வேதாளம் முருங்கில் ஏறும் வேதாந்தம் மறவாதே தமிழா!

breaking
மாலையும் கழுத்துமாய் எடுபிடிகள் சூழ ஆரவாரம் போன வாரம் சொன்ன கதை ஃபோன் யாவாரம் போல மாதிரிகள் மாறி மாற்றி சுயவுரிமைகள் இழக்க வைத்து கவனம் இல்லாக் கூட்டத்திடம்…… தேன்தடவிய வார்த்தைகளாக அவர்களின் இயங்கியலில் வந்து வீழ்ந்தன. ஓ! தேர்தல் காலமாம்! வண்டிலில் வந்து வாக்குக் கேட்பார் நாக்கு அழுகப்பொய் உரைத்து சுரக்காய் முட்டிப் பானம் ஊற்றியது போல மதி மயக்குவர். ஒற்றுமைக்கு வாக்கென்பர் தம், நாக்குகள் நாறி முரண்பட்டு உடைந்த காட்சிகள் மறந்து. ஆகா, பேரம் பேச வாக்களியுங்கள் என்பர், சோரம் போன கதைகள் மறந்து. ஓகோ, இருப்புக்கு வாக்களியுங்கள் என்பர், தம் மீது செருப்புகள் வீழ்ந்த கதைகள் மறந்து. ஆடிக் காற்றுக்குக்கு வீதியில் பறக்கும் சருகுகள் போல ஓடித் திரிகின்றன……… திருட்டுக் கூட்டம். ஓளடிக்கார் கனவில் எடுபிடிகள். “வண்டில் வந்து வாக்குக் கேட்க்கின்றானே! என்னா எளிமை” என்கின்றனர். மைத்திரி வந்து பிறந்தநாளுக்கு சிறப்புச் செய்தி விட்ட கதை மறந்து. பெண்டிலும் பிள்ளையும் பிறாடாவிலும், லான்ட்ரோவரிலும் போயிருந்தாலும் அவர்கள் வண்டிலில் வரும் போது மட்டும் ஏன் வாய் பிளக்கின்றாய்?? அவன் “உன் மட்டத்துக்கு இறங்கி வந்திருக்கின்றேன் வா!” என்கின்றான்! நீயே சொல்லு மக்கா! உன்னை அவன் எங்கே வைத்திருக்கின்றான் என்று! வேதாளம் ! மீண்டும் முருங்கில்தான் ஏறும் வேதாந்தம் அதுதான்…… தமிழா உனக்கு வேறு வழியில்லை மாற்றுத் தலைமை இன்றேல் மீண்டு எழா வாழ்வில் மாண்டு தொலையவா போகின்றாய்? ஈண்டுவரை நாண்டு நாறியது போதும் மீண்டு எழ வேண்டாமா?? போதும் போதும் என்றது போதும் பெறுத்துக் கிடந்தது போதும்! நீ ஒறுத்துக் கிடந்தாய் ஒதுக்கித் தள்ளி ஒற்றையாட்சிக்குள் வந்து நிற்கின்றனர்! நீ இனியும் இவர்களுக்கு ஓங்கி அறையவில்லையாயின் மறத்தின் அறம் மாண்டுவிடும். -: சீராளன் :-