Take a fresh look at your lifestyle.

மறக்க முடியாத ஓராயிரம் வலிகளின் பதிவு…. !

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் மே மாத நாட்கள்; வாழ்வில் மறக்கமுடியாத கொடூர நாட்களாகப் பதிவாகி இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் எரிமலை பிழம்புகளாக அந்த நினைவுகள் சுடர்விட்டெரிந்து கொண்டே இருக்கின்றன. அந்த உணர்வுகளுடன் உலகில் எந்த மூலையிலிருந்தாலும் மே மாதம் 18 ஆம் திகதி உணர்வு ரீதியாக அனைவரும் ஒன்றாக இணைகின்றோம். அழுகின்றோம், புலம்புகின்றோம் ஓராயிரம் வலிகளை பதிவு செய்கின்றோம்.
ஆனால்  அதன் பின்னர் நாம் என்ன செய்கின்றோம்? என்ன செய்யப்போகின்றோம்? என்ற வினாக்கள் என்னைப்போல் உங்கள் அனைவருடைய இதயங்களையும் துளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.அந்த வலி சுமந்த நினைவுகளை மறந்து விட முடியாது. அது இலகுவானதுமல்ல.
அந்த இறுதிக்கட்டப் போரின்போது ஒவ்வொரு இடமாக மக்களுடன் சேர்ந்து மருத்துவ மனைகளும் இடம்பெயர்ந்தன. அந்த இடப்பெயர்வின் இறுதி இடம் தான் முள்ளிவாய்க்கால்.
தொடர்ச்சியாக தற்காலிக மருத்துவ மனைகள் இயங்கிய இடங்களை  குறிவைத்து சிறிலங்கா அரசின் தாக்குதல்கள் தொடர்ந்தன. அந்தத் தாக்குதல்களில்  சிகிச்சைக்காக காத்திருந்தவர்களும் சத்திரசிகிச்சை முடித்து விடுதிகளில் பராமரிக்கப்பட்டவர்களும் என பெரும் தொகையில் மக்கள் கொல்லப்பட்டனர்.
இன அழிப்பின் ஓர் அங்கமாக உளரீதியாக  மக்களை பீதியடையச் செய்கின்ற ஓர் உத்தியாகவே இந்த மருத்துவ நிலையங்கள் மீதான தாக்குதல்களை  சிறிலங்கா அரசு மேற்கொண்டிருந்தது.
மக்களுக்கான மருத்துவ மனைகள் இயங்கிய பாடசாலைகளில் மருத்துவ மனை என அடையாளப்படுத்த செஞ்சிலுவை கொடி பறக்கவிடப்பட்டிருந்ததையும், ஐசிஆர்சி எனப்படும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மருத்துவ மனைகள் இயங்கிய இடங்களின் வரைபடங்களை இலங்கை அரசிற்கு வழங்கியிருந்ததையும் வைத்துக் கொண்டு இலங்கை இராணுவம் குறிதவறாமல் பாடசாலைகளின்  சத்திரசிகிச்சை நடைபெறும் அறை வரை துல்லியமாக தாக்குதலை நடத்தியது.
எந்த உயிர்களுக்கும் இறப்பு என்பது ஒரு தடவைதான் வரும் என்பதை மாற்றி அமைத்த பெருமை சிறிலங்கா இராணுவத்திற்கே சேரும். ஏனெனில் தனது தாக்குதல்களில் ஏற்கனவே  உயிரற்றிருந்த உடல்கள் மீதும் திரும்ப திரும்ப குண்டுகளைப்போட்டு அவர்களை மீண்டும் மீண்டும் கொன்று பெருமை அடைந்தது.
ஆனாலும் தமிழீழ மருத்துவத் துறையினர் காயமடைந்த மக்களை காப்பாற்ற இரவு பகலாக பணியாற்றினர். குழந்தைகள் தொடங்கி பெரியோர் வரை உயிர்காக்கும் அவசர சத்திரசிகிச்சைகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.
அரசாங்க வைத்தியசாலையில் பணியாற்றிய ஒரிரு வைத்தியத்தியர்களைத் தவிர மற்றவர்கள் தமிழீழ மருத்துவ துறையிறையினரே இறுதிவரை மக்களுக்கும் சகல மருத்துவ கடமைகளையும் செய்ய வேண்டியிருந்தது.
சத்திரசிகிச்சை நிபுணர்களாகவும் வைத்திய கலாநிதிகளாகவும், பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர்களாகவும் இருந்தவர்கள் கூட பலர் அன்று போராளிகளாக மாறி இறுதிவரை பணிசெய்தனர். இதற்கு உதவியாக போராளிகளை மருத்துவ பணிகள் ஒவ்வொன்றிலும் திறமை பெற்றவர்களாக விடுதலைப்புலிகளின் மருத்துவத்துறையினர்  பயிற்றுவித்திருந்தார்கள்.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க யாழ்ப்பாணம் இடப்பெயர்வின் பின் அப்போது பதவியிலிருந்த  சிறிலங்கா அரச தலைவி சந்திரிகா அம்மையாரும் சிங்கள ஊடகங்களும் யாழ்  போதனா வைத்தியசாலையை விட்டு வன்னிக்குச் சென்ற விடுதலைப்புலிகள் வைத்தியத்திற்கு வழியின்றி காயமடைபவர்களை நஞ்சு கொடுத்து கொல்கின்றார்கள் என்று பெருமளவில் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தனர்.
காலம் கடந்த பின்னர் தான் விடுதலைப்புலிகளது மருத்துவத் துறையின் மகத்துவத்தைப் பற்றி அவர்களால் தெரிந்து கொள்ள முடிந்தது.
எறிகணைகள் மழையாய் பொழிந்தன. விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன. எமது நிலமே தீப்பிழம்பாய் எரிந்தது. ஆனாலும் மருத்துவமனைகள் ஓய்வு ஒழிச்சலின்றி இயங்கிக்கொண்டேயிருந்தன.
ஒருவர் கொல்லப்பட்டால் குடும்பத்தில் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற அவரின் உடற் சூடு தணியமுன்பே அவரின் உடலை விட்டு வேறு இடத்திற்கு போகும் இக்கட்டான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தனர். ஆனால் இறந்த உடல்களை புதைப்பது காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வது உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை தமிழீழ காவல்துறை, தமிழர் புனர்வாழ்வு கழகம், தமிழீழ நிர்வாகசேவை போன்ற அமைப்புக்கள் வேறு பல தொண்டு. நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்திருந்தன.
ஏப்ரல் மாதம் முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலத்தில் மருத்துவ மனையொன்று இயங்கியது. இராணுவத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களில் காயமடைந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்த மருத்துவ மனையின் வளாகம் முழுவதும் நிறைந்து கிடந்தனர்.
ஓய்வே இல்லாமல் மருத்துவ குழாம் இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த இடத்தையும் இராணுவம் விட்டு வைக்கவில்லை. அந்த மருத்துவமனை மீது விழுந்த குண்டுகளால் மக்களுடன் சேர்ந்து மருத்துவ குழாமும் உயிர் இழப்பை சந்தித்தது. அங்கு மட்டுமல்ல. கிளிநொச்சியில் இருந்து மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து சென்ற சென்ற இடங்களில் எல்லாம் போதிய வசதிகள் இல்லாத நிலையில் இயங்கிய மருத்துவ மனைகள் மீது இராணுவம் நடத்திய தாக்குதல்களில் சிகிச்சைக்காகக் கூடியிருந்தவர்களுடன் மருத்துவ அணியினரும் உயிரிழப்பிற்கு உள்ளாகியிருந்தனர்.
காயடைந்தவர்களை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அவசர அவசரமாக சத்திரசிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவ போராளிகளும்  குருதிதோய்ந்த கைகளுடன் குண்டடிபட்டு நிலத்தில் வீழ்ந்த சம்பங்களும் இடம்பெற்றிருந்தன.
செஞ்சிலுவை சங்கத்தின் கப்பலில் திருகோணமலைக்கு மேலதிக சிகிச்சைக்குச் சென்ற  காயமடைந்தவர்களும் உயிர்காப்பதற்கான அவசர சத்திர சிகிச்சை முடித்த பின்பே அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இராணுவத்தின் எறிகணைகளினால் கட்டிடங்கள் இடிந்து விழும். குண்டுச் சிதறல்களுடன் கட்டிடச் சிதறல்களும் போட்டியிட்டு பறந்து விழும் சூழல். உயிர்களைப் பறிப்பதற்காக சீறி வந்த அந்த எறிகணைகளின் வீழ்ந்து வெடித்த குண்டுச் சத்தங்களையும் மேவி, மக்களின் அவலக்குரல்கள் வானைப் பிளக்கும். இதுவே அன்றைய அன்றாடக் காட்சிகளாக இருந்தன.
மருத்துவமனைகள் என்று பெயர் பெற்றிருந்தனவே தவிர, பாடசாலை கட்டிடங்களைப் பயன்படுத்தி வைத்திய நிலையங்களாக இயங்கிய இடங்களில் காயமடைந்தவர்களைப் படுக்க வைப்பதற்குப் போதிய கட்டில்கள் இருக்கவில்லை. நிலத்தில் படுக்க வைக்கப்பட்டவர்களுக்குப் பாய்களும் இல்லை. இந்த நிலையில்தான் அந்த இறுதி நேர மருத்துவ சேவைகள் இடம்பெற்றன.
தரப்பாள் விரிக்கப்பட்ட வெறும் சுடு மணலில் காயமடைந்தவர்களைக் கிடத்தி பக்கத்தில் கிடைக்கும் மரக்கொப்புக்களில் சேலைன் (நாளத்திரவம்) போத்தலை கட்டி மருந்தேற்றி அந்த உயிர்களை காப்பாற்றி இருக்கின்றோம்
இரவு நேரங்களில் அதிக வெளிச்சம் தெரிந்தால் உடனடியாக இராணுவத்தினர் அந்த இடத்தை நோக்கி தாக்குதல்களை நடத்திவிடுவார்கள். இதனால் மெல்லிய இலாம்பு வெளிச்சத்தில் பாரிய அவசர சத்திரசிகிச்சைகளைச் செய்ய வேண்டிய கட்டாய நிலைமை அப்போது உருவாகியிருந்தது. அந்தத் தருணங்களிலும் வெற்றிகரமாக சிகிச்சைகளைச் செய்து முடித்த அனுபவங்கள் மருத்துவ போராளிகளுக்கு நிறையவே உண்டு. ஆனாலும் அந்த நாட்கள் மகிழ்ச்சி தரும் நாட்களாக அமையவில்லை.
அவ்வாறு கஸ்டப்பட்ட போதிலும் படுகாயமடைந்த எத்தனையோ பேரின் உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கின்றதே என்ற எண்ணம் இப்போதும் மனதைக் கவலை கொள்ளச் செய்கின்றது.
இரவு நேரங்களில் காயமடைந்தவர்களை ஏற்றிவரும் வாகனங்கள்கூட லைட் போடாமல்தான் தான் ஓட வேண்டும் மேடும் குழியுமாய் கிடக்கும் வீதிகளில் அந்தப் பயணங்கள் சாதாரண பயணங்களாக இருக்கவில்லை. வெளிச்சம் தெரிந்தால் உடனடியாக இராணுவத்தின் எறிகணைகள் அந்த இடத்தை நோக்கி சீறிவரும். அதனால் சேதங்களே அதிகமாகும் என்ற நிலையில்தான் அந்த உயிர்காக்கும் பணிகளும் பதட்டத்தின் மத்தியில் இடம்பெற்றன.
இவ்வாறு பல சவால்களுக்கு மத்தியில் பல மணிநேர சத்திரசிகிச்சையின் பின் காப்பாற்றப்பட மக்கள் மீண்டும் மருத்துவமனை மீது விழும் குண்டுகளால் மீண்டும் காயமடைந்தார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள்.
இறுதியாக மருத்துவமனை இயங்கிய முள்ளிவாய்க்கால் சிறு பாடசாலையில் மிக நெருக்கமான தூரத்திலிருந்து இராணுவம் தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தது. அந்தத் தருணங்களிலும் மருத்துவர்கள் தமது உயிர்காக்கும் சேவையை நிறுத்தவில்லை. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
இத்தனை அழிவுகளை திட்டமிட்டு நடத்திக்கொண்டிருந்த ஒரு தேசத்தில் பட்டினியால்  மக்கள் இறக்கவில்லை  தமிழீழ நிர்வாக சேவை, புனர்வாழ்வுக் கழகம் போன்ற அமைப்புக்கள் கஞ்சி போன்ற உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தன.
அப்போது அந்த இடத்தை குறிவைத்து கொத்து குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் – மே மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற ஓர் அனர்த்தத்தில்  காயமடைந்த சிறுவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
எங்கும் இரத்தக் கறைகள். இறந்த உடல்களையும் அகற்ற முடியவில்லை. காயமடைந்தவர்களை இலையான்கள் மொய்த்துக்கொண்டேயிருந்தன.
இறந்த உடல்களின் நடுவில் காயமடைந்து கிடந்த குழந்தைகளுக்கு அந்த இடத்தில் வைத்தே அவசர சிகிச்சைகளை அளிக்க வேண்டிய கட்டாய நிலைமை உருவாகியிருந்தது.
அப்போது காயமடைந்து கொண்டுவரப்பட்டிருந்த பதினைந்து சிறுவர்களில் ஒருவனின் நிலைமை மோசமாக இருந்தது. காயத்தில் இருந்து இரத்தம் வெளியேறி குருதி அமுக்கம் குறைந்து கொண்டுபோனது.
வயிற்றுக் காயம். சத்திரசிகிச்சை செய்யவேண்டும். வென்பிளோன் போட்டு பக்கத்தில் இரத்த மரக்கிளையில் சேலைனைக்கட்டி வேகமாக ஏற்றிவிட்டு அவனது மறு கையை பாக்கின்றேன். அவனது பிஞ்சு கைகளுக்குள் ‘வாய்பன் ‘ (ஒருவகை உருண்டை வடிவிலான சிற்றுண்டி) ஒரு கடி கடித்த நிலையில் இறுக பற்றி வைத்திருந்தான்.
அவன் இனி அதை உண்ணப்போவதில்லை என்பது தெரிந்தது. விரல்களை விடுவித்து எடுக்கின்றேன். என் இதயம் நொறுங்கிப்போனது. இப்போது அவன் அதனைப் பறித்ததற்காக அழவில்லை. அதற்கு அவனது உடல் இடம் தரவில்லை. விழிகளை உயர்த்தி என்னைப் பார்த்து ஏதோ சொல்ல முயன்றான். அவனது உதடுகள் அசைந்தன. வார்த்தைகள் வரவில்லை……  அந்தக் காட்சியும் வலி நிறைந்த அந்த நினைவுகளும் இன்னும் நெஞ்சினுள் பாறாங் கல்லாகக் கனக்கின்றன.
அங்கு நடைபெற்ற துயரச்சம்பவங்கள் எண்ணற்றவை. உரிமைகள் மீறப்பட்டிருந்தன. இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்தது. அதுவும் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக்கூட உலகம் கண்டிக்கவில்லை. இன்றுவரையிலும் எந்தக் கண்டனக் குரல்களும் எழவில்லை.
இரவு பகல் பாராமல் காயமடைந்தவர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். மருத்துவர்களும் ஓய்ந்து ஒடுங்கவில்லை. பசி, தாகம், உறக்கம், களைப்பு எல்லாவற்றையும் கடந்து பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இறுதியாக முள்ளிவாய்க்காலில் இயங்கிய மருத்துவமனை அந்தக் கடும் சண்டைகளுக்குள்ளேயும் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது துப்பாக்கி வேட்டுக்களின் சத்தம் மருத்துவமனையை நெருங்கிக் கொண்டிருந்தது. குண்டுகளும் சீறிவரத் தொடங்கியிருந்தன. இராணுவம் எங்களை அண்மித்துவிட்டது என்பது புலனாகியது.
இனிமேலும் நோயாளிகளைக் கொண்டு செல்வதற்கு இடமே இல்லாத நிலைமை. எல்லாவற்றையும் கைவிட்டு வெளியேற வேண்டிய இறுதிக்கட்டமாக அது இருந்தது. முள்ளிவாய்க்காலை வந்தடையும் வரை மருத்துவமனை இடம் மாறும்போது இறுதி நோயாளியையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டுத்தான் நாங்கள் அந்த மருத்துவமனையைவிட்டு வெளியேறுவோம்.
எல்லா இடப்பெயர்வுகளிலும் இறுதியாக இடம்பெயர்வது மருத்துவமனையாகத் தான் இருந்தது. ஆனால் முள்ளிவாய்க்காலில் அன்றைய தினம் அதற்கு மேலும் இடம்பெயர இடம் இருக்கவில்லை. காயமடைந்த மக்களை அங்கேயே அப்படியே விட்டுவிட்டு போகவேண்டிய நிலை. அங்கிருந்தவர்கள் எங்களையும் கொண்டுபோங்கோ என்று காலைப்பிடித்து கெஞ்சினார்கள்.
பல நூற்றுக்கணக்கான மக்கள். யாரை நாம் தூக்க முடியும்?; உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சைகளை மட்டுமே எங்களால் அப்போது செய்ய முடிந்தது. முதலுதவி சிகிச்சையை மட்டும் அளித்துவிட்டு உயிரிருந்தும் வெறும் நடைப் பிணங்களாக வெறுமையான உள்ளங்களுடனும் சில முதலுதவிப் பொருட்களுடனும் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம்.
சிறிது நேரத்தில் அந்த இடம் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. எங்கும் கரும்புகை கவிழ்ந்தது. எல்லா இடங்களிலும் தீப்பற்றி எரியும் காட்சிகளே கண்ணில் தெரிகின்றன காணும் இடமெல்லாம் வீதியோரங்களிலும் பற்றைக்காடுகளுக்கு உள்ளேயும்  காயமடைந்தவர்கள் பரவிக் கிடந்தார்கள்.
மே 15 ஆம் திகதிக்குப் பின்னர் மருத்துவப் போராளிகளால் குழுவாகவும் தனியாகவும் நின்று வழிநெடுகிலும் காயமடைந்து கிடந்தவர்களுக்கு காயங்களில் இருந்து இரத்தம் வெறியேறுவதைக் கட்டுப்படுத்தும் சிகிச்சையுடன் முதலுதவிகளை மட்டுமே செய்ய முடிந்தது.
ஆனாலும் இப்படியான துயரநாளை இராணுவ வெற்றி நாளாக கொண்டாடும் மனநிலையில் இருந்து  பதினொரு ஆண்டுகள் கடந்தும் சிங்களத் தலைமைகள் சற்றும் மாறவில்லை.  எமது கண்ணீரில் அவர்கள் மகிழ்ச்சி காண்பதையே இது சித்தரிக்கின்றது.
ஆறாத வலிகள் சிறிதளவேனும் ஆற வேண்டுமாயின் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கோருவது தான் எமது முதற்படியாக அமையவேண்டும். ஆனாலும் ஓர் இன அழிப்பிற்கான இத்தனை சாட்சிகள் கண்முன்னே கிடந்தும் நாம் என்ன செய்கின்றோம்? என்ன செய்திருக்கின்றோம்?
உலகம் முழுதும் வாழும் தமிழர்களாகிய எம்மிடம் எவ்வளவு பலம் இருந்தும் அவற்றை பலவீனமே மேவி இருக்கின்றது. அதனால்தான் நாம் இன்னுமே ஒன்றுபடாமல் சிதைந்து கிடக்கின்றோம்
தாயகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்து  ஒரு மித்து எந்தவொரு முடிவையும் எடுக்காமல் காலத்தை கழிக்கின்றார்கள்.
குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள்  நீதி வேண்டி முழு மூச்சுடன் செயற்பட முடியும்.  பெரும்பாலான மக்கள் நாட்டுப்பற்றுடன் தேசியம் என்ற கொள்கையுடன் வாழ்கின்றார்கள். இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனாலும் நவீன உலகப் போக்கையொட்டி, அவர்களிடையே எழுந்துள்ள அமைப்புக்கள் மக்களை பிளவுபடுத்தி சமூக முரண்பாடுகளை வளர்த்திருக்கின்றன. இது ஒரு புதிய காலச்சாரமாக, மிக வேகமாகப் பரவி வருகின்றது. இந்த நிலைமை கவலைக்குரியது.
இந்த அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் குறுகிய வட்டத்திற்குள் ஒடுங்கி இருந்து மக்கள் மத்தியில் எப்படி பிரபல்யம் அடையலாம் என்பதையே அதிக அளவில் சிந்திப்பதால் தங்களுடைய இலக்கை மறந்து விடுகின்றனர்.
மனித உரிமைகள் சம்பந்தமான செயற்பாட்டை செய்வதாக தம்மை அடையாளப்படுத்தும் தமிழ் அமைப்புக்களும் இதற்கு விதிவிலக்கில்லை. மனித உரிமை தளத்தில் செயற்படுவதாக கூறிக்கொள்பவர்கள் எல்லோரும் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக இயங்குவதாக சொன்னாலும் அவர்களால் கூட ஒருங்கிணைந்து செயற்பட முடியவில்லை. நான் பெரிதா நீ பெரிதா என்று தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்கின்றார்கள்.
இதனால்  வெளியில் உள்ள ஆற்றல்மிக்க  இளைஞர்களும் கல்விமான்களும் திறமையாளர்களும் இவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு பின்னிற்கின்றனர். இதனை  யாராலும் மறுக்கமுடியாது.
உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் ஐநா மனித உரிமை சபையில் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின்  நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தலமையிலான குழு மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஐநா மனித உரிமைப் பேரவை அமர்வின் பக்க நிகழ்வாக முக்கியமான வெளிநாட்டு பிரதி நிதிகள் சூழ இந்த அறிக்கை ஒரு கையேடாக வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வினை ஒரு தமிழ் அமைப்பு ஒழுங்கு படுத்தியிருந்த காரணத்தால் அங்கு செயற்படும் மற்ற தமிழ் அமைப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் சிறிலங்கா அரசாங்கம் சார்பாக பெருமளவான பிரதிநிதிகள் ஒன்றுகூடி அதற்கு  எதிர்ப்பு தெரிவித்ததுடன் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் இது ஒரு பக்க சார்பான அறிக்கை என்று வாதிட்டார்கள். எண்ணற்ற கேள்விகளைக் கேட்டனர்.
பதில் சொல்லகூடிய தமிழர் தரப்பினர் அதில் கலந்து கொள்ளாத போதிலும் யஸ்மின் சூக்கா அவர்களே சரியான பதில்களை வழங்கியதுடன் பாலியல் குற்றங்களை இராணுவம் புரிந்தது என்பதற்கான சாட்சிகள் உள்ளதாக நியாயப் படுத்தினார்.
இப்படியான சந்தர்ப்பங்களில் கூட ஒன்றாக கலந்து கொள்ள முடியாத தமிழ் அமைப்புக்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்யப் போகின்றன? எதனை சாதிக்கப்போகின்றன?
இது ஒரு உதாரணமே. இன்று இப்படித்தான் பல சம்பவங்களைக் காணமுடிகின்றது. கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற கூற்று மாறி தனிப்பட்ட விளம்பரங்களே முன் நிற்பதால் அடைய வேண்டிய இலக்கு பின்நோக்கி தள்ளப்படுகின்றது.
உலகில் உள்ள அனைத்து இனங்களும், நாடுகளும் தங்களுக்கு பெரும் நெருக்கடி வரும் போது எதிர்க்கட்சிகள் கூட ஒன்றாக இணைந்துதான் செயற்படுகின்றன. இலங்கை கூட அவ்வாறு தான். ஆனால் எமது தமிழ் இனம் தான் இன்றும் இப்படியே கிடக்கின்றது.
‘தமிழ் மக்களிற்கு நீதியையும், இழப்பீடுகளையும் பெற்றுக்கொடுப்பதற்குமாக நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும்’ என ஐநா. மனித உரிமைகள் பேரவையின் முள்ளாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை 2020 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
தமிழர் தரப்பு அமைப்புக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. தமிழ் மக்களும் ஓர் அணியில் ஒன்றிணைக்கப்படவில்லை. இதனால்தான் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.
மே 18 இல் மட்டும் அமைப்பு ரீதியான தனித்துவம், அந்தஸ்துகளைக் கைவிட்டு, உணர்வுகளால் ஒன்று படும் தமிழர்கள் இதே சிந்தனையில் நீதிக்காக ஒரே புள்ளியில் சங்கமிப்போமாகவிருந்தால் எந்த ஒரு சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது.
நாம் இழந்தவற்றை ஒருவராலும் ஈடுசெய்யமுடியாது .இழப்புக்களும் தியாகங்களும் நாம் அடைய வேண்டிய இலக்கும் மட்டும்  எமக்கு பெரிதாக தெரியுமென்றால்   ஒருங்கிணைந்து செயற்படுவது சாத்தியமாகும்….
 இதன் மூலம் தான் எம்மக்கள் அனுபவித்த வலிகளுக்கு மருந்திடமுடியும்.
-நன்றி 
மிதயா கானவி
%d bloggers like this: