முதலாவது கடற்கரும்புலிகளின் தாக்குதல் 10.07.1990…

breaking
எடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990….!
பலர் கருதுவது போல எமது வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழத் தாயகம் அல்ல. பழமையும், பெருமையும், செழுமையும் கொண்ட தமிழீழக் கடலும் தமிழர் தாயகம் தான். எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை எமது கடலிற்கும் முக்கிய பங்குண்டு. விநியோகங்களும், போக்குவரத்திற்கும், வெளி உலகத் தொடர்பிற்கும் இக்கடலே பிரதான பாதையாக இருந்துவருகின்றது. இதை நன்கு அறிந்த சிங்கள அரசு கடற்பயனங்களைத் தடுத்து விடுதலைப் போராட்டத்தை நசுக்கத் திட்டமிட்டது. அதன் பிரகாரம் 1984ம் ஆண்டு திரு.லலித் அத்துலத்முதலி பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற பின் , இந்தக் கடல் எமதும் எமது மக்களினதும் பாவனையிலிருந்து தடைசெய்யப்பட்டது. ‘கடல் கண்காணிப்பு வலையம்’ என்ற பெயரில் தமிழீழக் கடல் சிங்களக் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தக் கண்காணிப்பு வலையத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தமிழக் கடலில் நிரந்தரமாகச் சில கப்பல்கள் நங்கூரமிட்டன. இவை தாய்க்கபல்கள் அல்லது கட்டளைக் கப்பல்கள் என அழைக்கப்பட்டன. சாதாரண சரக்குக் கப்பல்களைக் கடற் கண்காணிப்புக்கு ஏற்றபடி சிறு மாற்றங்களை செய்து, சில சாதனங்களையும் பொருத்தி அவற்றைக் கட்டளைக்கப்பல்களாக சிங்கள அரசு மாற்றியுள்ளது. றேடார் சாதனங்களும், சிறுரக பீரங்கிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களின் பணி, கடலில் தமிழர்களின் படகுகள் எவையாவது தென்படுகின்றனவா என்பதை வேவு பார்ப்பதும் அப்படித் தென்பட்டால் அந்தச் செய்தியை கடற்படையின் அதிவேக விசைப்படகுகளுக்கு அறிவித்து குறித்த படகுகளை முழ்கடிப்பதுமாகும். இவ்விதம் இக்கட்டளைக் கப்பல்கள் தமிழீழக்கடலில் நங்கூரமிட்டபின், கடலில் பயணம் போன நூறுக்கும் மேற்ப்பட்ட விடுதலைப்புலிவீரர்கள் கடலிலே வீரச்சாவடைந்தனர். 14.04.1985 அன்று விடுதலைப்புலிகள் இயக்கம் கடலிலே தனது முதலாவது இழப்பைச் சந்தித்தது. அதில் 14 விடுதலைப்புலிகள் வீரச்சாவடைந்தனர். அத்துடன் பல நூற்றுக்கணக்கான மீனவர்களும், பிரயாணம் செய்த மக்களும் கடலிலே பலியானார்கள். இந்த இழப்புக்களுக்கெல்லாம் யாழ் குடாநாட்டைச் சூழவுள்ள கடலில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கட்டளைக் கப்பல்களே மூலகாரணியாகும். “அபித்தா”, “எடித்தாரா” என்று பெயர் சூட்டப்பட்ட இந்த இரண்டு கப்பல்களில் ஒன்று காங்கேசன்துறைக்கும், பருத்தித்துறைக்கும் இடையில் உள்ள கடலில் நிறுத்தப்பட்டிருக்கும். மற்றையது வெற்றிலைக்கேணிக்கு நேரே நிறுத்தப்பட்டிருக்கும். இந்த இரண்டு கப்பல்களையும் அப்புறப்படுத்தாவிட்டால் தொடர்ந்தும் விடுதலைப்புலிவீரர்களை இழக்க நேரிடும் என்பதுடன், போராட்டப் பணிகளும் பெருத்த சிரமங்களையும் தடைகளையும் தடைகளையும் எதிர்கொள்ளும். ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருக்கும் சிறிய படகுகளின் உதவியுடன் இக்கட்டளைக் கப்பல்களை அடித்து விரட்ட முடியாது. எனவேதான் கரும்புலித் தாக்குதல்கள் மூலம் அந்த, “கடல் திமிங்கிலங்களை” அகற்ற விடுதலைப்புலிகள் தீர்மானித்தனர். 10.07.1990 அன்று, வடமராட்சிக் கடலில் நங்கூரமிட்டிருந்த “எடித்தாரா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் மீது, ஒரு கரும்புலித்தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில்  மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகிய  கரும்புலிகள்  பங்கேற்று கட்டளைகப்பலுக்கு சேதத்தை ஏற்ப்படுத்தி  வீரச்சாவடைந்தனர் வெளியீடு – உயிராயுதம் பாகம் 01

 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”