காணொளி- தந்தையின் ஓராண்டு ஊதியத்தில் விமான டிக்கட் எடுத்த சுந்தர் பிச்சை தகவல்

breaking
  முதல்முறையாக அமெரிக்கா சென்ற விமானத்தின் டிக்கெட் விலை தனது தந்தையின் ஓராண்டு வருமானம் என பேசியுள்ளார் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. தொழிலதிபர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சாதனையாளர்கள் தங்களது கதைகளை தாமே தெரிவிக்கும்வகையில், ‘Dear Class of 2020’ என்ற நிகழ்ச்சியை யூடியூப் நிறுவனம் நடத்திவருகிறது. அதில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி பங்குபெற்று பேசினர். அதன்பிறகு அமெரிக்காவின் பிரபல பாடகியான லேடி காகா பங்கேற்று பேசினார். அதனை அடுத்து, தற்போது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன் அனுபவங்கள் மற்றும் தன் வாழ்க்கைப்பயணத்தை குறித்து பேசியுள்ளார். அப்போது, “உங்கள் பொறுமையை இழக்காதீர்கள். எனது தலைமுறை இளைஞர்கள் கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாத தொழில்நுட்ப வளர்ச்சியை அடைய இந்த காலம் உதவும். பொறுமையுடன் இருப்பது உங்களுக்கு தேவையான முன்னேற்றத்தை உருவாக்கும். 27 வருடங்களுக்கு முன்னர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக நான் அமெரிக்கா வந்தேன். அப்போது எனது பயணத்திற்கான விமான டிக்கெட்டின் விலை என் தந்தையின் ஒரு வருட வருமானம். அமெரிக்காவில் மிகவும் அதிக அளவில் பணம் செலவாகும். அப்போதெல்லாம் ஒரு நிமிடம் என் குடும்பத்துடன் பேசவேண்டுமென்றால் 2 டாலர்கள் செலவாகும். நான் அந்த நிலையில் இருந்து இதுபோன்று இருக்கிறேன் என்றால் அதற்கு அதிர்ஷ்டத்தை தாண்டி தொழில்நுட்பம் மீது நான் வைத்திருந்த அளவுகடந்த காதல் தான் காரணம்.” என பேசியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை, கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் க்ரோம் உருவாவதற்கு மிகப்பேரிய உதவிகரமாக இருந்தார். அதனை அடுத்து, கடந்த 2015ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.