பெரும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை

breaking
இலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டு மக்களுக்கு உடனடியாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்யவில்லை என்றால் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டால் அதன் பொறுப்பை சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என சங்கத்தின் செயலாளர் சேனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழு வாரத்திற்கு இரண்டு முறை கூடி கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்மானம் எடுத்த போதிலும் தற்போது மாதம் ஒரு முறையே இந்த குழு கூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குழுவில் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர், பாதுகாப்பு பிரிவு, அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட குழுவினர் இணைந்து கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். தொற்று நோய் பிரிவு வெளியிடும் கருத்திற்கமைய மாதத்திற்கு 68 ஆயிரம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற போதிலும் நாள் ஒன்று 1000 - 1500 PCR பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.