சிறிலங்கா இராணுவ அதிகாரியிடமிருந்து யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட ஈடு கோரி கடிதம்

breaking
  உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட ஈடு கோரி, சிறிலங்காவின் தேசிய உளவுத் துறை பிரதானி மேஜர் ஜெனரால் துவான் சுரேஷ் சலே, சட்டத்தரணி ஒருவர் ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த நட்ட ஈட்டை செலுத்தாவிடின் 14 நாட்களில் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக குறிப்பிட்டே, சட்டத்தரணி பஹன் வீரசிங்க ஊடாக அவர் இந்த நட்ட ஈடு கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளார். டி.எம்.எல். கூரியர் சேவை ஊடாக இந்த நட்ட ஈடு கோரும் கடிதம், இங்கிலாந்தின் லண்டனில் உள்ள யஸ்மின் சூகாவின் முகவரிக்கும் அவரது அலுவலக தலைமையகத்தின் முகவரிக்கும் அனுப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. கடந்த மே 22 ஆம் திகதி, தேசிய உளவுத் துறை பிரதானியான சுரேஷ் சலே மற்றும் மேலும் நான்கு இரானுவத்தினர் பிரிகேடியர் தரத்தில் இருந்து மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டனர். அது தொடர்பில் கடந்த ஜூன் முதலாம் திகதி விஷேட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்த யஸ்மின் சூக்கா, கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாக கூறப்படும் தற்போது தென் அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர் வரதராஜா துறைராஜன் என்பவரை சித்திரவதை செய்தமை தொடர்பில் சுரேஷ் சலே பொறுப்புக் கூற வேண்டியவர் என தெரிவித்திருந்தார். அத்துடன் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடைய இராணுவ வீரர் ஒருவரும் மேஜர் ஜெனரால் சுரேஷ் சலேவின் குழுவில் சேவையாற்றியதாகவும் சுட்டிக்காட்டி, சுரேஷ் சலே மேஜர் ஜெனரால் பதவி உயர்த்தப்பட்டமையை யஸ்மின் சூக்கா விமர்சித்திருந்தார். இந்நிலையிலேயே யஸ்மின் சூகா கூறும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள சுரேஷ் சலே, தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறி தனது சட்டத்தரணி ஊடாக நட்ட ஈடு கோரி சட்டக் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். சர்வதேச அமைப்பொன்றின் பிரதானி ஒருவருக்கு எதிராக, இலங்கையில் இராணுவ சேவையில் இருக்கும் அதிகாரி ஒருவர், நட்ட ஈடு கோரும் சட்ட ரீதியிலான கடிதம் ஒன்றினை அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.