திரையரங்குகளில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை

breaking
திரையரங்குகளில் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கக் கூடாது என நாட்டிலுள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், திரையரங்குகளைப் பாவிப்பதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குறித்த விடயத்தை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் பொலிஸ் தலைமையகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், திரைப்படக் காட்சி ஆரம்பமாக முன்னர் அல்லது காட்சியின் ஏதேனுமொரு கட்டத்தில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்துவது, தேர்தல் குற்றமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாட்டிலுள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வாறான விடயங்களை முன்னெடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது. அத்துடன், திரையரங்குகளில் இவ்வாறான பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என கண்காணிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபரினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.