
முள்ளிவாய்க்கால் கண்ணீராலும், இரத்தத்தாலும் மட்டும்
கலந்து போன மண்ணல்ல.
மீண்டுமொருமுறை வீழ்ந்துவிடக் கூடாது என்பதற்காய்
வீரத்தை இறுதிக் கணத்திலும் விதையிட்ட விளைநிலம்.
முள்ளிவாய்க்கால் சமாதிகளின் புதைநிலமல்ல.
சாவரினும் வாழ்வு கொடுப்பதற்காய்,
வீழ்ந்து போகும் நேரத்திலும் சபதம் எடுத்த மண்.
முள்ளிவாய்க்கால் அவலத்தை மட்டும்
தன்னகத்தே தாங்கி நிற்கும் தாய்நிலமல்ல.
தமிழன் வீரத்துக்கு முகவரி கொடுத்து,
தன் உயிரை ஆகுதியாக்கிய
அக்கினி மண்.
பகலவனின் ஒளியே!
பனித்துளியே! காரிருளே!
என் உற்றவர், உறவுகள்
புரண்டழுத முள்ளிவாய்க்கால் கடலின் கரையே!
வங்கக்கடல் தாண்டி வீசிய சோழக்காற்றே!
குந்தியிருக்க மடி தந்த வன்னிமண்ணே!
நீந்திச் செல்ல வழிகாட்டிய
வற்றாப்பளை நிலவே!
நிமிர்வோம், நாம் நிமிர்வோம் என்ற நம்பிக்கையில் நடக்கின்றோம்.
மூதாதையர் வீரம் சொல்லும்
முத்தையன் கட்டு மண்ணே!
மூச்செடுக்கிறோம், பெருமூச்செடுக்கிறோம்.
மறவர்களை உன் மார்போடணைத்த
முள்ளிவாய்க்கால் மண்ணே!
குலம் தளைக்க விளைந்த குழந்தைகளை
எதிரி குழிதோண்டிப் புதைத்தபோது
ஏனம்மா அமைதி காத்தீர்?
யார் கேட்டார எம் தேசத்தின் அழுகுரலை?
நிறுத்தாது போட்டாரே ஆயிரம், ஆயிரம் தொன்குண்டுகளை.
இப்போது வந்த அகிலம்,
தப்பேதும் செய்யாத எங்களை அப்போது காப்பாற்றதது ஏன்?
பூத்துக்குலுங்கும் வயதில்
கொத்துக் குண்டுக்கிரையாகிய எம் பிஞ்சுகள்,
பொசுபரசுக் குண்டில் பொசுபொசுவென
வெந்து வேகிய என் சொந்தங்கள் வெறுமனே ஆகியாகவில்லை.
வாழும் எங்களில் ஆன்மாவாகிவிட
வரம்கேட்டுள்ளோம் வற்றாப்பளையாளிடம்.
பட்டாசு போட்டாலே பயந்திடும்
மிட்டாசுக்குக்கு ஏங்கும் எங்கள் குழந்தைகளை,
பல்குழல் எறிகணைகளால் பதம்பார்த்தவனே!
இரக்கமில்லா நீ,
நீறாகி இறக்கும் வரை – எமக்கு
உறக்கமில்லை என்பதை நினைவிற்கொள்.
மனமுடைந்தோம், பிணம் கடந்தோம்,
ஒருபிடி சோறுக்கும், ஒருசொட்டு நீருக்கும்,
ஒருநாள் பூராக காத்திருந்தோம்.
ஆயினும்,
விடுதலைப் பயணத்துக்கு விடைகொடுக்கவில்லை.
வில்லை தந்து எங்கள் வாழ்வை வீழ்த்த நினைத்தவனே!
மாத்திரைகளால் எம் வரலாற்றை மாற்றிடல் சாத்தியம் ஆகாது.
வலிகளாலும் குருதியாலும் வரையப்பட்ட தேசம்,
அர்ப்பணிப்புகளுக்கு சமர்ப்பணம் சொல்லி,
வில்லெடுக்கிறது நீதி வேண்டி.
செதுக்கப்படும் தேசத்தின் செந்தாமரைகளே!
நியாயம் உயிர்பெறும்வரை
அகிலத்தின் ஆராய்ச்சி மணிகள் அனைத்தையும்
ஓயாமல் ஒலித்திடல் செய்க.
வாழும்வரை போராடும் வைராக்கியம் கொண்டவர்களுக்கு,
எதிர்காலம் என்பது கானல் நீரோ, கனவோவல்ல.
ஒவ்வொரு புதைகுழியும் விதைகுழியாகட்டும்.
ஒவ்வொரு துளி கண்ணீரும்,
விடுதலை என்னும் பயிருக்கு பாய்ச்சிய நீராகட்டும்.
சிந்திய ஒவ்வொரு சொட்டு குருதியும்,
எம் தேசத்தின் சரித்திரமாகட்டும்.
சாக்குரல் ஒவ்வொன்றும்,
மனச்சாட்சியின் கதவுகள் திறக்கும் வரை ஓங்கி ஒலிக்கட்டும்.
விட்டுவிடோம் விடுதலைக்கான பயணம் என்ற சேதி
உலகின் நெஞ்சை தொட்டுவிடட்டும்.
உறவுகளே!
முள்ளுக்கம்பி வாழ்வு தந்தோருக்கு,
மின்சாரக்கதிரை செய்தாக வேண்டும்.
முடங்கி விடாதீர்கள்.
பாதிவழியில் முடிந்து போக,
நாமொன்றும் பண்டாரநாயக்காக்கள் அல்ல.
வீழும்வரை போராடும்
பண்டார வன்னியன் பரம்பரை என்பதை
எட்டப்பர்களே மனதிற்கொள்க.
நாம் வருவோம்! மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்!
கட்டுடைத்து, காவலுடைத்து,
முட்டவந்த பகையை மோதியுடைத்து.
வட்டுவாகல்வரை வந்தபகை
தொட்டுநின்று வேட்டு தீர்க்காவும்
மண்டியிட மறுத்து தம் உயிர் துறந்த வம்சத்தில் வந்தோரே!
சபதம் எடுப்போம்,
நாம் மீண்டும் எழுவோம் என்று.
நிமிரும் வரை தொடரட்டும் இலட்சியப் பயணம்.