உதவி ஆய்வாளரை காலால் உதைத்த முன்னாள் எம்பி

breaking
சேலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளரை காலால் எட்டி உதைத்துள்ளார் முன்னாள் எம்பி அர்ஜுனன். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைராகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்டம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதோடு, சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் 27 இடங்களில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த முன்னாள் எம்பி அர்ஜுனன் தனது தோட்டத்தில் இருந்து ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், முன்னாள் எம்பியின் காரை மறித்து ஆவணங்களை கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜுனன், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆவணங்களை கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷை, முன்னாள் எம்பி காலால் எட்டி உதைத்து ஒருமையில் திட்டினார். பதிலுக்கு உதவி ஆய்வாளரும், அர்ஜுனனை எட்டி உதைத்தார். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த சக காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தை காவல்துறையில் தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அண்மையில் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் இரண்டு பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர்களை அடித்தே கொன்றனர். இந்த சம்பவம் அடங்குவதற்கு முன்பாக காவல்துறையினருடன் முன்னாள் எம்பி ஒருவர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.