Take a fresh look at your lifestyle.

வாதரவத்தையின் மைந்தன் எங்கள் விக்ரம் மாஸ்டர்!

பனைவளங்களும்,நான்கு பக்கமும் நீரினால் சூழப்பட்டு பார்ப்போர் மனங்களை கவரும் அழகிய சிறிய ஒரு நிலப்பரப்பு தான் வாதரவத்தை எனும் அழகிய கிராமம்.

இக்கிராமத்தில் முத்தையா பூபதி இணையரின் 4 வது மகனாக கப்டன் விக்ரம் எனும் சிறிகணேஸ் அவதரித்தான்.சிறிகணேஸ் வீட்டில் செல்ல பிள்ளையாக இருந்தாலும் சிறு வயதிலேயே படிப்பில் கவனம் செலுத்த தவறவில்லை.

தனது ஆரம்ப கல்வியை தனது சொந்த கிராமத்தில் வாதரவத்தை விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் பயின்றார்.

உயர்தர மேல்படிப்பினை புத்தூர் சிறி சோமஸ்கந்தா கல்லூரியில் கற்கும் பொழுது போராளிகளோடு சேர்ந்து பகுதி நேர செயற்பாடுகளை மேற்கொண்டிருந்த வேளை இந்திய இராணுவத்தினரால் கைதாகி புத்தூர் முகாமில் சித்திரவதைகளை அனுபவித்தார் சித்திரவதைகளினாலும் இந்திய இராணுவம் ஈழத்தில் காலடி எடுத்து வைத்து எம் ஈழ மக்களுக்கு இழைத்த அநீதிகளின் உந்துதலாலும் 1989 நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிறிகணேஸ், விக்ரம்/வண்ணனாக தன்னையும் ஓர் போராளியாக இணைத்துக்கொண்டார்.

எங்கள் இதய பூமி மணலாற்றில் 7 வது பயிற்சி பாசறையில் பயிற்சி ஆசிரியர் செங்கோல் மாஸ்டரிடம் தன் பயிற்சியினை முடித்து வெளியேறினார்.

பயிற்சியை முடித்த பின்னர் இவரின் பயிற்சி திறமையினையும் அறிவாற்றலையும் கண்டு வியந்த மணலாறு மாவட்ட சிறப்புதளபதி அன்பு(தாடி) அண்ணன் அவர்களால் பயிற்சி ஆசிரியராக நியமிக்கப்பட்டு, சுகந்தன்,ஈசன்,ஜீவன்-2 போன்ற பயிற்சி முகாம்களில் பல திறமைமிக்க போராளிகளை உருவாக்குவதற்கு காரணமாகவும் இருந்தார் .

1991ல் மணலாற்றில் இடம்பெற்ற மின்னல் சண்டையில் காயமுற்று காயம் ஓரளவு ஆறியபின் மணலாறு மாவட்ட அறிக்கை தொகுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்

பின்பு யாழ் மாவட்டத்திற்கு தேசியத்தலைவர் அவர்களினால் அழைக்கப்பட்டு அங்கே தலைவர் அவர்களுடன் நின்று அறிக்கை தொகுப்பாளராகவும், நியமிக்கப்பட்டிருந்தார்

பின்னர் சிறிலங்கா இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட முன்னேறிப் பாய்தலுக்கெதிராக புலிகளால் முன்னெடுக்கப்பட்ட புலிப்பாய்ச்சல் சண்டையில் பங்குபற்றினார்

அதன் பின்னர் 1995 மீண்டும் தேசிய தலைவரின் பணிப்பின்பேரில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் (பொருளாதார துறை) தமிழீழ புள்ளிவிபர பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1996 யாழ் குடாநாடு இராணுவ முற்றுகைக்குள் முற்று முழுதாக சிக்குண்ட காலப்பகுதியில் வன்னி பெருநிலப்பரப்புக்குள் வரும் மக்களை பாதுகாப்பாக வன்னிக்கு நகர்த்தும் தனது பணிகளை மேற்கொண்டிருந்த வேளை சுகயீனம் காரணமாக 28.05.1996 அன்று கப்டன் விக்ரம் மாஸ்டர் /வண்ணன் ஆக விழிமூடிக்கொண்டார்.

எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாக கலந்துவிட்ட இறுதி இலட்சியம் தமிழீழ தாயகத்தை மீட்டெடுக்கும் புனித போரிலே வீரச்சாவை தழுவிக்கொண்ட ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் வரிசையில் இங்கே மீளாத் துயில்கொள்ளும் விக்ரமும் சேர்ந்து கொண்டார்

சாவு என்பது இவரின் பேச்சையும் மூச்சையும் நிறுத்திக்கொண்டதே தவிர இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கி உள்ளது

இவன் ஆணிவேர் அறுபடாத ஆலமரம்
மீண்டும் வேர்விடுவான் விழுதெறிவான்
புதிதாய் பிறக்கும் புலிகளுக்குள்ளே புகுந்து கொள்வான்
நெஞ்சு கனக்கும் தாயக விடுதலைக்கனவோடு எம்மை பிரிந்து சென்ற இவரின் கனவை நாங்கள் நனவாக்குவோம் என்று இவரின் வித்துடல் மீதும் விதைகுழி மீதும் உறுதி எடுத்துக்கொள்கின்றோம்

ஜெகதீஸ்வரன் டிஷாந்த் 
வாதரவத்தை 

%d bloggers like this: