மணல் அள்ளுவதை தடுத்த மக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடாத்திய மணல் 'மாபியாக்கள்'

breaking
  கிரான் பிரதேசசெயலாளர் பிரிவில் வாகனேரி கிராமத்தில் பொதுமக்களின் மீது மணல் கொள்ளையர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். கிராமத்திற்குள் நுழையும் பிரதான வீதியில் முற்றுகையிட்ட ரௌடிகள், கிராமத்திற்கு சென்ற பொதுமக்கள் மீதும் கொடூர தாக்குதல் நடத்தினர். அயல் கிராமங்களை சேர்ந்த இஸ்லாமியர்களின் மணல் கும்பலொன்றே இந்த கொடூர தாக்குதலை நடத்தினர். மணல் கடத்தல்காரர்களை வழிமறித்து மணலை கொட்டிவிட்டு, உழவு இயந்திரத்தை பொதுமக்கள் அனுப்பியதை தொடர்ந்து, பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகனேரி பிரதேசத்தில் கடந்த 10 வருடங்களிற்கு மேலாக சட்டவிரோத மண் அகழ்வு கொடிகட்டி பறக்கிறது. அரசியல், பண பலத்துடன் சில முஸ்லிம் வர்த்தகர்கள் மண் அகழ்வை நடத்தி வருகிறார்கள். அங்கிருந்து அகழப்படும் மண் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளிற்கு கொண்டு செல்லப்படுகிறது. சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க முடியாமல் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். மண் அகழ்விற்கான அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களும், குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகிறார்கள். காலை 4 மணிக்கு மண் அகழ்வு தொடங்கினால், இரவு 8 மணிக்கு பின்னரும் வகைதொகையில்லாமல் உழவு இயந்திரங்கள் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவது வழக்கம். இதனால் வாகனேரியில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகிறது. இரவில் சட்டவிரோத மண் கடத்தல்கார்கள் வயல் நிலங்களிலும் மணல் ஏற்றிச் சென்று விடுவார்கள். மண் அகழ்வை தடுக்க முடியாமல் திண்டாடிய மக்கள் அண்மைய நாட்களில் கிராமமாக ஒன்று திரண்டு, தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். கிராம அபிவிருத்தி சங்கம், பொதுமக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு, பிரதேச செயலாளர், பொலிசார் மற்றும் அதிரடிப்படையினரிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். எனினும், மண் கடத்தல் நிற்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, பிரதேச செயலாளரிடம் இது குறித்து முறையிட்டனர். மண் கடத்தல்காரர்கள் வரும் நேரம் குறித்த தகவலும் வழங்கினர். பிரதேச செயலாளர் இது குறித்து பொலிசார், அதிரடிப்படையினருக்கு அறிவித்திருந்தார். எனினும், இன்று மாலை வரை பொலிசாரோ, அதிரடிப்படையினரோ அங்கு செல்லவில்லை. இதையடுத்து மாலையில் ஒன்று திரண்ட மக்கள், சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரங்களை வழிமறித்து, மணலை நிலத்தில் கொட்ட வைத்து, வெற்று உழவு இயந்திரங்களை அனுப்பிவைத்தனர். இதேவேளை, மேலும் பல உழவு இயந்திரங்கள் மணல் ஏற்றியபடி இருந்துள்ளன. வழிமறிக்கப்பட்ட உழவு இயந்திரங்களில் இருந்தவர்கள், இந்த தகவலை மணல் ஏற்றிக் கொண்டிருந்த ஏனையவர்களிடம் தொலைபேசி மூலம் பரிமாறினர். கொட்டன்கள் மற்றும் ஆயுதங்களுடன் தயார் நிலையில் மணல் ஏற்றியபடி வந்த ஏனைய உழவு இயந்திரங்களை பொதுமக்கள் மறித்தபோது, அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். பின்னர் அந்த ரௌடிக்குழு காவத்தைமுனை வீதிப்பகுதிக்கு சென்று, பல்வேறு தேவைகளின் நிமித்தம் வெளியிடங்களிற்கு சென்றுவிட்டு, கிராமத்திற்கு வந்த பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது. பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என்ற வித்தியாசமின்றி தாக்கதல் நடத்தினர். இது குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொர்ந்து, அங்கு பொலிசார் வர, ரௌடிகள் தப்பியோடி விட்டனர். கிராமத்திற்குள்ளும், வீதியிலுமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். தற்போது தலையில் காயமடைந்த பெண்ணொருவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.