அமெரிக்காவில் ஒரே நாளில் 47,000 பேருக்கு தொற்று

breaking
  அமெரிக்காவில் நேற்று (ஜூன் 30) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 47,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கலிஃபோர்னியா, டெக்சஸ், அரிசோனா உள்ளிட்ட மாநிலங்கள், கிருமி பரவும் மையப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அம்மாநிலங்களில் கிருமித்தொற்று சம்பவங்கள் புதிய உச்சத்தை எட்டின. இந்நிலையில், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அமெரிக்காவில் கிருமித்தொற்று சம்பவங்கள் விரைவில் இரட்டிப்பாகக்கூடும் என்று அந்நாட்டின் முன்னணி தொற்றுநோய் நிபுணரான டாக்டர் ஆன்டனி ஃபௌசி அமெரிக்க செனட் சபையிடம் கூறினார். கிருமித்தொற்று சம்பவங்கள் நாள் ஒன்றுக்கு 100,000ஐ எட்டினாலும் “ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று அவர் கூறினார். “இப்போது நிலைமை கட்டுக்குள் இல்லை. நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என்பதால் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. கொரோனா கிருமிக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்பது குறித்த முதற்கட்ட தகவல் நம்பிக்கை அளித்தாலும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை என்று அவர் சொன்னார். கொரோனா கிருமித்தொற்றால் அமெரிக்காவில் 126,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர். கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் காரணமாக வர்த்தகங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டில் மில்லியன் கணக்கானோர் வேலைகளை இழந்துள்ளனர். இவ்வாண்டு முதல் காலாண்டில் அமெரிக்கப் பொருளியல் பெரிதும் சரிவு கண்டது. இரண்டாம் காலாண்டில் அந்த நிலை மேலும் மோசமடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது