்துப்போய்விட்டன..... கால்கள் குச்சிகளாகி நடப்பதற்கு மறுப்புக்காட்டின....மரணம் எங்களுக்குள் நுழைந்து,  கிட்டத்தட்ட அரைப்பிணமாகிவிட்டார்கள் சனங்கள். கழுத்தில் கௌவிப்பிடித்துவிட்ட சிங்கத்தை பலமுள்ளவரை இழுத்துச் செல்லுமே சின்னஞ்சிறு மான்.... அந்த நிலையில் தான் இருந்தோம். போராளிகளை நானறிய யாரும் திட்டவில்லை. “ இரவு பகலா ஓயவிடாம அடிச்சா... பிள்ளையளும் தான் என்ன செய்யிறது.... “ என கவலையோடு சொல்லிக்கொண்டுதான் சனங்கள் நகர்ந்தார்கள். சரியான சாப்பாடு இல்லாத நிலையிலும் காயப்பட்ட சனத்தைக் காப்பாற்றிக்கொண்டும், சனத்தின் காயங்களுக்கு  கட்டுப்போட்டுக்கொண்டும் இருந்த போராளிகளை என் கண்கள் கண்டதை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். இப்போது நடத்தப்படும் போர் என்பது... காட்டுமிராண்டித்தனமானது.... இது மிகவும் சூழ்ச்சிகரமாக..... தமிழ்ச்சனங்களின்மேல் அரசால் ஏவப்பட்டிருக்கிறது என்பது போகப்போக  எல்லோருக்கும் புரிந்தது. நிறையப்பேர் இறந்துவிட்டார்கள். எஞ்சியிருப்பவர்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனப் பலரும் நினைத்திருக்கவேண்டும்.   அடித்துக்கொட்டும் பேய்மழையாய்.... குண்டுகளும் துப்பாக்கிச் சன்னங்களும் கொட்டத் தொடங்கிவிட்டன..... உயிர்காக்க வேண்டி சனங்கள் ஓடத் தொடங்கிவிட்டார்கள். எல்லாமே மௌனித்துப் போனது..... முள்ளிவாய்க்கால் தமிழ்சனங்களின் மனங்களில் ஆறாத காயமாகிப்போயிருக்கிறது.....   காலத்தின் நகர்வில்.... எல்லோரும் எங்கெங்கெல்லாமோ விசிறப்பட்டோம். நான் வந்துவிழுந்த இடம் சுவிற்சர்லாந்து. சுவிற்சர்லாந்தின் மிகப்பெரிய இரண்டாவது நகரமும், சர்வதேசமுக்கியத்துவம் கொண்டதுமான ஜெனிவாவில் ஒருபெரும் நிகழ்வு..... முள்ளிவாய்க்கால் சனநெரிசலை நினைவுபடுத்தும் காட்சி. திரும்பிய இடமெங்கும் தமிழின் உரையாடல் காதில் ஒலித்தது. “ அக்கா.... இஞ்சயா இருக்கிறியள்..... “ கைகளைப் பற்றிக்கொண்டாள் அவள். என்னுடைய அவளே தான். முன்னெற்றியில் இழையோடும் சில நரைமுடிகள் தான் புதிது. மற்றும்படி அப்படியே இருந்தாள் அவள். “ அக்கா... அண்ணை சுகமா இருக்கிறாரோ... வந்தவரோ.... “ என அக்கறையோடும் பெருகிவழியும் பேரன்போடும் கேட்டாள். பிறகு... அவளும் நானும் சனக்கூட்டத்தை விட்டு ஒரு மரத்தடியில் ஒதுங்கினோம். இன்னொரு அயல்நாட்டிலிருந்து ஜெனிவாவின் நிகழ்வுக்கு பேருந்தில் அவள் வந்திருந்தாள். பாயும் காட்டாறாய்.... பலவற்றைப் பேசினாள். அவள் பேசட்டும் என விட்டுக்கொடுத்து.... கேட்டுக்கொண்டிருந்தேன். “ உங்களைக் கண்டபிறகு ஒருதரம் என்ரை ஆளைக் கண்டனான் அக்கா.... ஒருநாளும் என்னட்டை அப்படிக் கதைக்கிறேல்லை... அண்டைக்கு... ‘பிள்ளையளுக்கு அம்மா கட்டாயம் தேவை.... கவனம்.... என்னைப்பற்றி கவலைப்படாதை...... காலம் நல்லமாதிரி மாறினால் நாங்கள் திரும்பவும் சந்திப்பம்........ஒருவேளை நானில்லாம போனாலும்......நான் உன்னோடைதான் இருக்கிறன் எண்டு நினைச்சுக்கொண்டு.......... பிள்ளைகளை வளர்த்தெடு ....எண்டு சொல்லிச்சுது..... தன்னை எதிர்பாக்க வேண்டாமெண்டும் சொல்லிச்சுது.... அவ்வளவும் தான்..... “ உதடுகள் துடிக்க.... அவளின் கண்கள் சிவந்தன. அவளையும் மீறி அழப்போகிறாள் எனப் புரிந்தது. “ அழவேண்டாம் பிள்ளை.... நான் தாங்கமாட்டன்.... “ அவளை அணைத்துக் கொண்டேன். அவள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள்...... “ இவர் நீங்கள் சின்னனாகப் பாத்த ஆள்... இவதான் நீங்கள் பாத்தநேரம்  வயித்தில இருந்த ஆள்.... இரண்டுபேரும் பெரியம்மாவுக்கு வணக்கம் சொல்லுங்கோ... “ என்றாள். தேன்தமிழில் வணக்கம் என்றார்கள்.  பிறகு நிகழ்வை வேடிக்கை பார்க்க தொடங்கினார்கள். “ சின்னனுக்கு தேப்பனை தெரியாது தானே... படத்தை வைச்சு ஏதோ கதைக்கும்.... தேப்பனிலை சரியான உயிர்.... பெடிப்பிள்ளை இப்ப கொஞ்சம் வளந்திட்டார்தானே.... நான் கவலைப்படக்கூடாதெண்டு நினைக்கிறார்..... “ என்றாள். பிறகும் பல விடயங்களை பேசினோம். பேற்றுக்காலம் அண்மித்துவிட்டது.. நகரமுடியாத சனநெரிசலில் அவளுக்கு குழந்தை பிறப்பதற்கான நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அவளது சிறிய மகனும் இன்னும் இரண்டு தோழிகளும், அம்மாவும் அவளுடன் வந்தனர். கிபிர் விமானங்கள் இரண்டோ மூன்றோ தாழப்பறந்து கீச்சிட்டன...... குண்டுகள் விழுந்த அதிர்வு... அவள் நிலத்தில் கிடந்தாள். அம்மா அழுவது இலேசாகத் தெரிந்தது. தோழிகள் காயப்பட்டுவிட்டனர். இவள் எப்படியோ அம்மாவுடனும் மகனுடனும் Zone 4 முகாமுக்கு வந்துவிட்டாள். படுத்த படுக்கையிலேயே கிடந்தாள். அம்மாதான் முகாமில் இராணுவத்தினருடனும், மருத்துவர்களுடனும் வாதாடி,  அவளை முகாமிற்கு வெளியே அரச மருத்துவமனைக்கு போக அனுமதி எடுத்தாள். வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது..... அவளுக்கு நினைவில்லை. மயக்க நிலையிலேயே பெண்குழந்தை பிறந்தது. எப்படியோ... இராணுவத்தினருக்கு அவளைப்பற்றிய தகவல்கள் கிடைத்துவிட்டன. வெளியேறிவிட இயலாத உடல்நிலை. மருத்துவ மனையிலேயே கண்காணிக்கப்பட்டு வந்தாள். ஒருநாள் அங்கு கடமையில் இருந்த...... இளகிய மனங்கொண்ட மருத்துவர் ஒருவரின் உதவியோடு, அவள் வெளியே வர முடிந்தது. உடல்நிலை தேறமுடியாத நிலையில் போக்கிடமின்றி... குழந்தையோடு யாருமற்று, தனித்து   நின்றவளை.... “ பயப்பிட வேண்டாமக்கா.... நாங்கள் கடமைகளுக்காக முதலே இங்க வந்திட்டம்.... “ எனச் சொல்லிய முகம்தெரியாத இளைஞர்கள் பாதுகாத்தனர். ஒருவாறு அம்மாவின் தொடர்பு கிடைத்து.... வெளிநாட்டில் இருந்த, மைத்துனனுக்கு தகவல் சொல்லி.... ஓரிரு வாரங்களில் அயல்நாடு வந்தாள். அங்கேயும் பாதுகாப்பற்ற நிலை. வெவ்வேறு பிரச்சனைகள் வெவ்வேறு வடிவங்களில் துரத்தின.... தெரிந்தவர்களிடம் கூட பழகுவதற்கு பயப்படவேண்டிய சூழலும் மனநிலையும். அதன்பிறகுதான் அவள் புலம்பெயர்ந்து வந்தாள். இப்படியே கதைசொன்னவள்.... தன்னுடன் நின்று, உயரிழந்தவர்களை... அவர்களின் குடும்பங்களைப் பற்றி கவலையோடு சொன்னாள். “ நாங்களெண்டாலும் போராட வந்தனாங்களக்கா.... எதையும் தாங்கத்தான் வேணும்.... ஆனா....எங்கட சனம் பாவம்.... சனம் கஸ்டப்படுறதைதான் தாங்கேலாம கிடக்கு.....பிள்ளையளுக்கும் எல்லாம் சொல்லித்தான் வளக்கிறன்...நானில்லாட்டிலும் எங்கட சனத்துக்கு எல்லாம் செய்யவேணும்......“ அவள் சொல்லிய அந்த வார்த்தைகள் மனதை எதுவோ செய்தன. அவளின் போராளித் துணைவனுக்கு என்ன ஆயிற்று என்பது தெரியாது. அவளைப் போல தங்கள் தேசத்திற்காக... போராடி... இழப்புகளையும் துயரங்களையும் தாங்கிக்கொண்டும் ஏற்றுக்கொண்டும் இன்னும் பலபேர் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு காலத்தின் சாட்சிகள்.  
 தாரகம் இணையத்திற்காக  ஆதிலட்சுமி சிவகுமார்.